Published:Updated:

`சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் கொரோனா பெருந்தொற்று' - ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

சுதந்திர போராட்டத்திற்கு பிறகு இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக கோவிட்-19 பெருந்தொற்று இருக்கும் என்றும், சிறு,குறு மற்றும் நடுத்தர துறைகளுக்கு விரைவாக திவால் செயல்முறையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவனர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தற்போது, டெல்லி சிகாகோ பூத் ஸ்கூல் ஆஃப் பிசினெஸ்-ல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று (சனிக்கிழமை) டெல்லியில் இயங்கி வரும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் சார்பில் சிறப்பு காணொளி கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தியாவின் தலை சிறந்த பொருளாதார நிபுணர்கள் பலர் கலந்துகொண்ட அந்த காணொளிக் கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பல்கலைக்கழக பேராசியருமான ரகுராம் ராஜனும் கலந்துகொண்டார். ரகுராம் ராஜன் தீவிரமாகி வரும் கொரோனா பெருந்தொற்று குறித்தும் இந்திய பொருளாதாரம் குறித்தும் பேசினார்.

அப்போது அவர், ``இந்தியா இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு விரைவான திவால் செயல்முறை தேவை என்று நினைக்கிறேன். சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக கோவிட்-19 பெருந்தொற்று இருக்கும் என்று நான் கருதுகிறேன். இந்தியாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பதிவாகிக் கொண்டிருக்கிறது. சமீபமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் பல்வேறு காரணங்களால் மக்களுக்கு உதவி செய்ய அரசாங்கத்தால் முடியவில்லை. இதுவும் ஒரு வகையில் கொரோனாவின் பாதிப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

கொரோனா
கொரோனா

கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வர அரசுகள் அமல்படுத்தி இருக்கும் லாக்டௌன்களால் மிகப்பெரிய பொருளாதார சவாலினை இந்தியா மீண்டும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், ஆக்ஸிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் மகாராஷ்டிரா அரசு நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் படுக்கைகளை வழங்கி சிறப்பாக நிர்வகித்து வருகிறது. பல இடங்களில் அரசுகளால் ஒரு அளவுக்கு மேல் செயல்பட முடியவில்லை. சீர்திருத்தம் என்பது மறைமுகமாக இருக்காமல், வெளிப்படையாக இருக்க வேண்டும். குறு,சிறு, நடுத்தர துறைகளுக்கு விரைவாக திவால் செயல்முறையை அரசு அறிவிக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு