Published:Updated:

சமையல் சந்தேகங்கள் - 9: வீட்டிலேயே செய்யலாம் சிறுதானிய லட்டு, ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ், நேந்திரம் சிப்ஸ்...

சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள்

- சுகுன ரோஷிணி

சமையல் சந்தேகங்கள் - 9: வீட்டிலேயே செய்யலாம் சிறுதானிய லட்டு, ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ், நேந்திரம் சிப்ஸ்...

- சுகுன ரோஷிணி

Published:Updated:
சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள்

சமையல் சந்தேகங்களுக்குப் பதில் சொல்கிறார் செஃப் பழனிமுருகன்.

சமையல் சந்தேகங்கள் - 9: வீட்டிலேயே செய்யலாம் சிறுதானிய லட்டு, ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ், நேந்திரம் சிப்ஸ்...

கருணைக்கிழங்கு உடலுக்கு நல்லதா? அதைச் சமைக்கும் போது அதிகமாக அரிக்கிறதே... அதைத் தவிர்க்க முடியுமா?

- மதுமிதா குமார், சென்னை-12

கருணைக்கிழங்கில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. மூலநோயைக் குணப்படுத்துவதில் தொடங்கி உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், பருமன், மலச்சிக்கல் எனப் பல பிரச்னைகளுக்கும் இது மருந்தாவதாகச் சொல்கிறார்கள். அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு இதைச் சேர்த்துக்கொள்ளவும்.

பழைய கிழங்காக இருந்தால் அரிக்காமல் இருக்கும். மேல் தோலை கீறிப் பார்த்து இதைக் கண்டுபிடிக்கலாம். உள்ளே சிவப்பாக இருந்தால் புதிது. அதுதான் கிடைத்தது என்றால் வாங்கி வீட்டில் வைத்து, இரண்டு மூன்று வாரங்களுக்குப் பிறகு, உபயோகிக்கலாம். சாதாரணமாகச் சமைத்துச் சாப்பிட்டால், அரிப்புத்தன்மை ஏற்படும். அதனால் கிழங்கை நன்றாக வேகவைத்துப் பின்பு தோலை உரித்து, புளி சேர்த்துச் சமைத்தால் அரிப்பு இருக்காது. அரிசி கழுவிய நீரில் கிழங்கை வேக வைத்துச் சமைத்தாலும் அரிப்பு மட்டுப்படும். தோல் நீக்கும்போது கையில் சிறிது புளித் தண்ணீர் தேய்த்துக் கொள்ளவும். கிழங்கை வேகவைக்கும்போதும் சிறிதளவு புளி சேர்க்கவும். புளி சேர்த்துச் சமைக்கும்போது கடைசியில் சிறிதளவு வெல்லம் (ஓர் அச்சு வெல்லம்) சேர்க்கலாம். கருணைக்கிழங்கு புளிப்புச் சுவையை அதிகம் ஈர்க்கும் தன்மை உடையது.

சமையல் சந்தேகங்கள் - 9: வீட்டிலேயே செய்யலாம் சிறுதானிய லட்டு, ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ், நேந்திரம் சிப்ஸ்...

நம் வீட்டுக்குத் தேவையான மஞ்சள்தூளை நாமே அரைத்துக்கொள்ள எந்த வகையான மஞ்சளைப் பயன்படுத்த வேண்டும்?

- ஆர்.சுந்தரி, திருச்சி-9

வீட்டிலேயே மஞ்சள்தூள் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், அதற்கு விரலி மஞ்சளைப் பயன்படுத்துவது நல்லது. அந்தக் காலத்தில் நிலத்தில் விளைந்த மஞ்சளை எடுத்து நன்கு காயவைத்து, அதில் விளக்கெண்ணெய் தடவி, ஒரு மண் சட்டியில் சேமித்து வைத்திருப்பார்கள். அவ்வப்போது தேவைப்படும்போது மஞ்சளை எடுத்து அம்மியில் அரைத்து சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால், தற்போது அதற்கெல்லாம் யாருக்கும் நேரமும் பொறுமையும் இல்லை என்பதால், அது சாத்தியமில்லை. விரலி மஞ்சளை வாங்கி, அதைக் கழுவி வெயிலில் நன்றாகக் காயவைத்து அரைத்து வைத்துக்கொள்வது நல்லது. இப்படி வீட்டிலேயே அரைத்துப் பயன்படுத்தும்போது பூச்சி வரும் வாய்ப்பு இல்லை.

சமையல் சந்தேகங்கள் - 9: வீட்டிலேயே செய்யலாம் சிறுதானிய லட்டு, ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ், நேந்திரம் சிப்ஸ்...
LUHUANFENG

அவசர சமையலுக்கு இஞ்சி, பூண்டு ஆகியவற்றைத் தோலுடன் பயன்படுத்தலாமா? சிலர் இஞ்சியைத் தோல் நீக்காமல் பயன்படுத்தினால், விஷமாகிவிடும் என்கிறார்கள். இது உண்மையா?

- எல்.சத்யா, மதுரை-1

சமையல் சந்தேகங்கள் - 9: வீட்டிலேயே செய்யலாம் சிறுதானிய லட்டு, ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ், நேந்திரம் சிப்ஸ்...
Arundhati Sathe

இஞ்சியின் தோல் நஞ்சு. இஞ்சியின் தோலை நீக்கிவிட்டுச் சமைப்பதுதான் நல்லது. இளம் இஞ்சியாக இருந்தால் நன்றாகக் கழுவி சுத்தம் செய்து சமைக்கப் பயன்படுத்தலாம். வெள்ளைப் பூண்டை தோல் நீக்கிவிட்டுப் பயன்படுத்துவது நல்லது. மெல்லிய தோல் என்றால் சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து, கழுவி எடுத்தால், அரைப்பதற்கு எளிதாக இருக்கும். பூண்டின் தோல் மென்மையாக இருந்தால், மேற்கூறிய முறையில் ஊறவைத்து தோலை நீக்கலாம்.

பல வகையான சிறுதானிய லட்டுகள் கடைகளில் விற்பனையாகின்றன. ஆனால், விலையோ அதிகமாக இருக்கிறது. சிறப்பான சிறுதானிய லட்டு ஒன்றின் செய்முறையைக் கூறுங்கள்.

- கார்த்திகா செல்வம், கடலூர்

கேழ்வரகு லட்டு தயாரிக்கத் தேவையானவை... கேழ்வரகு மாவு, வறுத்த நிலக்கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன், நாட்டுச்சர்க்கரை ஒன்றரை கப், நெய் தேவையான அளவு. கேழ்வரகு மாவை லேசாக வறுக்கவும். இப்போது எல்லா மாவுகளையும் ஒரே பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து ஏலக்காய்த்தூள், நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இதில் உருக்கிய நெய் சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாகப் பிடித்துவைத்தால் சுவையான கேழ்வரகு லட்டு தயார். தேவைப்பட்டால் முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு ஆகியவற்றை சிறு துண்டுகளாக உடைத்துச் சேர்க்கலாம். சுவையும் சத்தும் மிக்க லட்டு இது. கேழ்வரகுக்குப் பதிலாக கம்பு மாவு சேர்த்தும் இதே முறையில் செய்யலாம்.

சமையல் சந்தேகங்கள் - 9: வீட்டிலேயே செய்யலாம் சிறுதானிய லட்டு, ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ், நேந்திரம் சிப்ஸ்...

உருளைக்கிழங்கு ஃபிரெஞ்ச் ஃப்ரை செய்வது எப்படி?

- பிரியா கணேசன், திருநெல்வேலி-3

ஃபிரெஞ்சு ஃப்ரை செய்வதற்கு பெரிய சைஸ் உருளைக்கிழங்குகள்தான் சிறந்தவை. முளைவிடாத, தோலில் கறுப்புத் திட்டுகள் இல்லாத நல்ல கிழங்குகளை வாங்கிக் கொள்ளவும். கிழங்கைத் தோல் சீவி, அதன் ஓரங்களை நறுக்கி, விரல் அளவில் (ஏழு அங்குலம் அல்லது ஒன்பது அங்குலம்) ஒரேமாதிரி நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய துண்டுகளை சிறிது நேரம் தண்ணீரில் போட்டு வைக்கவும். இப்படித் தண்ணீரில் போட்டு வைப்பதால் கிழங்கின் மேலுள்ள வெள்ளைப் படிமம் நீங்கி, பொரிக்கும்போது சுவை கூடும். 15 நிமிடங்கள் கழித்து கிழங்கை நன்கு கழுவி எடுத்து சுத்தமான காட்டன் துணியில் உலர்த்திக் கொள்ளவும். தண்ணீர் முற்றிலும் உலர வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டு சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் நன்றாக உலர்ந்த உருளைக்கிழங்கை, மிதமான சூட்டில் பொரித்தெடுத்து தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் தூவி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

