பிரீமியம் ஸ்டோரி

ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஹோண்டா அமேஸ் கார்களை நான் பயன்படுத்தி வருகிறேன். 12-15 லட்ச ரூபாயில், புதிதாக டீசல் கார் வாங்கத் தீர்மானித்துள்ளேன். சிட்டி, வெர்னா, செல்ட்டோஸ் ஆகியவற்றில் எதை வாங்கலாம்? வெர்னாவை மிகவும் பிடித்திருக்கிறது என்றாலும், அதன் பின்பக்க இடவசதி நன்றாக இல்லை. சிட்டி சிறப்பாக இருந்தாலும், அதன் இன்ஜின் சத்தம் மற்றும் கிளட்ச் ஆகியவை மைனஸ். செல்ட்டோஸின் பராமரிப்புச் செலவுகள் குறித்துச் சந்தேகம் இருக்கிறது. விலையும் அதிகமாகவே உள்ளது. அட்வைஸ் ப்ளீஸ்?

-ஜாஃப்ரின் இப்ராகிம், சென்னை.

ங்கள் செக்மென்ட் அடுத்த லெவலுக்குச் செல்வதால், அவற்றின் பராமரிப்புச் செலவுகள், நிச்சயம் முன்பைவிடச் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, கியா செல்ட்டோஸ் சரியான காராக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஏனெனில், இது BS-6 இன்ஜின்களைக் கொண்ட லேட்டஸ்ட் மாடலாக இருப்பதுடன், வசதிகள் மற்றும் தரத்திலும் சொல்லி அடிக்கிறது.

Honda Amaze car
Honda Amaze car

இதில் மொத்தம் 18 வேரியன்ட்கள் இருப்பதால், உங்கள் பட்ஜெட்டில் அடங்கும் வேரியன்ட்டைத் தேர்வு செய்யலாம். வெர்னா மற்றும் சிட்டி ஆகியவற்றின் அடுத்த தலைமுறை மாடல்களும் தற்போது தீவிரமாக டெஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. இரண்டாம் தலைமுறை க்ரெட்டா, அடுத்த ஆண்டில் அறிமுகமாகலாம்.

எனக்கு ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T

பைக் பிடித்திருக்கிறது. இந்த பைக்கின் பர்ஃபாமன்ஸ் மற்றும் கையாளுமை எப்படி இருக்கிறது?

-என்.ஜீவானந்தம், சென்னை.

ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 200T, எக்ஸ்ட்ரீம் மற்றும் எக்ஸ்பல்ஸ் கலந்து செய்த கலவை. அதாவது எக்ஸ்பல்ஸ் பைக்கின் ஃப்ரேமையும்... எக்ஸ்ட்ரீம் பைக்கின் பிரேக்ஸ் - வீல்கள் - டயர்கள் - சஸ்பென்ஷன் ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது.

மோட்டார் கிளினிக்

இப்படிப் புதுமையான காம்பினேஷனில் எக்ஸ்பல்ஸ் 200T இருந்தாலும், முன்னே சொன்ன அனைத்து பைக்குகளிலும் இருப்பது ஒரே 200சிசி இன்ஜின்தான். எனவே, இவற்றின் ஆன் ரோடு பர்ஃபாமன்ஸில் பெரிய வித்தியாசம் இல்லாவிட்டாலும், ஓட்டுதல் அனுபவத்தில் நிச்சயம் மாறுதல் தெரியும். அப்பாச்சி RTR 200 4V மற்றும் பல்ஸர் NS200 ஆகிய பைக்குகளையும் நீங்கள் பரிசிலிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் பயன்படுத்தும் இனோவா க்ரிஸ்டாவில், முன் பக்க க்ராஷ் கார்டு பொருத்தலாம் என முடிவெடுத்திருக்கிறேன். இதனால் காருக்கு என்ன சாதகம்? என்ன பாதகம்?

-பி.செல்வகுமார், இமெயில்.

கார்களில் பம்பருக்கு முன்பாக க்ராஷ் பார்கள் மாட்டப்படுவதற்கு, தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.

மோட்டார் கிளினிக்

இது காரின் முன்பக்க SubFrame-ன் உறுதித்தன்மையைப் பாதிப்பதற்கான வாய்ப்பிருப்பதால், க்ராஷ் கார்டு பொருத்துவது என்பது பாதுகாப்பைவிடப் பிரச்னையையே தரும். மேலும் லேட்டஸ்ட் கார்களில், காற்றுப்பை இயங்குவதற்குத் தேவையான சென்சார்கள், காரின் முன் பக்கத்திலேயே இடம்பெற்றுள்ளன. எனவே இதனை மறைக்கும் விதத்தில் பம்பரைப் பொறுத்தும்போது, தேவையான நேரத்தில் காற்றுப்பை உங்களுக்கு உதவாமல் போவதற்கான சாத்தியம் இருக்கிறது.

எலெக்ட்ரிக்தான் இப்போ ட்ரெண்டு. எனவே இப்போது புதிதாக கார் வாங்குவது சரியான முடிவாக இருக்குமா? தமிழ்நாட்டில் எப்போது எலெக்ட்ரிக் வாகனங்களை எதிர்பார்க்கலாம்?

-ஜி.ஆர்.சோழன்,ராணிப்பேட்டை.

