ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் கிளினிக்

கேள்வி-பதில்

எனது பட்ஜெட்டான 5 லட்ச ரூபாயில் கிடைக்கக் கூடிய சிறந்த 5 சீட்டர் மற்றும் 7 சீட் கார்கள் எவை? ரெனோ ட்ரைபர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதன் பர்ஃபாமன்ஸ் எப்படி இருக்கிறது?

- ஹஷ்வந்த், இமெயில்.

உங்கள் பட்ஜெட்டில் கிடைக்கக் கூடிய ஒரே 7 சீட்டர் மாருதி சுஸூகி ஈக்கோதான். இது BS-6 விதிகளுக்கு அப்டேட் ஆகியிருக்கிறது என்றாலும், கமர்ஷியல் பயன்பாட்டுக்கான வாகனமாகவே ஈக்கோ அறியப்படுகிறது. எனவே 5 சீட்டர் வாகனத்தைப் பொறுத்தவரை, ரெனோ க்விட் நல்ல சாய்ஸாக இருக்கும். இதன் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் BS-6 அப்டேட், தொடர்ச்சியாக வந்தன.

மோட்டார் கிளினிக்

உங்கள் பட்ஜெட்டை நீங்கள் அதிகப்படுத்தினால் மட்டுமே, போதுமான வசதிகள் கொண்ட ட்ரைபரை வாங்க முடியும். நல்ல மைலேஜ் கிடைத்தாலும், ஃபுல் லோடில் இங்கே பவர் போதவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளதால், புதிய 1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை ட்ரைபரில் பொருத்த முடிவெடுத்துள்ளது ரெனோ. நீங்கள் இதற்காகக்கூடக் காத்திருக்கலாம்.

மோட்டார் கிளினிக்

நான் சமீபத்தில் வாங்கிய யூனிகார்ன் பைக்கின் ஒயரிங்கை, எலி கடித்துக் குதறிவிட்டது. இதை நான் பைக்கின் இன்சூரன்ஸில் க்ளெய்ம் செய்யலாமா? எனக்கான தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.

- ராமச்சந்திரன்.சி, இமெயில்.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது, வாகனத்தின் தேய்மானத்துக்குக் கீழேதான் வரும். எனவே, ஒயரிங்கைச் சரிசெய்வதற்காக க்ளெய்ம் கிடைப்பது கடினம்தான். தவிர, பெரும்பாலானோர் Comprehensive/Third Party வகை இன்சூரன்ஸ் மட்டுமே வைத்திருப்பதால், அதைக் கொண்டு மட்டுமே க்ளெய்ம் வாங்க முடியாது. ஆனால் உங்கள் தரப்பு நியாயம் நிரூபிக்கப்பட்டால், எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒருவேளை, இதனுடன் Bumper To Bumper அல்லது Zero Depreciation போன்ற Add-on சேவைகளை நீங்கள் கூடுதலாக வாங்கியிருந்தால், க்ளெய்ம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதுவுமே இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து வரும் Checking Inspector/Survivor கொடுக்கும் சான்றிதழைப் பொருத்தே அமையும்.

நான் புதிதாகக் கார் வாங்கத் தீர்மானித்துள்ளேன். எனது பட்ஜெட் 8 லட்ச ரூபாய். அது 5 பேருக்கான இடவசதியைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன், மைலேஜ் - ரீசேல் மதிப்பு ஆகியவற்றிலும் சிறப்பாக இருப்பது நலம். எந்த காரை வாங்கலாம்?

- நவீன் குணசேகரன்,

இமெயில்.

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, மாருதி சுஸூகி பெலினோ நல்ல சாய்ஸாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான இது, 5 பேருக்கான இடவசதி - சிறப்பான மைலேஜ் - நல்ல ரீசேல் மதிப்பு ஆகியவற்றைத் தன்வசம் கொண்டுள்ளது.

இதை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டு முடிவெடுக்கவும். இதே தயாரிப்பில் சிறப்பான வாரன்ட்டி வேண்டுமென்றால், டொயோட்டா கிளான்ஸாவைப் பார்க்கலாம். ஒருவேளை காம்பேக்ட் செடானுக்குப் போகும் முடிவு இருந்தால், இதே நிறுவனத்தின் டிசையரை நீங்கள் பரிசீலிக்கலாம்.

எனக்கு ஹோண்டாவின் கார்கள் மிகவும் பிடிக்கும். ஜாஸ், WR-V, CR-V, சிட்டி ஆகிய கார்களில் BS-VI

மாற்றம் நிகழ்ந்துள்ளதா?

- ராஜேஷ் கண்ணன்,

இமெயில்.

நீங்கள் குறிப்பிட்ட கார்களில், WR-V காரின் BS-6 மாடலை மட்டும் களமிறக்கி இருக்கிறது ஹோண்டா. ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தில் வந்திருக்கும் இதை, தற்போது பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வாங்க முடியும்.

மோட்டார் கிளினிக்

CR-V ன் BS-6 மாடல் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இந்த நிறுவனத்திடமிருந்து வரவில்லை. அடுத்த தலைமுறை ஜாஸை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முடிவில் ஹோண்டா இல்லை. எனவே , இப்போது விற்பனை செய்யப்படும் மாடலே சில அப்டேட்களுடன் தொடரும். மேலும், புதிய தலைமுறை சிட்டியையும், இந்த நிறுவனம் நம் நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. என்றாலும், தற்போதைய மாடலும் BS-6 அவதாரத்தில் கிடைப்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். CR-V அதிக எண்ணிக்கையில் விற்பனையாகாத மாடல் என்பதால், அதன் BS-6 வெர்ஷன் வர கொஞ்சம் நாள்களாகலாம்.

நான் 1997 மாடல் மாருதி சுஸூகி எஸ்டீம் காரைப் பயன்படுத்தி வருகிறேன். அது நல்ல கண்டிஷனில் இருந்தாலும், அதை எக்ஸ்சேஞ்ஜில் கொடுத்துவிட முடிவு செய்துள்ளேன். இதற்குப் பதில் வேகன்-ஆர் வாங்க விரும்புகிறேன். எனது முடிவு சரியானதா?

- ராஜ்சுந்தர்.எஸ், புனே.

பழைய காரைக் கொடுத்துவிட்டு, புதிய காரை வாங்குவது நல்ல முடிவுதான். ஆனால் செடானுக்கு மாற்றாக ஹேட்ச்பேக் இருக்குமா என்பதுதான் கேள்வியே! எஸ்டீமுடன் ஒப்பிட்டால், வேகன்-ஆர் காரில் அதிக ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் உண்டு.. ஆனால் இரண்டிலுமே 4 பேர்தான் வசதியாக உட்கார முடியும். தவிர பூட் ஸ்பேஸில் நீங்கள் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யவேண்டி இருக்கும். வேகன்-ஆரின் 1,200 சிசி மாடல், உங்கள் எஸ்டீமுக்கு நல்ல அப்கிரேடாக இருக்கும்.

மோட்டார் கிளினிக்

நான் தற்போது ஸ்ப்ளெண்டர் ப்ரோ பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். தினசரி பணி நிமித்தமாக, அதில் 80-120 கி.மீ தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இப்போது முதுகுவலி வந்திருப்பதால், புதிதாக வேறு பைக் வாங்கலாம் என முடிவெடுத்துள்ளேன். பட்ஜெட் மற்றும் மைலேஜ் ஒரு பொருட்டல்ல. சொகுசான ஓட்டுதல் அனுபவமே முக்கியம். ஹோண்டா SP 125 எப்படி இருக்கும்?

150சிசி பைக் என்றாலும் பரவாயில்லை.

- அரவிந்த் ராஜ், சிதம்பரம்.

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, 110சிசி செக்மென்ட்டில் பிளாட்டினா H-Gear 110-யையும், 125சிசி செக்மென்ட்டில் நீங்கள் குறிப்பிட்ட SP 125 பைக்கையும், 150சிசி செக்மென்ட்டில் யூனிகார்ன் 160 அல்லது பல்ஸர் 150 ஆகிய பைக்குகளைப் பரிசீலிக்கலாம். இதில் அதிக வசதிகளுடன் கூடிய லேட்டஸ்ட் மாடலாக SP 125 இருந்தால், பழைய மாடலாக யூனிகார்ன் உள்ளது. சொகுசு மற்றும் மைலேஜ் உங்கள் தேவை என்றால் பிளாட்டினாவையும், கொடுக்கும் காசுக்கான மதிப்புமிக்க தயாரிப்பு என்றால் பல்ஸரையும் டிக் அடிக்கலாம். ஒருவேளை க்ரூஸர் பைக் பிடிக்கும் என்றால், அவென்ஜர் 160 ஸ்ட்ரீட் பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்யவும்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com