சமையல் அறையில் கரப்பான் பூச்சி, பாச்சை போன்றவற்றின் தொந்தரவைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

- உத்ரா செல்வகுமார், சென்னை-19

சமையலறையின் ஜன்னல்களை அடிக்கடி திறந்து வைப்பது காற்றோட்டம், சுகாதாரம் ஆகியவற்றுக்கு வழி செய்யும். அதன்மூலம் பூச்சிகள் பிரச்னையைத் தீர்க்கலாம். சமையலறையில் பொதுவாக கரப்பான், பாச்சை, ஈ போன்ற பூச்சி வகைகளின் தொந்தரவு இருப்பது இயல்பு. இதைத் தவிர்ப்பதற்கு நாம் அதிக அளவில் பொருள்களை வாங்கிச் சேமித்து வைப்பதைவிட, அவ்வப்போது அந்தந்த மாதத்துக்குத் தேவையான அளவு பொருள்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. எறும்புகள் வராமல் இருப்பதற்கு சூடம் (கற்பூரம்), கல் உப்பு ஆகிய இரண்டையும் தண்ணீரில் கரைத்து ஆங்காங்கே தெளித்து விடலாம். உப்பு, வினிகர் இரண்டை யும் கலந்தும் தெளிக்கலாம். நீண்ட நாள்கள் ஒட்டடை அடிக்காமல்விட்டால் சிலந்திப் பூச்சிகளின் தொந்தரவு இருக்கும். எனவே, 15 நாள்களுக்கு ஒரு முறையாவது சமையல் அறையை ஒட்டடை அடித்து சுத்தம் செய்வது அவசியம் கிராமங்களில். மஞ்சள் தூளில் சிறிதளவு உப்பு கலந்து சமையலறையில் தெளித்து வைப்பார்கள். இதனால் சமையலறையில் பூச்சிகள் அண்டாது.

சமையல் சந்தேகங்கள் - 9: வீட்டிலேயே செய்யலாம் சிறுதானிய லட்டு, ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ், நேந்திரம் சிப்ஸ்...
bhofack2

நேந்திரம் வாழைக்காய் இப்போது குறைந்த விலையில் விற்பனையாகிறது. நேந்திரம் சிப்ஸ் வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?

- கலாவதி தனசேகரன், பெங்களூரு-3

நேந்திரம் சிப்ஸ் தயாரிக்கும்போது, நேந்திரம் வாழைக்காய் காயாக இருக்க வேண்டும். சிறிதளவு கூட பழுத்து இருக்கக் கூடாது. அதாவது செங்காயாகக்கூட இருக்கக் கூடாது. நேந்திரம் வாழைக்காயை வாங்கி, தோலை அகற்றிவிட்டு தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர்விட்டு அதில், ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், இரண்டு டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கரைத்து வைத்துக்கொள்ளவும். வாழைக்காயை டிஷ்யூ பேப்பர் அல்லது மஸ்லின் துணி கொண்டு சுத்தமாகத் துடைத்துவிட்டு சிப்ஸாகச் சீவி வைத்துக்கொள்ளவும். வாணலியில் மிதமான சூட்டில் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கவும். சீவி வைத்துள்ள வாழைக்காயை அதில் சேர்க்கவும். அதன் பிறகு, ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் கலவையை எண்ணெயில்விட்டால், அது சிப்ஸில் சரியான அளவில் பரவி சுவையான நேந்திரம் சிப்ஸ் கிடைக்கும். எண்ணெயை வடித்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டுவைத்தால் மூன்று, நான்கு நாள்களுக்குப் பயன்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism