Published:Updated:

நாணயவியல் அறிஞர், தினமலர் முன்னாள் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்! - தலைவர்கள் இரங்கல்

தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், தினமலர் பங்குதாரரும், நாணயவியல் அறிஞருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி இன்று (மார்ச் 04) காலமானார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தினமலர் நாளிதழில் 40 ஆண்டுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றியவரும், நாணயவியல் அறிஞருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி (88) உடல்நலக் குறைவு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் இன்று இயற்கை எய்தினார்.

இரா.கிருஷ்ணமூர்த்தி
இரா.கிருஷ்ணமூர்த்தி
Dinamalar

இரா.கிருஷ்ணமூர்த்தி, தினமலர் நாளிதழின் நிறுவனர் டி.வி.இராமசுப்பையர், கிருஷ்ணம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகனாக கன்னியாகுமரி மாவட்டம், வடிவீஸ்வரம் கிராமத்தில் 18.01.1933-ல் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை நாகர்கோவிலிலுள்ள சேது லெக்குமிபாய் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியிலும், உயர்கல்வியைக் காரைக்குடி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.

டி.வி.இராமசுப்பையருக்குப் பிறகு தினமலரின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றவர், கடந்த 2017-ம் ஆண்டுவரை இந்தப் பொறுப்பில் இருந்துவந்தார். இவர் ஆசிரியராக இருந்த காலத்தில் தினமலர் நாளிதழ் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தனது பதிப்பைத் தொடங்கியது. பத்திரிகைத்துறை மட்டுமல்லாமல், பழைமையான நாணயங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அது தொடர்பாக ஆராய்ச்சி கட்டுரைகளையும், நூல்களையும் வெளியிட்டிருக்கிறார்.

சங்ககால நாணயங்கள் குறித்துப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். இவரின் சேவையைப் பாராட்டி 2012-13-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், இவரை கௌரவப்படுத்தும்விதமாக இங்கிலாந்திலுள்ள லண்டன் ராயல் நாணயவியல் கழகம் இவருக்கு கௌரவ உறுப்பினராக அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. நாணயவியல் தொடர்பாக 30-ம் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவரின் மறைவுக்குப் பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு