லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

சமையல் சந்தேகங்கள் - 15 - ஆந்திரா ஸ்டைல் பருப்புப் பொடி... இளநீர் பாயசம்... அன்னாசிப்பூ டீ...

சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சமையல் சந்தேகங்கள்

- சுகுன ரோஷிணி

சமையல் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார் செஃப் பாலகிருஷ்ணன்.

ஆந்திரா ஹோட்டல்களில் சாப்பிடும்போது அங்குள்ள சாப்பாட்டு மேஜைகளில் இடம்பிடிக்கும் பருப்புப் பொடியை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?

-
சி.மீனாட்சி, சென்னை-11

மதிய உணவின் தொடக்கத்தில், பருப்புக் கடைசலோ, பருப்புப் பொடியோ இருந்தால் விருந்தின் சுவை கூடும். பருப்புப் பொடியில் இருக்கும் மிளகும் உப்பும் உமிழ்நீரைச் சுரக்கச் செய்து ஜீரணத்துக்குப் பெரிதும் உதவும்.

சமையல் சந்தேகங்கள் - 15 - ஆந்திரா ஸ்டைல் பருப்புப் பொடி... இளநீர் பாயசம்... அன்னாசிப்பூ டீ...

ஆந்திரா ஸ்டைல் பருப்புப் பொடி தயாரிக்கத் தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உளுத்தம் பருப்பு - 50 கிராம், பயத்தம்பருப்பு (உடைத்த பாசிப்பருப்பு) - 50 கிராம், பொட்டுக்கடலை - 50 கிராம், மிளகு - 75 கிராம், சீரகம் - 25 கிராம், வெள்ளை எள் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 10 பெருங்காயத்தூள் அல்லது கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு, பூண்டு (உரித்தது) - 20 பற்கள், உப்பு - தேவையான அளவு.

கடாயைச் சூடாக்கி, எண்ணெய் இல்லாமல் பருப்பு வகை களைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். பூண்டு பற்கள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிது எண்ணெய்விட்டு வதக்கி எடுக்கவும். கட்டிப் பெருங்காயம் என்றால் எண்ணெய் விட்டு பொரித்துக்கொள்ளவும். மிளகு, சீரகம், வெள்ளை எள் ஆகியவற்றை லேசாக வறுக்கவும். தேவையானால், காய்ந்த கறிவேப்பிலை ஒரு கைப்பிடி சேர்க்கலாம். எல்லாவற்றையும் மிக்ஸியில் உப்பு சேர்த்து பொடியாக அரைக்கவும். சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெயுடன் பருப்புப் பொடி சேர்த்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

சமையல் சந்தேகங்கள் - 15 - ஆந்திரா ஸ்டைல் பருப்புப் பொடி... இளநீர் பாயசம்... அன்னாசிப்பூ டீ...

சுவையான தக்காளி ரசம் வைப்பது எப்படி?

-
என்.மங்களகௌரி, சென்னை-11

தேவையானவை: தக்காளி - 4, வேகவைத்த துவரம்பருப்பு - கால் கப், கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன் (சீரகம், மிளகைப் பொடித்துக்கொள்ளவும்), எலுமிச்சைப்பழம் - அரை, உப்பு - தேவைக்கேற்ப, காய்ந்த மிளகாய் - 2 கடுகு, உளுந்து, பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.

கொதிக்கும் நீரில் தக்காளியைச் சேர்த்து, சிறிது நேரம் கழித்து வெளியில் எடுத்து தோல் நீக்கி நன்றாக மசித்துக்கொள்ளவும். இதில் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து, ஒரு கப் தண்ணீர்விட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்து வரும்போது மிளகு, சீரகத் தூள், உப்பு, மல்லித்தழை சேர்த்துக் கலந்து இறக்கிவிடவும். கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு தாளித்து ரசத்தில் சேர்க்கவும். இறுதியாக எலுமிச்சைப் பழச்சாற்றைப் பிழிந்து விடவும். ரசப்பொடி தேவையில்லை. தேவைப்பட்டால் ஐந்து பூண்டு பற்கள் நசுக்கி, சேர்த்துக்கொள்ளலாம்.

சமையல் சந்தேகங்கள் - 15 - ஆந்திரா ஸ்டைல் பருப்புப் பொடி... இளநீர் பாயசம்... அன்னாசிப்பூ டீ...

வட இந்திய உணவகங்களில் வழங்கப்படும் சுவையான இஞ்சி டீ தயாரிப்பது எப்படி?

-
டி.மனோப்ரியா, வேலூர்.

இஞ்சி டீ தயாரிக்கத் தேவையானவை: தேயிலைத்தூள் - மூன்றரை டேபிள்ஸ்பூன், பால் - 250 மில்லி, தண்ணீர் - 50 மில்லி, இஞ்சி (தோல் நீக்கியது ) - சிறிதளவு, ஏலக்காய் - ஒன்று, சர்க்கரை - தேவையான அளவு.

இஞ்சி, ஏலக்காய் சேர்த்து நன்றாக இடித்து எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும்.‌ சூடாகக் காய்ச்சிய பாலில் தேயிலை சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டவும். இதை இஞ்சி, ஏலக்காய் சேர்த்துக் கொதித்த வெந்நீரில் சேர்த்து, மீண்டும் மிதமான தீயில் நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கி, சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.

சமையல் சந்தேகங்கள் - 15 - ஆந்திரா ஸ்டைல் பருப்புப் பொடி... இளநீர் பாயசம்... அன்னாசிப்பூ டீ...

