Published:Updated:

`சாலையில் அமர்ந்து தொழிலாளர்களின் குறைகளைக் கேட்ட ராகுல்’-காரில் அனுப்பி வைத்த காங்கிரஸ் தொண்டர்கள்

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

டெல்லியின் சுக்தேவ் விஹார் மேம்பாலம் பகுதியில் சென்றுகொண்டிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.

டெல்லி சாலைகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியானது. ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்புகளை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கால்நடையாக செல்கின்றனர். ஹரியானாவிலிருந்து சில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியப்பிரதேசத்தை நோக்கி நடந்து சென்றுள்ளனர். அவர்கள் டெல்லியின் சுக்தேவ் விஹார் மேம்பாலம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தனது காரை நிறுத்திய ராகுல் பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த மக்களிடம் சிறிது நேரம் பேசியுள்ளார். ராகுல்காந்தி அங்கிருக்கும் தகவல் அறிந்ததும் மீடியாவும், டெல்லி போலீஸ் அதிகாரிகளும் அங்கு விரைந்துள்ளனர். மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றியவாறு ராகுல் அமர்ந்து பேசியுள்ளார். தொழிலாளர்களுக்குத் தேவையான மாஸ்க், உணவு மற்றும் தண்ணீர் வழங்கியுள்ளார். சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டும் ஏன் நடந்து செல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தருவதாக தொழிலாளர்களிடம் உறுதியளித்துள்ளார்.

’அம்மா பென்ஷன் காசுலதான் சாப்பிட்டோம்; ஏ/சி டிக்கெட் எடுக்க எங்க போவோம்’- கலங்கும் தொழிலாளர்கள்

ராகுல்காந்தி பேசிவிட்டுச் சென்றபின் அங்கிருந்த தொழிலாளர்களை போலீஸார் தடுத்து வைத்ததாக காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம்சாட்டினர். மேலிடத்திலிருந்து வந்த உத்தரவின் பேரில் போலீஸார் இவ்வாறு நடந்துகொள்கின்றனர் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறினர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் சந்திப்பு குறித்து பேசிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ``ராகுல் காந்தி எங்களிடம் வந்து பேசினார். நாங்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் குறித்து அறிந்துகொள்ள விரும்பினார். நாங்கள் இங்கு பட்டினியால் சாகிறோம்; எங்களுக்கு இங்கு எந்த வேலையும் இல்லை. 50 நாள்களாக இப்படித்தான் இருக்கிறோம். எங்களிடம் இருக்கும் பணமெல்லாம் சாப்பாட்டுக்கே செலவாகிவிட்டது. ராகுல் காந்தி வந்து எங்களிடம் குறைகளைக் கேட்டார். அதற்கு அவருக்கு நன்றி கூற வேண்டும். இவர் ஒருத்தராவது நாங்க சொல்றத கேட்டாரே. எங்களுக்கு உதவி செய்றேன்னு சொல்லியிருக்கார். எங்கள் கிராமத்துக்கு செல்வதற்கு வாகனங்களை ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார்” என்றனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களது வாகனங்கள் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர். டெல்லி காங்கிரஸ் கட்சியினர் உத்தரப்பிரதேச மாநில எல்லை வரை தொழிலாளர்களை கொண்டு சேர்ப்பார்கள். அங்கிருந்து உத்தரப்பிரதேச காங்கிரஸ் தொண்டர்கள் அழைத்துச் செல்வார்கள். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தொழிலாளர்கள் ராகுலை சந்திக்கவிடாமல் தடுத்தாக காங்கிரஸ் கட்சியினர் கூறும் குற்றச்சாட்டை டெல்லி போலீஸார் திட்டவட்டமாக மறுத்தனர். தொழிலாளர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாததால் தடுத்து வைக்கப்பட்டனர். ராகுல் காந்தி வந்து தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாற்றினார். அதன்பின்னர் அவரது கட்சியினர் வந்து தங்களது வாகனங்களில் அவர்களை அழைத்துச் சென்றனர்” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு