Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 37 - பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

லத்திகா சுகுமார்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 37 - பரிசு ரூ.5,000

லத்திகா சுகுமார்

Published:Updated:
புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
புதிர்ப் போட்டி

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், `பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகும் செய்திகள் அடிக்கடி வெளியில் வந்தபடியே உள்ளன. எச்சரிக்கையாக இருப்பது எப்படி?' -

‘நச்’ சென்று சில வரிகளில் பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

விடுகதைகளுக்கு விடை என்ன?

இங்கே 10 விடுகதைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. விடைகளைக் கண்டுபிடித்து கோடிட்ட இடத்தில் நிரப்புங்கள்.

1. நான்கு மூலை சதுக்கம்; அதில் ஐம்பது பேர் அடக்கம். அது என்ன?

2. ஒளி கொடுக்கும் - விளக்கு அல்ல; வெப்பம் கொடுக்கும் - அடுப்பு அல்ல; ஜொலிக்கும் - தங்கம் அல்ல... அது என்ன?

3. வேலியில் படர்ந்திருக்கும், வெள்ளைப்பூ பூத்திருக்கும், பச்சைக் காயிருக்கும், பவளம் போல் பழுத்திருக்கும்... அது என்ன?

4. காலைக் கடிக்கும் செருப்புமல்ல; காவல் காக்கும் நாயுமல்ல. அது என்ன?

5. மஞ்சள் பெட்டிக்குள் கறுப்பு முத்துகள். அவை என்ன?

6. நடைக்கு உவமை; நளனுக்குத் தூது. அது என்ன?

7. இடி இடிக்கும், மின்னல் வெட்டும்... மழை மட்டும் வராது.

அது என்ன?

8. இதயம் போல் துடிப்பிருக்கும்; இரவு பகல் விழித்திருக்கும்.

அது என்ன?

9. கூட்டுக்குள்ளே குடியிருக்கும் - குருவியும் அல்ல; பாய்ந்து செல்லும் - புலியும் அல்ல; எதிரியைத் துளைக்கும் - துப்பாக்கியும் அல்ல...

அது என்ன?

10. ஓயாமல் இரையும் - இயந்திரமும் அல்ல; உருண்டோடி வரும் - பந்தும் அல்ல. அது என்ன?

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 37 - பரிசு ரூ.5,000
புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 37 - பரிசு ரூ.5,000

சரியான விடையுடன், மின்கட்டணம், பட்டா, ரேஷன் கடை, ஆதார் பதிவு போன்ற விஷயங்களுக்காக அரசு அலுவலகங்களில் உங்களுடைய அனுபவம்... - நச் வரிகள் எழுதி 500 பரிசு பெறும் 10 பேர்...

1. பானு பெரியதம்பி, சேலம்-30

ஆதார் கார்டு கட்டாயம் என்பதால் அதைப் பதிவு செய்ய அருகில் இருந்த அலுவலகத்துக்குச் சென்றபோது, நீண்ட க்யூ இருந்ததால், மறுநாள் காலையில் சென்றோம். அப்போது 20 பேர் வரிசையில் இருந்ததால் என் கணவர் அருகிலிருந்த மரத்தடியில் அமர, நான் வரிசையில் நின்றேன். இதைக் கவனித்த அங்கிருந்த அதிகாரி, மூத்த குடிமக்கள் என்பதால் எங்களை முதலில் அழைத்தது மனத்தைத் தொட்டது.

2. கே.எம்.கிரிஜா, மதுரை-4

ஆதார் அட்டையில் என் கணவர் போன் நம்பர் இருந்தது. என் கணவர் இறந்துவிட்டார். அவர் போனும் ரிப்பேராகிவிட்டது. நான் புதிய போன் வாங்கி அந்த எண்ணை அதில் மாற்றுவதற்காக இ-சேவை மையம் இருக்கும் கலெக்டர் ஆபீஸ் போய் அங்கு காத்திருந்தேன். கடைசியில் நாங்கள் குடியிருக்கும் பகுதியான திருப்பரங்குன்றம் தாலுகா ஆபீஸ் போகச் சொன்னார்கள். அங்கு சென்றால் அங்கும் பதிவு செய்யவில்லை. முடிவில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் தபால் ஆபீஸில் ஐம்பது ரூபாய் கொடுத்து ஐந்தே நிமிடங்களில் பதிந்தேன்.

3. நா.பத்மாவதி, நாமக்கல்

அரசு இயந்திரங்கள் மெதுவாகத்தான் இயங்கும் என்பதுபோல மேற்கண்ட அரசு அலுவலகங்களில் சர்வர் எப்போதும் ‘ஸ்லோ’ என்கிற பதிலையே அதிகம் கேட்கிறோம்.

4. சி.வசந்தி, அரூர்

`இன்று போய் நாளை வா’ என்ற ராமாயணத்தின் புகழ்பெற்ற வாசகம் நினைவுக்கு வரும் இடம். நடந்து நடந்து செருப்பு தேய்ந்து அதன் பிறகுதான் ஒவ்வொன்றாகக் கிடைக்கும்.

5. எஸ்.மரகதம், திருச்சி-12

ரேஷன் கடை செல்லும்போது கைரேகை விழாமல் பொருள்களை வாங்க முடிவதில்லை. குடும்பத்தில் முக்கியமானவர் வர வேண்டும் என்கிறார்கள். முதியோர் எப்படி வர முடியும்? இதுகுறித்து கடைக் காரரிடம் கேட்டதற்கு, `அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்’ என்கிறார்கள். இதற்கு அரசு ஒரு நல்ல முடிவு எடுக்குமா?

6. வி.செல்வரதி, மதுரை-3

நான் எனது பூர்வீகச் சொத்தை என்னுடைய அம்மா பெயரில் இருந்து என் பெயருக்கு மாற்ற கடந்த இரண்டு ஆண்டுகளாக அலைந்துகொண்டிருக் கிறேன். இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என்று சொல்லியே அலையவிடுகிறார்கள்.

7. சந்திரா இராஜசேகரன், திருச்செந்தூர்

`பட்டா எப்படி சார் வாங்கணும்... அதற்கு என்னவெல்லாம் தேவை...’ என்று தாலுகா அலுவலரிடம் கேட்டதற்கு, ‘சொத்தை எப்படி வாங்கினீங்க... யார்கிட்டே கேட்டு வாங்கினீங்க...’ என்று கேள்வி கேட்க... நான் திக்குமுக்காடித்தான் போனேன்.

8. ஏ.சுகுணா, சேலம்-3

பிரத்யேக ஒப்பனையுடன் ஆதார் பதிவு செய்யச் சென்றேன். டோக்கன் தந்து மூன்று மணி நேரம் காக்க வைத்தனர். பிறகு, என் முறை வந்தபோது ஊழியர் ‘டீ’ குடிக்கச் சென்றார். ‘இணையம் வேலை செய்யவில்லை’ என்றார். பல்வேறு குளறுபடிகள். இறுதியில் `லகலகலகலக’ ஜோதிகா போல ஆன பிறகே போட்டோ எடுத்தனர்.

9. கே.விஷ்மிதா, திருநின்றவூர்

பொறுமை, சகிப்புத்தன்மை இந்த இரண்டையும் கற்றுத்தந்தது ரேஷன் கடை. சர்க்கரை, பருப்பு, ஆயில் இந்த மூன்றையும் வாங்க மூன்று முறை செல்ல வேண்டும். அங்கு தள்ளாத வயதிலும் பொருள்கள் வாங்க வரும் முதியவர்களைப் பார்த்து உழைக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டேன்.

10. எம்.தவமணி, லாலாப்பேட்டை

புதிதாகக் கட்டிய வீட்டுக்கு மாடிக்கு தனி மின் இணைப்பு வாங்க இரண்டு வருடங்கள் அலைந்தும் ஏதேதோ காரணம் காட்டி இழுத்தடிக்கப்பட்டோம். காரணம், அவர்கள் எதிர்பார்த்த லஞ்சம் தராததுதான். சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி (ஜெ.இ) மாற்றலாகி சென்ற பின் புது அதிகாரி வந்து சில வாரங்களில் இணைப்பைத் தந்து ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism