Published:Updated:

ரஜினிக்கு ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு?

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

ரஜினிகாந்தின் மனைவி லதா ‘பீஸ் ஃபார் சில்ரன்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை நடத்திவருகிறார்.

ரஜினிக்கு ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு?

ரஜினிகாந்தின் மனைவி லதா ‘பீஸ் ஃபார் சில்ரன்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை நடத்திவருகிறார்.

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

சேலத்தில் 1971-ம் ஆண்டு பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணி குறித்து துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதன் தாக்கம் இன்னமும் அடங்கவில்லை. நாளுக்குநாள் வேகமெடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. இதையடுத்து, ரஜினிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அழுத்தம் தரும் ரசிகர்கள்... தடுமாறும் நிர்வாகிகள்!

‘தந்தை பெரியாரை இழிவுபடுத்திப் பேசிய ரஜினிகாந்தே மன்னிப்பு கேள்!’ என்ற கோஷத்துடன் சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர் திராவிடர் விடுதலைக் கழகத்தினர். அப்போது மீடியாக்களிடம் பேசிய சிலர், ‘ரஜினிகாந்தை தமிழகத்துக்குள் நடமாட விட மாட்டோம். அவரை உயிரோடு விட மாட்டோம்’ என்றெல்லாம் வார்த்தைகளை விட, ரசிகர்கள் கொதித்தெழுந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் முருகுபாண்டியன், ‘எங்கள் தலைவர் வீட்டின் முன் நாங்கள் 1000 பேர் நிற்போம். முடிந்தால் தொட்டுப்பாருங்கள்’ என ட்விட்டரில் போட்ட விஷயம் தீயாகப் பற்றியது. தன்னை ரஜினியின் வழக்கறிஞர் என்று சொல்லிக்கொண்டு, சென்னை போலீஸில் புகார் கொடுத்தார் மன்ற நிர்வாகி அசோக். ‘திராவிடர் விடுதலைக் கழகத்தினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சென்னை போலீஸில் புகார் கொடுத்தார். அதையடுத்து கோவை, மதுரை, சேலம் ஆகிய ஊர்களில் போலீஸில் மக்கள் மன்றத்தினர் அடுத்தடுத்து புகார் செய்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மற்ற ஊர்களிலும் இதே பாணியில் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி ரசிகர்கள் படையெடுக்க, ‘புகார் எதுவும் கொடுக்க வேண்டாம்’ என்று ரஜினி வீட்டிலிருந்து தகவல் போனது. அதைக் கேட்ட மன்ற நிர்வாகிகள் தடுமாற்றத்தில் தவித்தனர். ‘தேவைப்பட்டால் ரஜினி அறிக்கை கொடுத்திருப்பாரே! அவர் சொன்னதாக நீங்கள் சொல்வதை நம்ப முடியாது. ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மன்றத்தின் அடிமட்ட உறுப்பினர்கள் முரண்டுபிடித்தனர். இவர்களைச் சமாதானப்படுத்த முடியாமல் நிர்வாகிகள் திணறினர். ‘மன்னிப்பு கேட்க முடியாது என்று கொக்கரித்த ரஜினி, ஏன் எங்களை அடக்க வேண்டும், அவர் ஏன் மெளனம் காக்க வேண்டும்?’ என்று மன்றத்தினர் தமிழகம் முழுக்க பேசிவருகின்றனர்.

ரஜினி
ரஜினி

இதற்கிடையில் மன்ற நிர்வாகியான அசோக், ‘ரஜினியின் தீவிர ரசிகர் என்ற முறையில்தான் திராவிடர் விடுதலைக் கழகத் தினரின்மீது போலீஸில் புகார் கொடுத்தேன். நான் ரஜினியின் அதிகாரபூர்வ வழக்கறிஞர் அல்ல’ என்று ட்வீட் செய்ய, இதை ரஜினி மக்கள் மன்றத் தலைமை நிர்வாகி சுதாகர் ரீ-ட்வீட் செய்தார். பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் ரீ-ட்வீட் செய்தனர். கடந்த ஒரு வருடக்காலத்தில், சமூகப்பணிகள் தவிர மன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கிவைத்திருக்கிறார் ரஜினி. அப்படியிருக்க, முதன்முறையாக அசோக்கின் ட்வீட்டை வெளியிட்டனர்.

அதோடு, ‘நான் பார்த்துக்கொள்கிறேன்; மன்றத்தினர் யாரும் தலையிட வேண்டாம் என்று நான் சொல்லிய பிறகும், என் வார்த்தையை மீறி போலீஸில் புகார் கொடுக்க எப்படிப் போனார்கள்? இங்கிருந்து யாராவது ரகசிய உத்தரவு போட்டார் களா?’ என்று ரஜினி கோபமாக விசாரித்திருக்கிறார். அப்போதுதான், அவருக்கு சில தகவல்கள் தெரியவந்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லதா சொன்னாரா... சந்திரகாந்த் சொன்னாரா?

