Published:Updated:

காதல்...கமிஷன்...வீடியோ ஷூட்! - ஐ.பி.எஸ் அதிகாரிகளை கொதிக்க வைத்த போலீஸ்காரர்

ராம் பிரசாத்

ராஜஸ்தான் போலீஸ் அதிகாரி ஒருவர் வெளியிட்ட ப்ரி வெட்டிங் ஷூட் வீடியோ சீனியர்களின் கடும் அதிருப்தியைச் சம்பாதித்துள்ளது.

dhanpat
dhanpat ( youtube )

இந்தியத் திருமணங்கள் ஆடம்பரமாகிவிட்டன. ஒவ்வொருவரும் தங்களது வசதிக்கேற்ப பிரமாண்டமாகத் திருமணங்களை நடத்தி வருகின்றனர். தொழில்நுட்பங்களின் வளர்ச்சி திருமணங்களை வேறுதளத்துக்குக் கொண்டு சென்றுவிட்டன. ‘தாலிகட்டும் போது தான் உன் தாத்தா முகத்தையே பார்த்தேன்..’ என்ற பாட்டிகளின் கதை எல்லாம் இனி இருக்கப்போவதில்லை.

திருமணத்திற்கு முன்பாகவே மணமக்கள், ப்ரி வெட்டிங் ஷூட் (pre-wedding shoot) நடத்துகின்றனர். ஸ்டியோக்களும் இதற்கென தனி பேக்கேஜ்களை வைத்துள்ளன. அப்படியொரு போட்டோ ஷூட் எடுக்கப் போய் வில்லங்கத்தில் சிக்கியிருக்கிறார் ராஜஸ்தான் போலீஸ்காரரான தன்பட். இவருக்கு அண்மையில் (dhanpat) திருமணம் நிச்சயமாகியுள்ளது. தனது வருங்கால மனைவி கிரணுடன் ஒரு லவ் ஸ்டோரி வீடியோ எடுக்க விரும்பியிருக்கிறார்.

காதல்...கமிஷன்...வீடியோ ஷூட்!
- ஐ.பி.எஸ் அதிகாரிகளை கொதிக்க வைத்த போலீஸ்காரர்

இதற்காக, இருவரும் தங்கள் ஆசைப்படியே ப்ரி வெட்டிங் ஷூட் நடத்தியுள்ளனர். அதை ஆசையுடன் இணையத்தில் பதிவேற்றவே, காவல்துறை உயர் அதிகாரிகளின் அதிருப்தியைச் சம்பாதித்துவிட்டார். தனது வாழ்க்கை துணையை ஒரு கோயிலில் பார்ப்பதாக வீடியோ காட்சி தொடங்குகிறது. காவலர் சீருடையில் ரோந்துப் பணியில் இருக்கும்போது அந்தப் பெண் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிவருகிறார். அவரை தடுத்து நிறுத்தும் காவலர், அதிகாரியான தன்பட்டைச் சந்திக்குமாறு கூறுகிறார். அந்தப்பெண்ணிடம் ஹெல்மெட் அணியாதது குறித்து விசாரித்துவிட்டு அவரிடம் லஞ்சமாகப் பணத்தைப் பெற்றுக் கொள்கிறார். அந்தப்பெண் பணத்தை தன்பட் பாக்கெட்டில் வைத்துவிட்டு நகர்ந்து சென்றுவிடுகிறார். பின்னர் பாக்கெட்டில் தன்பட் தேடும் போது பர்ஸ் காணாமல் போனது தெரியவருகிறது. அடுத்ததாக, காபி ஷாப்பில் சந்திப்பு.. காதல்... திருமணம் என அந்த வீடியோ அழகாக நகர்கிறது.

`வீடியோவை நல்லாத்தான் எடுத்திருக்கிறார். அதற்காக போலீஸ்காரன் லஞ்சம் வாங்குவதைப் போலக் காட்டுவதா?' என உயர் அதிகாரிகள் கொதிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த விவகாரம், ஐஜியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை செய்துள்ளனர்.

dhanpat
dhanpat

வீடியோ தொடர்பாக, ராஜஸ்தான் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், `சித்தோர்கரையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி தனது திருமணத்துக்கு முன்பாக எடுத்த வீடியோ ஷூட்டில் காவல்துறைக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டார். மூத்த அதிகாரிகளால் இது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. காவலர் சீருடையில் அவர் லஞ்சம் வாங்குவது போன்று படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது காவல்துறையினர் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தும். காவல்துறையின் மாண்பைக் காக்கும் வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும். நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்' என எச்சரிக்கை தொனியில் விவரிக்கப்பட்டுள்ளது.