Published:Updated:

இந்தியாவில் இது முதல்முறை! - தனியார் நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விடப்பட்ட ரயில் நிலையம்

திருமண போட்டோ ஷூட்டிங், பிறந்தநாள் விழா போன்ற தனியார் நிகழ்ச்சிகளுக்கு கொச்சி ஹார்பர் டெர்மினல் ரயில் நிலையம் வாடகைக்கு விடப்பட உள்ளது.

கொச்சி ஹார்பர் டெர்மினல் ரயில் நிலையம்
கொச்சி ஹார்பர் டெர்மினல் ரயில் நிலையம்

இந்தியாவில் முதன்முறையாக கேரள மாநிலம் கொச்சி ஹார்பர் டெர்மினல்ஸ் ரயில்வே ஸ்டேஷன் தனியார் நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விடப்பட்டது. அகில இந்திய பைஃவ் ஸ்டார், செவன் ஸ்டார் ஹோட்டல்களின் பர்ச்சேஸ் மேலாளர்களின் மாநாடு முதல் நிகழ்ச்சியாக இந்த ரயில் நிலையத்தில் வைத்து நடந்தது.

ரயில் நிலையம்
ரயில் நிலையம்

இந்த நிகழ்ச்சியின்போது பரபரப்பாகச் செயல்படும் ரயில் நிலையத்தைப்போன்று டி.டி.ஆர், சுமைதூக்கும் தொழிலாளர்கள், நடை மேடையில் உணவகம், புத்தக விற்பனையகம் எனத் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், மேடை அமைக்கப்பட்டு அதில் ``சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே" போன்ற ரயில் சம்பந்தப்பட்ட பாடல்களுக்கு கலைஞர்கள் நடனமாடினர். மூன்று மணி நேரம் நடந்த நிகழ்ச்சிக்கு 50,000 ரூபாய் வாடகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எர்ணாகுளம் ஏரியா ரயில்வே மேலாளர் நிதின் நோர்பர்ட் கூறுகையில், ``பழைமையான இந்த ரயில்வே ஸ்டேஷனில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் புதர் மண்டிக்கிடந்த ரயில் நிலையத்தைப் பராமரிக்கும் விதமாகவும் வருமானம் ஏற்படுத்தும் விதமாகவும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்குவிட ரயில்வே நிர்வாகம் தீர்மானித்தது. முதல் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.

நடைமேடை உணவகம்
நடைமேடை உணவகம்

எனவே, உடனடியாகத் திருமண போட்டோ ஷூட்டிங், பிறந்தநாள் விழா போன்ற தனியார் நிகழ்ச்சிகளுக்கு கொச்சி ஹார்பர் டெர்மினல் ரயில் நிலையம் வாடகைக்கு விடப்பட உள்ளது. அதுபோன்று கேரள ஐகோர்ட்டுக்குப் பின்னால் உள்ள பழைய ரயில்வே ஸ்டேஷனும் வாடகைக்கு விடப்பட உள்ளது. எர்ணாகுளம் ஏரியா மேனேஜர் அலுவலகத்தில் இதற்கான அனுமதி வழங்கப்படும்" என்றார்.