Published:Updated:

“நிலைமை சீராவது மக்கள் கைகளில்தான் உள்ளது”

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் பேட்டி

பிரீமியம் ஸ்டோரி
தமிழக சுகாதாரத் துறை தினமும் வெளியிடும் மாவட்டவாரியான கொரோனா பாதிப்புப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது, சென்னை.

எப்போது நிலைமை சீராகும் எனத் தெரியவில்லை. இந்த நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரியான ஜெ.ராதாகிருஷ்ணனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

‘‘தமிழகத்தில் நிலைமை கைமீறிவிட்டதா?’’

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

‘‘மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் அதிகளவில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில்தான் அதிகம். இறப்புவிகிதமும் இங்கு மிகக் குறைவு. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர் களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியும் தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து கட்டுப் படுத்தப்பட்டுவருகிறது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ஊரடங்கு கடுமையாக இருந்த நிலையிலும் சென்னையில் இவ்வளவு நபர்கள் பாதிக்கப்பட்டது எப்படி?’’

‘‘சென்னையில் மக்கள் அடர்த்தி மிக அதிகம். அதனாலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகம் எடுக்கப்பட்டும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, தொற்று அதிகம் ஏற்படும் இடங்களில் தன்மைக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளோம். பலர், ‘எங்களுக்கு இந்த நோய்த்தொற்று வராது’ என அலட்சியமாக உள்ளனர். அவர்களுக்கு இந்த வைரஸின் தாக்கம்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.’’

‘‘மக்களிடம் எந்த மாதிரியான ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கிறீர்கள்?’’

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

‘‘இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் குறையும் வரை மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளிகளைப் பின்பற்ற வேண்டும். அடிக்கடி கை கழுவுவது போன்ற தூய்மைச் செயல்பாடுகளை தொடர்ந்து செய்ய வேண்டும். அப்போதுதான் நிலைமையை முழுமையாகச் சரிசெய்ய இயலும்.”

‘‘சென்னையில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?’’

‘‘ஒரு லட்சத்துக்கும் அதிகமான படுக்கை வசதிகள் அரசு சார்பில் தயார் நிலையில் உள்ளன. மக்கள் யாரும் கொரோனா குறித்த அச்சம்கொள்ள வேண்டாம். நோய்த் தொற்றிலிருந்து விரைவில் மீண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது.’’

‘‘கொரோனா பாசிட்டிவ் உள்ளவர்களுக்கு, எந்த அறிகுறியும் இல்லையென்றால், வீட்டுக்கு அனுப்பப் படுகின்றனர் என்று சொல்லப்படுகிறதே... அது எதன் அடிப்படையில்?’’

‘‘பாசிட்டிவ் என கண்டறியப்பட்டவர்கள் அனைவருமே வீட்டுக்கு அனுப்பப் படுவதில்லை. அவர்களுக்கு நுரையீரல் எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். இதில் எந்த அறிகுறிகளும் இல்லாதவர்கள் மட்டும் மூன்று வகையாகப் பிரிக்கப் படுகின்றனர். வீட்டில் கழிப்பிட வசதியுடன்கூடிய தனி அறை உள்ளவர்கள் என்றால், அவர்களின் வீடுகளுக்குச் சென்று வசதிகள் இருக்கின்றனவா என எங்கள் குழு ஆய்வு செய்யும். குழுவினர் ஓகே சொன்னால், அனைத்து மருந்துகளும் கொடுக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கிறோம். அந்த வசதிகள் இல்லாதவர்கள் அரசு மருத்துவ முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். மூன்றாவது பிரிவினர் மருத்துவமனைகளிலேயே தங்கவைக்கப் படுகின்றனர்.’’

‘‘வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுபவர்கள் எப்படிக் கண்காணிக்கப்படுகின்றனர்... அவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது?’’

‘‘அனைத்து மருந்துகளையும் வீட்டுக்குக் கொடுத்தனுப்புகிறோம். அவர்கள் அனைவரையுமே எங்கள் மருத்துவக் குழுவினர் நேரிலும் அலைபேசியிலும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு உடல்ரீதியாக ஏதேனும் பிரச்னை என்றால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. அடுத்ததாக, மருத்துவ முகாம்களில் தங்கவைத்து அங்கு உள்ள மருத்துவக் குழுக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். நோய்த்தொற்று உள்ளவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருமே தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளும் சூழல் இல்லையென்றால், அவர்களையும் அரசு முகாம்களுக்கு அழைத்துவந்து கண்காணிக்கிறோம்.’’

‘‘சில மருத்துவ முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?’’

‘‘அனைத்து மருத்துவ முகாம்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், முகாம்களில் 24 மணி நேரமும் மருத்துவக் குழுக்கள் செயல்படுகின்றன.’’

‘‘சென்னையின் நிலைமை எப்போது சீராகும்?’’

‘‘நிலைமையை விரைவில் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான அனைத்து வகையான நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து எடுத்துவருகிறது. உலக சுகாதார மையம் கூறும் அறிவுரைகளையும் மத்திய, மாநில அரசுகளின் பொது சுகாதார குழுக்கள் கூறும் அறிவுரைகளையும் செயல்படுத்திவருகிறோம். அனைத்து அரசுத் துறைகளும் இரவு பகலாகப் பணிபுரிந்துவருகின்றன. இப்படி அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும்... இந்தத் தொற்று பரவாமல் இருப்பது மக்கள் கைகளில்தான் உள்ளது. அரசின் அறிவுரைகளின் படி மக்கள் நடந்துகொண்டால், விரைவில் நாம் இயல்புநிலைக்குத் திரும்புவோம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு