கோவை டு ஷீர்டி தனியார் ரயில் சேவைக்கு எதிராக, தமிழ்நாடு அரசியல் அரங்கில் அனல் பறக்கிறது. லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் இயக்கும் இந்த ரலியில் பயணம் செய்தவர்கள், சேவைக்குறைபாடு காரணமாக கட்டணத்தைத் திரும்பக் கேட்டிருப்பது இந்தப் பிரச்னை மீது கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
‘பாரத் கௌரவ்’ திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 150 ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது மத்திய அரசு. இதன்படி, ‘சவுத் ஸ்டார் ரயில்’ என்ற பெயரில், இந்தியாவில் முதல் தனியார் ரயில், கோவை – ஷீர்டி இடையே தனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. கோவையைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் Future Gaming & Services Pvt Ltd நிறுவனத்தின் ஓர் அங்கம்தான் ‘சவுத் ஸ்டார் ரயில்.’ பிரபல தொழிலதிபர் ‘லாட்டரி’ மார்ட்டின்தான் இந்த நிறுவனத்தின் தலைவர்.

“ஒப்பந்தப்புள்ளியே கோராமல் மார்ட்டின் நிறுவனத்துக்கு இந்த ரயில் கொடுக்கப்பட்டதற்கு பி.ஜே.பி-யுடனான இணக்கமான சூழலும் ஒரு காரணம். 2019-ம் ஆண்டு மார்ட்டின் சம்பந்தப் பட்ட இடங்களில் ஐ.டி ரெய்டு நடத்தி நெருக்கடி கொடுத்தனர். அதன் பிறகு மார்ட்டின் தமிழ்நாட் டுக்கு முழுக்குப் போட்டுவிட்டு வடஇந்தியப் பக்கம்தான் தொழில் செய்தார். இதையடுத்து பி.ஜே.பி-க்கு தேர்தல் நிதியாக ரூ.100 கோடி கொடுத்தார். தேர்தல் நிதிக்குப் பிரதிபலனாக மத்திய அரசு அவருக்கு அளித்த பரிசுதான் இந்த ரயில்!” என்கின்றனர் உள் விவரம் அறிந்தவர்கள்.
எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தின் சேலம் கோட்டச் செயலாளர் கோவிந்தன் பேசும்போது, “கோவையிலிருந்து ஷீர்டிக்கு நேரடி ரயில் இல்லை. குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் தானே வரை சென்று, பிறகு அங்கிருந்து இன்னொரு ரயில் மாற வேண்டும். இரண்டு ரயில்கள் மாறி ஷீர்டி சென்று வந்தாலே ரயில்வே கட்டணம் (ஸ்லீப்பர் பிரிவு) ரூ.1,770-தான். இந்தத் தனியார் ரயில் கட்டணம் ரூ.2,500. ஆக, வருவாயை வேண்டு மென்றே தனியாருக்கு விட்டுக்கொடுக்கிறது அரசு. அரசு ரயில்களைப் பராமரிக்கப் போது மான ஊழியர்களைக் கொடுக்காத ரயில்வே நிர்வாகம், தனியார் ரயில்களின் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு அதிக எண்ணிக்கையி லான ஊழியர்களை ஒதுக்கியிருக்கிறது. இதன் மூலம் பொதுத்துறை நிறுவனத்தை நசுக்கி, தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் அரசின் திட்டம் அம்பலமாகியிருக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறுகையில், “சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் சேவையைத் தனி யாரிடம் கொடுக்கலாம் என்ற யோசனையே தவறானது. இன்ஜின் ஓட்டுநர்கள், கார்டு உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் ரயில்வேயின் கட்ட மைப்பைப் பயன்படுத்தித்தான் தனியார் ரயிலை இயக்குகின்றனர். டிக்கெட் கலெக்ஷனை மட்டும் தனியார் செய்கிறார்கள். முதற்கட்டமாக 150 ரயில்களை, தனியாரிடம் ஒப்படைக்கவிருப்பதாக ஒன்றிய அரசு கூறியிருக்கிறது. நாட்டு மக்களின் சொத்தை விற்பதற்கு ஒப்பான இந்த நடைமுறையை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்” என்றார்.
ரயில்வே அதிகாரிகளோ, “இந்த ஒரு ரயிலை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த முறையில் விட்டதன் மூலம் ரயில்வே நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ.3.34 கோடி வருமானம் வரும். தனியாரிடம் ஒப்படைத் தாலும், இந்தச் சேவையை ரயில்வே தொடர்ந்து கண்காணிக்கும்” என்கிறார்கள்.

