Published:Updated:

எழுவர் விடுதலை... உருகும் குடும்பத்தினர்... எங்களுக்கு ஏக்கம் இருக்கிறது!

எழுவர் விடுதலை
பிரீமியம் ஸ்டோரி
News
எழுவர் விடுதலை

ஓவியங்கள்: மேரி

‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருக்கும் ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து அறிவுறுத்திவருகிறது. இம்மாதம் முதல் வாரத்தில் நடந்த விசாரணையிலும்கூட ‘எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது. அதேசமயம் கால தாமதம் செய்வதை ஏற்க முடியாது’ என்று கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த நிலையில், சிறையில் இருக்கும் ஏழு பேரின் குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்?

எழுவர் விடுதலை... உருகும் குடும்பத்தினர்... எங்களுக்கு ஏக்கம் இருக்கிறது!

மதிசுதா, சாந்தனின் சகோதரர், இலங்கை

“நான் இந்தியா வந்து சிறையில் என் அண்ணனைப் பார்த்திருக்கிறேன். ஆனால், முதுமையில் இருக்கும் அம்மாவால் இந்தியா வந்து அண்ணனைப் பார்க்க முடியவில்லை. என் அண்ணன் குற்றம் செய்தாரா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். முப்பதாண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்துவருகிறார்கள். இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஜீவகாருண்யத்தைப் போதிக்கும் நாடு. அந்த வகையில் அவர்களை மன்னித்து விடுதலை செய்யுங்கள். தவிர, சட்டரீதியாகவும் எழுவரின் விடுதலையில் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் தெரிவித்திருக்கிறது. இதை அடிப்படையாகக்கொண்டு தமிழக முதல்வர், முன்பு வாக்குறுதி அளித்தபடி ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும். எங்கள் அப்பா, அண்ணனைப் பார்க்காமலேயே இறந்துவிட்டார். அம்மாவுக்கும் ஒரு கண்ணில் பார்வை போய்விட்டது. இன்னொரு கண்ணால், அண்ணாவின் விடுதலை பற்றி செய்தி வருமா என்றே எப்போதும் செய்தி சேனல்களைப் பார்த்துக்கொண்டிருப்பார். அவர் இறப்பதற்கு முன்பாக ஒரு நாளேனும் அண்ணனுடன் இருக்க விரும்புகிறார்.’’

எழுவர் விடுதலை... உருகும் குடும்பத்தினர்... எங்களுக்கு ஏக்கம் இருக்கிறது!

கமலராணி, ராபர்ட் பயாஸின் தாயார், இலங்கை

“30 வருஷமா என் புள்ளை ஒருபக்கம், அவன் மனைவி ஒருபக்கம், மகன் ஒருபக்கம் என எங்கள் குடும்பமே சிதறுண்டு போய்க் கெடக்கு. என் பிள்ளையைப் பார்த்துட்டுத்தான் கண் மூடணும்னு, என் உயிரைக் கையில புடிச்சுக்கொண்டு காத்துக் கெடக்கேன். முப்பது வருஷத்துக்கும் மேல, என் பிள்ளையை ஏன் சிறையிலவெச்சு கஷ்டப்படுத்துறாங்க. சட்டமே அவங்கள விடுதலை பண்ணலாம்னு சொன்ன பின்னாடியும் ஏன் சிறையில வெச்சிருக்காங்கன்னு தெரியலை. இந்திய அரசையும், தமிழ்நாட்டு அரசையும் வேண்டிக் கேட்டுக்குறேன், என் பிள்ளையை தயவுசெய்து விடுதலை செய்யுங்கோ.’’

எழுவர் விடுதலை... உருகும் குடும்பத்தினர்... எங்களுக்கு ஏக்கம் இருக்கிறது!

ராஜேஸ்வரி, முருகனின் சகோதரி, லண்டன்

“என் தம்பி முருகனும், அவரின் மனைவி நளினியும் முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடிவருகிறார்கள். தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை அவர்கள் சிறையில் கழித்துவிட்டார்கள். மீதிமிருக்கும் காலத்திலாவது, அவர்களுடைய வயது முதிர்ந்த பெற்றோருடன் கழிக்க மாட்டார்களா என்கிற ஏக்கம் அவர்களுக்கும் எங்களுக்கும் இருக்கிறது. தமிழக முதல்வர் நினைத்தால் கண்டிப்பாக அவர்களை விடுதலை செய்ய முடியும். உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து, தமிழக முதல்வர் அவர்களை விடுதலை செய்வார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு முற்று முழுதாக இருக்கிறது. விரைவில் அவர்களை விடுதலை செய்து எங்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்.’’

எழுவர் விடுதலை... உருகும் குடும்பத்தினர்... எங்களுக்கு ஏக்கம் இருக்கிறது!

அற்புதம்மாள், பேரறிவாளனின் தாயார், ஜோலார்பேட்டை

“என் மகன் விடுதலை வழக்கின் இறுதி விசாரணை வரும் பிப்ரவரி 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்துக்கு வருகிறது. மூத்த வழக்கறிஞரை அமர்த்தி தமிழக அரசும் விடுதலைக்குத் துணை நிற்கிறது. தமிழக அரசின் துணையுடன் 31 ஆண்டுக்கால போராட்டம், எனது கண்ணீரை முடிவுக்குக் கொண்டுவரும்... நீதி கிடைக்கும். பிப்ரவரி 3-ம் தேதி என் மகன் விடுதலையாகி வருவான்.’’

எழுவர் விடுதலை... உருகும் குடும்பத்தினர்... எங்களுக்கு ஏக்கம் இருக்கிறது!

ராஜேஸ்வரி, ரவிச்சந்திரனின் தாயார், அருப்புக்கோட்டை

“கண்டிப்பா என் மகனை விடுதலை செய்திடுவாங்கன்னு எதிர்பார்ப்போட இருக்கோம். தமிழக முதல்வர் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்னு நம்பிக்கை இருக்கு. அதுவரைக்கும் பரோலை நீட்டிக்கணும்னு கேட்டுக்குறோம். என் உடல்நிலையும் சரியா இல்லை. பையனோட இருக்குற நேரம்தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு. இந்த அரசு நல்ல முடிவா எடுக்கணும்னு கேட்டுக்குறோம்.’’

எழுவர் விடுதலை... உருகும் குடும்பத்தினர்... எங்களுக்கு ஏக்கம் இருக்கிறது!

பத்மாவதி, நளினியின் தாயார், சென்னை

“உச்ச நீதிமன்றம், எழுவர் விடுதலையில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்கிற கருத்தை வலியுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் நளினி உட்பட அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு மீண்டும் ஒருமுறை ஆளுநரை வலியுறுத்த வேண்டும்.’’

எழுவர் விடுதலை... உருகும் குடும்பத்தினர்... எங்களுக்கு ஏக்கம் இருக்கிறது!

ஜெனந்தன், ஜெயக்குமாரின் சகோதரர், ஜெர்மனி

“எங்கள் அப்பா முப்பது வருடங்களாக என் அண்ணனின் முகத்தைக்கூடப் பார்க்காமல் இறந்துபோய்விட்டார். ஒவ்வொரு நாளும் அண்ணனைப் பார்க்க வேண்டும் என்கிற வலியோடும் கஷ்டத்தோடும்தான் அவர் வாழ்ந்து மறைந்தார். அவர் இறப்புக்குக்கூட அண்ணனால் வர முடியவில்லை. எங்கள் அம்மாவுக்கு 80 வயதாகிவிட்டது. அவரும் நோய்வாய்ப்பட்டு, நித்தமும் அண்ணனின் சிந்தனையோடே வாழ்ந்துவருகிறார். என் அண்ணன் மட்டுமல்லாமல், என் சகோதரியின் கணவர் ராபர்ட் பயாஸும் சிறையில் இருப்பதால், எங்கள் அம்மா மிகவும் வேதனையில் தவிக்கிறார். இந்தியாவில் ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் வரும்போதும், எங்கள் அண்ணன் விடுதலையாகிவிடுவார் என்று நம்பிக்கையோடு இருந்து ஏமாந்துதான் போவோம். இந்தமுறை, முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ‘ஏழு பேரையும் விடுதலை செய்வோம்’ என வாக்குறுதி கொடுத்திருந்தார். அவர்மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அவரின் முயற்சிக்கு மத்திய அரசும் ஒத்துழைக்க வேண்டும்.’’