சில நாள்கள் இட்லி வார்க்கும்போது உப்பாமல் தட்டையாக வருகிறது... என்ன காரணம்?

- செல்வி மனோகரன், ராஜபாளையம்.

இட்லிக்கு மாவு அரைக்கும்போது உளுத்தம்பருப்பு அதிகமாகிவிட்டால், இட்லி தட்டையாக இலை இலையாக வரும். ஒருவேளை உங்களை அறியாமல் உளுந்து அதிகம் சேர்த்துவிட்டால், இட்லி மாவுடன் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து, இட்லி வார்த்தால் உப்பலாக இருக்கும்.

சமையல் சந்தேகங்கள் - 15 - ஆந்திரா ஸ்டைல் பருப்புப் பொடி... இளநீர் பாயசம்... அன்னாசிப்பூ டீ...

அன்னாசிப்பூவை தேநீரில் கலந்து சாப்பிடலாமா, சுவைமிக்க அன்னாசிப்பூ தேநீர் தயாரிப்பது எப்படி?

-
பி.பெரியநாயகி, மாட்டுத்தாவணி.

தேநீர் தயாரிக்கும்போது அன்னாசிப்பூ சிறிதளவு சேர்த்து தயாரித்தால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். அன்னாசிப்பூவை ஆங்கிலத்தில் ‘ஸ்டார் அனீஸ்’ என்று சொல்வார்கள். ஆசிய நாடுகளின் சமையலில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சீனர்கள் அன்னாசிப்பூவை அதிகளவில் பயன்படுத்துவார்கள். உடலில் நச்சுகளை அகற்றுவதில் இந்தத் தேநீர் முக்கியப் பங்காற்றுகிறது. ஒரு கப் தண்ணீரில் அன்னாசிப்பூ ஒன்று, சிறுதுண்டு பட்டை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். இதில் சிறிதளவு தேயிலைத்தூள் சேர்த்து இறக்கி, இத்துடன் தேன் சேர்த்துக் குடித்துவந்தால் உடல் சூடு தணிந்து புத்துணர்ச்சி பெறும். பால் சேர்க்கத் தேவையில்லை.

சமையல் சந்தேகங்கள் - 15 - ஆந்திரா ஸ்டைல் பருப்புப் பொடி... இளநீர் பாயசம்... அன்னாசிப்பூ டீ...

திருமண விருந்தொன்றில் இளநீர் பாயசம் கொடுத்தார்கள். மிகவும் சுவையாக இருந்தது. இளநீர் பாயசம் செய்வது எப்படி?

- செல்வராணி, ஆத்தூர்.

அடுப்பில் வைக்காமலேயே இந்த இளநீர் பாயசத்தைத் தயாரிக்க முடியும்.

இளநீர் பாயசம் செய்யத் தேவையானவை: வழுக்கையுடன் கூடிய இளநீர் - 800 மில்லி, தேங்காய்ப்பால் - 100 மில்லி, பாதாம், முந்திரி, பிஸ்தா (நறுக்கியது) - தலா 6, இளநீர் வழுக்கை - ஒரு கப், கண்டன்ஸ்டு - அரை கப், பொடித்த சர்க்கரை - 50 கிராம்.

ஒரு பாத்திரத்தில் இளநீர், நறுக்கிய இளநீர் வழுக்கை, தேங்காய்ப்பால், கண்டன்ஸ்டு மில்க் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேங்காய்ப்பாலுக்குப் பதிலாகக் காய்ச்சி ஆறவைத்த பசும்பால் சேர்க்கலாம். பிறகு நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை சேர்க்கவும். கண்டன்ஸ்டு மில்க் இல்லாவிட்டால், கூடுத லாக 25 கிராம் சர்க்கரையைச் சேர்த்துக்கொள்ளலாம். இளநீர் பாயசம் தயார். இதை ஃபிரிட்ஜில் வைத்துப் பரிமாறினால், சுவையாக இருக்கும்.

சமையல் சந்தேகங்கள் - 15 - ஆந்திரா ஸ்டைல் பருப்புப் பொடி... இளநீர் பாயசம்... அன்னாசிப்பூ டீ...

ரசம் வைக்கும்போதெல்லாம் அளவு தெரியாமல், புளிப்புச்சுவை அதிகமாகிவிடுகிறது. இதற்கு என்ன செய்யலாம்?

-
ச.சந்திரலேகா, பொன்னேரி.

நம்முடைய முன்னோர்கள் சாதம் வடிக்கும் முன்பு அரிசியை நன்றாகக் கழுவிக் களைந்து சுத்தம் செய் வார்கள். அப்படிச் செய்யும்போதே அரிசி களைந்த நீரில் இரண்டாவது முறையாகத் தண்ணீர்விட்டுக் களைந்து அந்தத் தண்ணீரை எடுத்து வைப்பார்கள். சாம்பாருக்கு, பருப்பு வேகவைக்க இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துவார்கள். ரசத்துக்குப் புளிக்கரைசல் தயாரிப் பதற்கும் பயன்படுத்துவார்கள். இப்படிச் செய்யும்போது ரசத்தின் சுவை அதிகமாகும். புளிப்புச் சுவையும் கட்டுப்படும். அரிசி களைந்த நீரில் உள்ள சத்துகளும் நம் உடலில் சேரும். அடுத்த முறை ரசம் வைக்கும்போது அரிசி களைந்த நீரில் புளியை ஊறவைத்து, சமைத்துப் பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.