‘கோவை – ஷீர்டி’ ரயிலை ஒப்பந்தத்துக்கு எடுத்துள்ள ‘சவுத் ஸ்டார் ரயில்’ நிறுவனத்தின் பொறுப்பாளர் அசோக்கிடம் பேசினோம். “ரயில்வே நிர்வாகத்துடன் ஒப்பிடும்போது எங்கள் கட்டணத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. இதில் நாங்கள் கொடுக்கும் வசதிகளை யும் கவனிக்க வேண்டும். பயணிகளுக்குத் தலையணை, போர்வை கொடுக்கிறோம். அந்தப் போர்வையை அவர்கள் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை. ஷீர்டியில் வி.ஐ.பி தரிசனம், ரயில் நிலையத்திலிருந்து கோயிலுக்கு சாலைப் போக்குவரத்து, அங்கு மூன்று பேர் தங்கக்கூடிய ஏ.சி அறை மற்றும் பயணத்துக்குக் காப்பீடு எல்லாம் அந்தக் கட்டணத்தில் அடக்கம். விமானத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள பணியாளர்களைவைத்து, ரயிலைச் சுத்தமாக பராமரிக்கிறோம். உணவுக்கு மட்டும் தனிக் கட்டணம். அளவான விலையில் தரமான உணவை வழங்குகிறோம்” என்றார்.
பயணிகளிடம் பேசினோம். “மூன்றடுக்கு ஏ.சி பெட்டியில் பேக்கேஜிங் அடிப்படையில் அந்த நிறுவனம் ஒரு நபருக்கு தலா ₹8,000 கட்டணம் வாங்கியது. அதுவே பேக்கேஜ் இல்லாமல் டிக்கெட் மட்டும் எடுத்து வந்தவர்களுக்கு அதே மூன்றடுக்கு ஏ.சி பெட்டியில் ₹5,000 வசூலித்துள்ளனர். ஷீர்டியில் ரூம், வி.ஐ.பி தரிசனம் ஆகிவற்றுக்குத்தான் பேக்கேஜிங்கில் ₹3,000 அதிகம் வசூலித்துள்ளனர். எங்களுடன் பேக்கேஜிங் இல்லாமல் டிக்கெட் மட்டும் எடுத்து வந்தவர்களுக்கு அறை ₹600, வி.ஐ.பி தரிசனம் ₹300 சேர்த்தே மொத்தம் ₹900-தான் ஆனது. அதனால் ₹2,100 திருப்பித் தருமாறு தனியார் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறோம். சாலைப் போக்குவரத்துக்கும் ரூ.25 வாங்க வேண்டிய இடத்தில் ரூ.50 வாங்கியிருக்கிறார்கள். எந்தப் பெட்டியிலும் போதுமான பாதுகாப்பு இல்லை. சில மர்ம நபர்கள் உலாவிக்கொண்டே இருந்தனர். தரமான உணவை போதுமான அளவுக்கு, நியாயமான விலைக்கு தருவோம் என்றனர். உணவு விலையும் அதிகம், விலைக்கு தகுந்த அளவும் இல்லை. மொத்தத்தில் இந்தப் பயணத்தால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளானதுதான் மிச்சம். அரசு ரயில் சேவைக்கும், தனியார் பிஸினஸுக்குமான வித்தியாசத்தை இந்தப் பயணத்தில் நாங்கள் உணர்ந்துவிட்டோம்” என்றார்கள் அவர்கள்.

ஒரே ஒரு ரயிலைக் கொடுத்ததிலேயே இத்தனை பிரச்னைகள். ஒட்டுமொத்த ரயில்வேயையும் தனியாருக்குத் தாரை வார்த்தால் பயணிகளின் நிலை என்னவாகுமோ?!