ரஜினிகாந்தின் மனைவி லதா ‘பீஸ் ஃபார் சில்ரன்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை நடத்திவருகிறார். ரஜினி மக்கள் மன்றத்தில் இருப்பவர்கள், இந்த அமைப்பில் இருக்கக் கூடாது என்று உத்தரவு. இருந்தும், மக்கள் மன்றத்தில் புதிதாக பதவிக்கு வந்தவர்களின் எதிர் கோஷ்டியினர், மன்றத்தைவிட்டு கட்டம் கட்டப்பட்டவர்கள் ஆகியோர் ஓரிரு இடங்களில் லதா அமைப்பின் பெயரில் வலம்வருவதாக ரஜினிக்கு ஏற்கெனவே புகார் போனது. ரஜினி ரசிகர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் அவர்களை, மன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்று முன்பே ரஜினி கண்டித்தார். தற்போது போலீஸில் புகார் கொடுக்க வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பிய சிலரின் பின்னணியை விசாரித்தபோது, அந்த அமைப்புடன் தொடர்பில் உள்ளதாக ரஜினிக்குத் தெரியவந்திருக்கிறது. அதையடுத்து, லதாவிடம் இதுபற்றி ரஜினி பேசியதாகத் தெரிகிறது. உடனே லதா தரப்பிலிருந்து, ‘அமைப்பின் முக்கியஸ்தர்கள் யாரும் போலீஸுக்குப் போகக் கூடாது’ என்று அவசர தகவல் போனது.

ரஜினிகாந்த் வீட்டின் முன் போலீஸ் பாதுகாப்பு
ரஜினிகாந்த் வீட்டின் முன் போலீஸ் பாதுகாப்பு

ரஜினியின் அண்ணன் மருமகன் சந்திரகாந்த், கர்நாடகத்தில் ரஜினி ரசிகர் மன்ற மாநிலப் பொறுப்பில் இருக்கிறார். அவர் அங்கிருந்து தமிழகத்துக்கு விசிட் அடித்து மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுவதாகக் கேள்விப்பட்ட ரஜினி, தன் அண்ணனை ஒன்றரை மாதம் முன்பு அழைத்துப் பேசினார். அத்துடன் சந்திரகாந்த்தின் நடமாட்டம் அடங்கியது. தற்போது `போலீஸில் புகார் கொடுக்க சந்திரகாந்த் பச்சைக்கொடி காட்டினாரா?’ என்று தனி விசாரணை நடத்தினார் ரஜினி. தன் குடும்பத்தினருக்குத் தடைபோட்டதும், தமிழகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் கப்சிப் ஆனார்கள்.

ரஜினிக்குத் தேவை ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு!

ரஜினி வீட்டில் செக்யூரிட்டிகள் உண்டு. இருப்பினும், மெட்டல் டிடெக்டர் மாதிரியான பாதுகாப்புச் சாதனங்களைப் பொருத்திவைக்கும்படி ரஜினியின் போலீஸ் துறை நண்பர்கள் பலமுறை சொல்லியும், அவர் கேட்கவில்லையாம். அதிகாலை நேரத்தில் ரஜினி தினமும் ஹெட்போனை மாட்டியபடி போயஸ் கார்டன் ஏரியாவில் வாக்கிங் போவது வழக்கம். ரஜினி வாக்கிங் செல்வதை, யாரோ ஒரு நபர் மறைந்து நின்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிந்ததையடுத்து, வீட்டு அருகே வாக்கிங் போவதை நிறுத்திவிட்டு, பெசன்ட் நகர் பீச்சுக்குச் செல்ல ஆரம்பித்தாராம். அங்கே ஒரு கடையில் ஏதோ பொருள் வாங்கியபோது, இன்னொரு நபர் அதை மறைந்து இருந்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டாராம். இதுவும் ரஜினியை ரொம்பவே சங்கடப் படுத்தியதாம். இதுபோன்ற மறைமுகத் துரத்தல்கள் ரஜினிக்கு இருக்கத்தான் செய்தன.

தற்போது கிளம்பியுள்ள பெரியார் சர்ச்சைக்குப் பிறகு, ரஜினியின் உயிருக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘ரஜினிக்கு ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு வழங்குவது நல்லது’ என்று சென்னையில் உள்ள மத்திய உளவுத் துறையினர் மத்திய உள்துறைக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக் கிறார்களாம். அதைக் கேள்விப்பட்ட ரஜினி, மத்தியில் தன்னோடு தொடர்பில் உள்ளவர்களிடம், ‘அதெல்லாம் வேண்டாம்’ என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம். அதனால், மத்திய அரசு குழம்பிப்போய் நிற்கிறது.

ரஜினி ஏன் மௌனம் காக்கிறார்?

‘‘ஒரு சில படங்கள் நடித்து முடித்து, அதன்மூலம் வந்த வருமானத்தை வைத்து ஆகஸ்ட் மாதத்தில் கட்சி ஆரம்பிக்கும் மூடில் இருக்கிறார் ரஜினி. அதுவரை எந்தவிதமான பிரச்னையும் ஏற்பட்டுவிடக் கூடாது என நினைக்கிறார். அதனால்தான் தற்போது பதுங்குகிறார். கூடியவிரைவில் பாய்வார்’’ என்று பொடிவைத்துப் பேசுகிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.

இந்நிலையில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம், ரஜினியை உச்சபட்சக் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். ‘ரோஜா’ படப் பிரச்னையின்போது இயக்குநர் மணிரத்னத்தின் வீட்டில் வெடிகுண்டு வீசியபோதுதான், ஜெயலலிதா அரசை எதிர்த்துக் கொந்தளித்தார் ரஜினி. ‘‘மீண்டும் அதுபோல் ரஜினி உக்கிர அவதாரம் எடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை’’ என்றும் சொல்கிறார்கள் அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism