Published:Updated:

அவள் விகடன் புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 11 - பரிசு ரூ.5000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

- லத்திகா சுகுமார்

அவள் விகடன் புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 11 - பரிசு ரூ.5000

- லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்ட இருக்கின்றன. அந்த வரிசையில் இதோ... இன்னொரு போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், சமையல், வீட்டு வேலைகள், அலுவலக வேலை, குடும்பம் என எல்லாவற்றிலிருந்தும் ஒருநாள் உங்களுக்கு லீவு கொடுத்தால் அந்த ஒருநாளை உங்களுக்கே உங்களுக்காக எப்படி அமைத்துக்கொள்வீர்கள்? ‘நச்’சென இரண்டே வரிகளில் சொல்லுங்கள். சரியான விடையுடன் டிப்ஸ் மற்றும் `நச்' வரிகளை எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

அவள் விகடன் புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 11 - பரிசு ரூ.5000

1. செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இப்போது நீர்மட்டம் குறைவாக உள்ளது. ஆனால், கோடை மழை காரணமாக ஒவ்வொரு நாளும் இந்த நீர் மட்டம் இரட்டிப்பாகிறது. நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்ப

60 நாள்கள் ஆகும். நீர்த்தேக்கம் பாதி நிரம்பிய உடனே திறந்துவிடலாம் என அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். அது என்றைக்கு நடக்கும்?

2. மாயாண்டி குடும்பத்தாரில் பெற்றோரும் ஆறு மகன்களும் உள்ளனர். மகன்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு சகோதரி இருக்கிறார். குடும்பத்தில் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர்?

3. எத்தனை சதுரங்கள் உள்ளன?

குறிப்பு: பெரிய சதுரத்தை மறந்துவிடாதீர்கள்!

அவள் விகடன் புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 11 - பரிசு ரூ.5000

4. நீங்கள் பேருந்தை இயக்கத் தொடங்குகிறீர்கள். பேருந்து புறப்படும்போது பயணிகள் எவரும் இல்லை.

முதல் நிறுத்தத்தில் இரண்டு பேர் ஏறுகிறார்கள். இரண்டாவது நிறுத்தத்தில் எட்டு பேர் ஏறி, ஒருவர் இறங்குகிறார். மூன்றாவது நிறுத்தத்தில் மூன்று பேர் இறங்குகிறார்கள், ஐந்து பேர் ஏறுகிறார்கள். பஸ்ஸின் நிறம் மஞ்சள், பஸ் டிரைவரின் தலைமுடி என்ன நிறம்?

புதிர்ப்போட்டி - 10 முடிவுகள்

விடைகள்:

1. எந்தப் பக்கம்?

உங்களுக்கு வலது பக்கம்தான் இந்தப் பேருந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்த விடைக்குக் காரணம், நாம் காணும் காட்சியில் கதவு இல்லை. அது அந்தப் பக்கம் இருப்பதாகக் கொண்டால் பேருந்து வலது பக்கம் பயணமாகிறது.

2. ஆங்கில வார்த்தை விளையாட்டு

1. LOCK — PIANO > Key

2. TREE — CAR > Trunk

3. SCHOOL — EYE > Pupil (Exam என்பதும் சரியான விடையே)

4. RIVER — MONEY > Bank (Flow என்பதும் சரியான விடையே)

5. BED — PAPER > Sheet

6. ARMY — WATER > Tank

7. EGYPTIAN — MOTHER > Mummy

3. எது வட்டம்?

வட்டத்துக்குள் ஒரு வட்டம் போல காட்சியளிப்பது உண்மையிலேயே வட்டம்தான். அதன் விட்டம் அனைத்து இடங்களிலும் சமமாகவே உள்ளது. நம்பிக்கை இல்லாவிட்டால் காம்பஸ் கொண்டு அளந்து பாருங்கள். வரைந்ததில் பிழையில்லை. ஆனால், நாம் கண்டதில் காட்சிப்பிழை உள்ளது.

சரியான விடையுடன், `எப்போது மனம்விட்டுச் சிரித்தீர்கள், எதற்கு?’ - வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. வசந்தா கோபாலன், சென்னை-47

கிராமத்திலிருந்து வந்திருந்த எட்டு வயது உறவுக்காரச் சிறுமிக்கு இணையம் பற்றி சொல்லிக்கொடுக்க யூடியூப், கூகுள் என்று அரை மணி நேரம் முயற்சி செய்த பின்னும் மொபைலில் எதுவும் வரவில்லை. பக்கத்தில் இருந்த சிறுமி சொன்னாள்... ‘முதலில் நெட் கனெக்‌ஷனை ஆன் செய்யுங்க’ - என்னையும் மீறி சிரித்தேன்.

2. இரா.ஜயலட்சுமி, சென்னை-125

அன்று பல்துலக்கிவிட்டு, பாத்ரூமில் யாரோ இருந்ததால் பிரஷ்ஷை பாத்ரூமுக்கு அருகில் இருந்த டிரஸ்ஸிங் டேபிளில், சீப்புடன் வைத்துவிட்டுச் சென்றுவிட்டேன். சிறிது நேரத்தில், வெளியே கிளம்ப வேண்டிய அவசரத்தில் வந்து தலைசீவியபோது, `முடி ஏன் இவ்ளோ சிக்காயிருக்கு' என்று பார்த்தால்... டூத் பிரஷ் தலையில் மாட்டியிருந்தது. கண்ணாடியைப் பார்த்து `போடி அசடு' என்று சிரித்துவிட்டேன்.

3. மல்லிகா அன்பழகன், சென்னை-78

பேருந்தில் நடத்துநரிடம் 200 ரூபாய்க்குச் சில்லறை வாங்கிக்கொண்டு இறங்கியபோது எண்ணிப்பார்த்தேன். 20 ரூபாய் குறைந்தது. சிரித்தேன். காரணம், போனவாரம் மளிகைக் கடையில் பாக்கி பணத்தைப் பெற்றபோது 20 ரூபாய் அதிகமாக இருந்ததைத் திருப்பித் தரவில்லை நான்.

4. எஸ்.சரஸ்வதி, திருச்சி-2

என் பேரனிடம், ‘பால் சட்டியில் விழுந்த இரண்டு தவளைகளில் ஒன்று மேலேறி சென்றுவிட்டது. இன்னொன்று கால்களை உதைத்துக்கொண்டே இருந்தது. அடுத்து என்னவாகும்?’ என்றேன். அவன் ‘மில்க் ஷேக் ஆகும்’ என்றான். மனம்விட்டுச் சிரித்தேன்.

5.சந்த்யா அகிலாண்டேஸ்வரி, சென்னை-47

ஐந்து வயது பேத்தி கேட்டாள், `ஆற்றில் கல்லைப் போட்டால் ஏன் காணாமல் போகுது?', `கல் கனமான பொருள் அதனால் தண்ணிக்குள்ளே போயிடும்.'

`நோ பாட்டி... அதுக்கு நீச்சல் தெரியாது. அதனாலேதான்' என்றாள். மழலையான அந்தப் பதில் கேட்டு மனம்விட்டுச் சிரித்தேன்.

6. மீனலோசனி, சென்னை-92

என் மூன்று வயதுப் பேரனுக்கு ஒருநாள் ஆம்புலன்ஸ் பற்றி சொல்லிக்கொடுத்தேன். மறுநாள் கீழே விழுந்து ஆழ ஆரம்பித்தவன், சட்டென்று அழுகையை நிறுத்தி, ‘ஆம்புலன்ஸைக் கூப்பிடுங்க... ஆபத்து’ என்றான். ‘கொல்’லென்று சிரித்த தருணம் அது.

7. என்.கோமதி, நெல்லை-7

ஐந்து வருடங்களுக்கு முன்பு, முதன் முதலாக என் பேரனுக்கு ரேங்க் கார்டு வழங்கப்பட்டபோது, `இதை வீட்டுல காட்டணும், இங்கதான் சைன் போடணும்' என்றிருக்கிறார் மிஸ். வீட்டில் எங்கள் பேரன், `சைன்னா என்ன?' என்று கேட்க, `நம்ம பேருதான்...' என்றோம் நாங்கள் எதற்காகக் கேட்கிறான் என்று தெரியாமல். அவன் `சைன்' என்பதையும் ஒரு ஹோம்வொர்க் என்று நினைத்து, தன் பெயரை ரேங்க் கார்டில் மிஸ் குறிப்பிட்ட இடத்தில் பென்சிலில் எழுதிக்கொண்டு சென்றுவிட்டான். அவன் மிஸ் இதை என்னிடம் சொன்னபோது வாய்விட்டு சிரித்துவிட்டேன்.

8. எஸ்.ராஜலட்சுமி, சென்னை-23

கடந்த தேர்தலில் எங்கள் தொகுதியில் `சும்மா ஆசைக்காக' தேர்தலில் நின்ற சுயேச்சை வேட்பாளர் ஒருவர், `நான் ஜெயிச்சுட்டா நம்ம தொகுதியில ரோடு மட்டுமா போடுவோம், ஏர்போர்ட்கூட கட்டுவோம்...' என்று அள்ளிவிட்டபடியே சென்றுகொண்டிருந்தார். டெபாசிட்டே வாங்க முடியாத அவர் அள்ளித் தந்த வாக்குறுதிகளை, ஏதோ காமெடி ஷோபோல சிரித்தபடியே கேட்டோம்.

9. அமுதா கிருஷ்ணன், வில்லிபுத்தூர்

லாக்டௌனில், வொர்க் ஃப்ரம் ஹோம் ஆன்லைன் மீட்டிங்குகளில் என் தம்பி சொன்ன ‘யெஸ் சார், நோ சார், டூயிங் சார்...’களை தினமும் கேட்ட தம்பியின் பையன் சொன்னான்... ‘நானும் எப்படா ஸ்கூல் முடிச்சு ஆபீஸ் போவேன்னு இருக்குப்பா. ஹோம்வொர்க்லாம் செய்ய வேண்டாம். யெஸ், நோ, டூயிங்னு இந்த டி-வேர்ட்ஸை மட்டும் படிச்சுட்டுப் போனா போதும் இல்லப்பா?!’ வீடே சிரித்தது!

10. எஸ்.மகேஸ்வரி தர், ஆத்தூர், சேலம்

பேரனுடன் மாடியிலிருந்து இறங்கியதுபோது மூன்று படிக்கட்டுகள் மீதமிருந்தன. `பாட்டி... ஒன் டூ த்ரீ சொல்லுங்க. யார் முதலில் குதிப்பது என்று பார்க்கலாம்' என்றான். கீழே குதித்தால் அவனுக்கு அடிபடுமா என்கிற நினைப்பில் ‘ஒன் டூ’வுடன் நிறுத்திக்கொண்டேன். `என்ன பாட்டி டூக்கு மேலே தெரியாதா... த்ரீ' என்று சொல்லி அவன் குதித்த தருணம், பதைக்க வைத்து சிரித்த தருணம்.