என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

சமையல் சந்தேகங்கள் 10 : கரண்டி முட்டை... கோதுமை மாவு இனிப்பு தோசை... கரகர, மொறுமொறு வெங்காய பக்கோடா.

சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சமையல் சந்தேகங்கள்

சுகுன ரோஷிணி

சமையல் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் செஃப் தீனா

சித்ரா பவுர்ணமி நாளில் நீர்மோர் வைத்து சுவாமிக்குப் படைக்கிறார்கள். சுவையான நீர்மோர் தயாரிப்பது எப்படி?

- மாலினி சேகர், கன்னியாகுமரி

சமையல் சந்தேகங்கள் 10 : கரண்டி முட்டை... கோதுமை மாவு இனிப்பு தோசை... கரகர, மொறுமொறு வெங்காய பக்கோடா.

தேவையானவை: புளிப்பில்லாத தயிர் - அரை கப், நறுக்கிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, மல்லித்தழை - சிறிதளவு, எலுமிச்சைப் பழச்சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கடுகு - சிறிதளவு, எண்ணெய் - அரை டேபிள்ஸ்பூன்.

ஒரு பாத்திரத்தில், தயிரை நன்கு சிலுப்பி மோராகக் கடைந்துகொள்ளவும். அதில் இருக்கும் வெண்ணெய் பிரிந்தபிறகு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி மோருடன் சேர்க்க வேண்டும். எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்றாக அடித்துக்கொள்ளவும். இறுதியாக, எண்ணெயில் கடுகு சேர்த்துத் தாளித்து மோரில் கலக்கவும். வெயிலுக்கு இதமான நீர்மோர் ரெடி.

பலகார வகைகள் செய்யும்போது சமையல் எண்ணெய் பொங்கிப் பொங்கி வருவது ஏன்? அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

- கே.சிந்துஜா, கோயம்புத்தூர்

சமையல் சந்தேகங்கள் 10 : கரண்டி முட்டை... கோதுமை மாவு இனிப்பு தோசை... கரகர, மொறுமொறு வெங்காய பக்கோடா.

பலகாரம் செய்யும்போது எண்ணெய் பொங்கி வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலில் பொரிப்பதற்கு ஏற்ற சமையல் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். பாம் ஆயிலில் பலகார வகைகள் தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும். கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம், ரீஃபைண்டு சூரியகாந்தி ஆயில் ஒரு முறை மட்டும் பயன்படுத்த உகந்தது.

எண்ணெய் நன்கு சூடானதும் பொரிக்க வேண்டும். அதே நேரம் அதிக சூட்டையும் தவிர்க்க வேண்டும். கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை சீக்கிரமே சூடாகிப் புகையை உண்டு பண்ணும். எனவே, அதிகம் சூடாவதைத் தவிர்க்க வெப்பநிலையை ஏற்றியும் குறைத்தும் சரியான வெப்பத்தைத் தக்கவைக்க வேண்டும்.

பாத்திரத்தைக் கழுவ நாம் பயன்படுத்திய சோப், சோப் ஆயில் போன்றவை சரியாக அகற்றப்படவில்லை என்றாலும், அதில் இருக்கும் வேதிப்பொருள்களின் விளைவாகக்கூட நுரைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. பொரிக்கும் உணவுகளில் உள்ள அதிகப்படியான நீரும் காரணமாகலாம். ஏற்கெனவே பலமுறை பயன்படுத்திய எண்ணெயும் நுரைத்துப் பொங்கும். எனவே, ஒரே எண்ணெயைப் பயன்படுத்தாமல் புதிய எண்ணெய் மாற்ற வேண்டும். பாத்திரத்தின் அளவுக்கு ஏற்றவாறு எண்ணெய் சேர்க்க வேண்டும். அதிகமாக எண்ணெய் ஊற்றிப் பொரிக்கும்போது, எண்ணெய் பொங்கி, அடுப்பில் ஊற்றிவிடும். இது மிகவும் ஆபத்தானது.

வெங்காய பக்கோடாவை பலரும் விரும்பிச் சாப்பிடு கிறார்கள். வீட்டில் வெங்காய பக்கோடா தயாரிக்கும்போது தண்ணீர் எவ்வளவு சேர்க்க வேண்டும்?

- முத்துமாரி செல்வம், மரக்காணம்

சமையல் சந்தேகங்கள் 10 : கரண்டி முட்டை... கோதுமை மாவு இனிப்பு தோசை... கரகர, மொறுமொறு வெங்காய பக்கோடா.

வெங்காய பக்கோடா தயாரிக்கும்போது, வெங்காயத்தில் ஈரப்பதம் இருப்பதால் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒரு பங்கு கடலை மாவு, கால் பங்கு அரிசி மாவு சேர்த்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசறி எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். தண்ணீர் சேர்க்காமலேயே வெங்காயம் உள்ளிட்ட எல்லாம் மாவுடன் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கொள்ளும். சூடான எண்ணெயில் நாம் கலந்து வைத்துள்ள கலவையை அப்படியே போடாமல் சிறு சிறு துண்டுகளாக உதிர்த்துச் சேர்த்து வேகவிட வேண்டும். இப்படிச் செய்தால், வெங்காய பக்கோடா க்ரிஸ்பியாக இருக்கும்.

சில உணவகங்களில் ‘கரண்டி முட்டை' என்ற பெயரில் ஓர் உணவு கிடைக்கிறது. மிகவும் சுவையான அதை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

- என்.சிவகாமி, சென்னை-12

சமையல் சந்தேகங்கள் 10 : கரண்டி முட்டை... கோதுமை மாவு இனிப்பு தோசை... கரகர, மொறுமொறு வெங்காய பக்கோடா.

தேவையானவை: முட்டை - 3, சிறிய வெங்காயம் - 5 மிளகு சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 25 மில்லி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சிறிதளவு.

ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி வைத்துக்கொள்ளவும். நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அடித்துக்கொள்ளவும். அதில் மிளகு, சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும். அகலமான குழிக் கரண்டியைச் சூடாக்கி, அதில் பாதி அளவு இந்தக் கலவையை ஊற்றி வெந்தவுடன், புரட்டி மறுபடியும்

வேக விடவும். நன்றாகப் பந்து போல் வெந்தவுடன் எடுத்து விடவும். இதை மிதமான தீயில் 80 சதவிகித அளவு வேகவைத்தால் போதுமானது. இதுதான் கரண்டி முட்டை.

கோதுமை மாவில் இனிப்பு தோசை செய்வது எப்படி?

- எஸ்.ராதிகா, திருச்செந்தூர்

கோதுமை மாவில் பக்கோடா, அடை, இனிப்பு தோசை என நிறைய செய்ய முடியும்.

சமையல் சந்தேகங்கள் 10 : கரண்டி முட்டை... கோதுமை மாவு இனிப்பு தோசை... கரகர, மொறுமொறு வெங்காய பக்கோடா.

கோதுமை மாவு இனிப்பு தோசைக்குத் தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், வாழைப்பழம் - 5, எலுமிச்சைப் பழச்சாறு - கால் டீஸ்பூன், பேக்கிங் சோடா - சிறிதளவு, நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - சிறிதளவு, சுக்குத்தூள் - கால் டீஸ்பூன், நாட்டுச்சர்க்கரை - 6 டேபிள்ஸ்பூன், மிக்ஸ்டு டிரை ஃப்ரூட்ஸ் அண்டு நட்ஸ் - 2 டேபிள்ஸ்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: வாழைப்பழத்தை சிறுதுண்டுகளாக நறுக்கிப் பிசைந்து கொள்ளவும். இதில் கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரை, சிறிதளவு உப்பு சேர்க்கவும். பேக்கிங் சோடா, வாசனைக்காக ஏலக்காய்த்தூள், டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடைசியாக நெய் சேர்த்துப் பிசையவும் நெய்யை கடைசியில் தான் சேர்க்க வேண்டும் அப்போதுதான் நெய் வாசனையும் சுவையும் தூக்கலாக இருக்கும்.

இனிப்புப்பழ கோதுமை தோசைக்கு சைடிஷ் தேன் சிரப். அதாவது ‘ஹனி டிப்’ தயார் செய்ய வேண்டும். 5 டேபிள்ஸ்பூன், தேனில் கால் சிட்டிகை சுக்குத்தூளை நன்றாகக் கலந்து கொள்ளவும். பிறகு 3 துளி எலுமிச்சைப் பழச்சாறு விடவேண்டும். ‘ஹனி டிப்’ தயாரிக்கும்போது ஆரம்பத்திலேயே எலுமிச்சைச்சாறு விடக்கூடாது. அப்படிச் செய்தால் சுவை மாறிவிடும்.

தோசை வார்க்கும் விதம்: தோசைக் கல் சூடானதும் சிறிதளவு நெய் விட்டு, கலந்து வைத்துள்ள கோதுமை மாவை எடுத்து சாதாரண தோசை போல் இல்லாமல் கொஞ்சம் தடிமனான தோசையாக வார்க்கவும். அதன் மேல் உங்களுக்குப் பிடித்த நட்ஸ் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் மற்றும் தேவையெனில் வேர்க்கடலையும் சேர்க்கலாம். தேவைப்பட்டால் சிறிது சிறிதாக வெட்டிவைத்துள்ள மஞ்சள் வாழைப் பழத்தையும் அதன் மேல் நெய்யையும் சேர்த்து நன்கு வேகவிட்டு தோசையைத் திருப்பி விடவும்.

கோதுமை தோசையைத் திருப்பிப் போட்டவுடன் அதன் ஓரப் பகுதிகளில் எல்லாம் நன்றாக அமுக்கி விடவும். தோசையின் நடுப்பகுதியில் நட்ஸ், பழம் அதிகமாக இருப்பதால், நீங்கள் தோசையைத் திருப்பிவிட்டவுடன் அதன் ஓரப் பகுதியை மெதுவாக அழுத்தி வேகவைத்தால்தான் தோசை நன்றாக வேகும். அதன் பிறகு, ஒரு முள்கரண்டியை எடுத்து தோசையின் மேல் பகுதியில் ஆங்காங்கே குத்தி சிறுசிறு துளைகள் இடவும். இப்படிச் செய்தால் ஒரு பக்கம் மிருதுவாகவும் ஒரு பக்கம் க்ரிஸ்பியாகவும் சாப்பிடச் சுவையாக இருக்கும். இதன் மேல் மீண்டும் சிறிதளவு நெய் விட்டு, அதன் பிறகு நாம் தயார்செய்து வைத்துள்ள தேன் சிரப் ஊற்றிப் பரிமாறவும்.