த்திய அரசாங்கம் 2023 முதலாக எலெக்ட்ரிக் 3 வீலர்கள் (ஆட்டோ), 2025 முதலாக எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் (150 சிசிக்கு உட்பட்டவை), 2030-ல் எலெக்ட்ரிக் கார்கள் என்ற நீண்ட காலத் திட்டத்தின்படி இயங்கி வருகிறது. இதன் வெளிப்பாடாகவே ரிவோல்ட், ஏத்தர், ஒகினாவா, ஹூண்டாய் கோனா, டாடா டிகோர் EV, மஹிந்திரா வெரிட்டோ EV என வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

இதில் எது உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டுக்கு உகந்தபடி வருகிறதோ, அதை நீங்கள் தாராளமாகத் தேர்வு செய்யலாம். ஆனால் அதன் சர்வீஸ் சென்டர்கள், சார்ஜிங் ஸ்டேஷன்கள் ஆகியவை, வழக்கமான வாகனங்களுடன் ஒப்பிடும்போது (பெட்ரோல்/டீசல் பங்க் மற்றும் சர்வீஸ் சென்டர்கள்) அதிக எண்ணிக்கையில் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

யமஹா FZ-V3, ஹோண்டா யூனிகார்ன் ஆகியவை எனக்குப் பிடித்திருக்கின்றன. இதில் எது ஃபேமிலி பைக்?

-சதீஷ்ராஜா,இமெயில்.

நீங்கள் கூறிய இரண்டுமே 150சிசி பைக்ஸ்தான் என்றாலும், அவை வெவ்வேறுவிதமான மக்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டவை; இதில் FZ இளைஞர்களுக்கும், யூனிகார்ன் மிடில் ஏஜ் ஆண்களுக்கும் பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது.

Unicorn
Unicorn

ஆனால் சிங்கிள் பீஸ் சீட் மற்றும் ஹேண்டில்பார், ட்யூப்லெஸ் டயர்கள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் என இவற்றில் சில ஒற்றுமைகளும் இருப்பது முரண். இதில் உங்கள் தேவைகளை, யூனிகார்ன் நிறைவேற்றும் எனத் தோன்றுகிறது.

எலெக்ட்ரிக் சன்ரூப், பனோரமிக் சன்ரூஃப்... இவை இரண்டுக்கும் இடையே என்ன வித்தியாசம்?

-பாலு கார்த்திக், இமெயில்.

லெக்ட்ரிக் சன்ரூஃப், Moon Roof எனவும் அழைக்கப்படுகிறது. ஸ்டீல் ரூஃப் மற்றும் இன்டீரியர் லைனர் ஆகியவற்றுக்கு இடையே, ஒரு Glass பேனல் பொருத்தப்பட்டிருக்கும். பெரும்பாலும் முன்பக்க சீட் பகுதி வரை மட்டுமே இதன் நீளம்/அகலம் இருக்கும். இதன் காம்பேக்ட் Packaging காரணமாக, மிட்சைஸ் கார்களில் இந்த வகை சன்ரூஃபை அதிகமாகப் பார்க்க முடிகிறது.

இதுவே பனோரமிக் சன்ரூஃப் என்றால், அதுவே ரூஃப்பின் பெரும்பகுதியை ஆக்ரமித்திருக்கும். அதாவது டிரைவர் சீட் தொடங்கி, பின்பக்க சீட் வரை நீள்வது இதன் சிறப்பம்சம். இதனால் காருக்குத் தானாகவே ஒரு ரிச் லுக் வந்துவிடுவதுடன், கேபினை விசாலமாகக் காட்டவும் உதவுகிறது. இது பொருத்தப்படும் காரைப் பொறுத்து, ஒன்று அல்லது இரண்டு Glass பேனல்களைக் கொண்டிருக்கும். மேலும் சில கார்களில், கூடுதலாக Sun Shade-ம் இடம்பெற்றிருக்கும்.

புதிதாக பைக் வாங்க முடிவெடுத்திருக்கிறேன். எனது பட்ஜெட் 80,000 ரூபாய். அது அதிக மைலேஜ், சொகுசான சஸ்பென்ஷன், ஸ்டைலான டிசைன் ஆகியவற்றோடு இருக்க வேண்டும். தற்போதைய BS-4 வாகனத்தை வாங்குவது சரியாக இருக்குமா? சில காலம் காத்திருந்து BS-6 வாகனத்தை வாங்கலாமா?

-தினேஷ், இராசிபுரம்.

ங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, பஜாஜின் பிளாட்டினா 110 ES H-Gear மற்றும் டிஸ்கவர் 125 ஆகியவற்றில் ஒன்று, உங்களுக்கான சாய்ஸாக இருக்கும். 125சிசி செக்மென்ட்டின் டாப் செல்லிங் பைக்குகளான ஷைன் மற்றும் கிளாமர், சஸ்பென்ஷன் மற்றும் டயர் சைஸ் விஷயத்தில் பின்தங்கி விடுகின்றன.

பஜாஜி
பஜாஜி

பஜாஜின் இரு பைக்குகளிலும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அகலமான டயர்கள் இருப்பதுடன், பின்பக்கத்தில் கேஸ் ஷாக் அப்சார்பரையும் கொண்டுள்ளன. அடுத்த ஆண்டு ஏப்ரலில் அமலுக்கு வரவிருக்கும் BS-6 விதிகளால், அனைத்து வாகனங்களின் விலையும் ஏற்றம் காணுமே ஒழிய, குறைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. முன்னே சொன்ன பைக்குகளில், கார்புரேட்டருக்குப் பதில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - அதற்குத் தேவையான சென்ஸார்கள் இடம்பெறலாம். எனவே உங்களுக்குப் புதிய வாகனம் உடனடித் தேவை என்றால் இப்போதே வாங்கிவிடுங்கள். மற்றபடி காத்திருந்து வாங்கக்கூடிய சூழல் இருந்தால், அடுத்த ஆண்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய பைக்கை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு