அலசல்
சமூகம்
Published:Updated:

32 ஆண்டுகள் சிறைவாசம்... ஆறு பேர் விடுதலை... கடந்துவந்த பாதை!

ஆறு பேர் விடுதலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஆறு பேர் விடுதலை

சிறைவாசிகளில் 99 சதவிகிதத்தினர் எங்களைப்போல சாதாரணப் பின்னணி கொண்டவர்கள்தான். அதிலும், இது அரசியல் வழக்கு என்பதால், எங்களை அரசாங்கத்தின் எதிரியாகவே பார்த்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாகச் சிறையிலிருந்த முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் நளினி, ரவிச்சந்திரனைத் தவிர மற்ற நால்வரும் வெளிநாட்டினர் என்பதால், திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், விடுதலையான நளினியிடம் பேசினோம்...

``32 ஆண்டுகளுக்குப் பிறகு, வீட்டைவிட்டு வெளியே காலடி எடுத்துவைக்கும் அந்த உணர்வை என்னால் வார்த்தைகளால் விவரிக்கவே முடியவில்லை. என் தம்பியுடன் கடற்கரைக்குப் போய் அலைகளில் கால் நனைத்தேன். நிறைய கொடுமையான காலங்களை அனுபவித்துவிட்டேன். இந்த வழக்கில் தொடர்ச்சியாகப் பல தோல்விகளை மட்டுமே சந்தித்துவந்தேன். என்னுடைய மகளை நினைத்துப் பல இரவுகளில் தூங்காமல் இருந்திருக்கிறேன். இந்த முறையும் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி ரிஜெக்ட் செய்துவிடுவார்கள் என்றுதான் பயந்தேன். 32 வருடங்கள் ஆனபோதும்கூட, தமிழ் மக்கள் என்னை மறக்கவில்லை. தமிழ் உணர்வாளர்கள் என்னை ஆதரித்து நின்றார்கள். வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், துரைசாமி சார் உள்ளிட்ட பலர் எனக்கு மிகப்பெரிய உதவிகளைச் செய்திருக்கின்றனர். இன்னும் எத்தனை கோடி ஜென்மம் எடுத்தாலும், தமிழ் மண்ணில்தான் பிறக்க வேண்டும். அதேவேளையில், என்னுடைய கணவர் முருகன் சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். எங்கள் மகள், `அப்பாவைப் பார்க்க வேண்டும், அவர் எப்போது வெளியே வருவார்’ எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறாள். அவரும் விரைவில் முழுமையாக வெளியே வர வேண்டும். அதுதான் எங்களின் எதிர்பார்ப்பு’’ என்கிறார்.

ஆறு பேர் விடுதலை
ஆறு பேர் விடுதலை

ரவிச்சந்திரனோ, “32 ஆண்டுகள் சிறைக்குள், தனியறைக்குள் வாழ்க்கை என்பது மிகவும் துயரமானது. அதிலிருந்து விடுதலையாகி வெளியில்போய் என் ஊர், தோட்டத்தைப் பார்த்ததே புதிய அனுபவமாக, நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தக் கடுமையான நெருக்கடிகளைச் சமாளிக்க என் குடும்பத்தினர் மிகவும் உறுதுணையாக இருந்தனர்.

சிறைவாசிகளில் 99 சதவிகிதத்தினர் எங்களைப்போல சாதாரணப் பின்னணி கொண்டவர்கள்தான். அதிலும், இது அரசியல் வழக்கு என்பதால், எங்களை அரசாங்கத்தின் எதிரியாகவே பார்த்தனர். அந்தவகையில், எங்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் பத்து, இருபது மடங்கு அதிகமாகவே நெருக்கடிகள் இருந்தன. சிறை விதிகளின்படி, ஒரு சிறைவாசிக்குக் கிடைக்கவேண்டிய அடிப்படையான விஷயங்களுக்குக்கூட நாங்கள் போராட வேண்டியிருந்தது. ஜெயலலிதா அம்மையார் அறிவித்தபோதே நாங்கள் விடுதலையாகியிருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் அரசு அதற்கு எதிராக அப்பீலுக்குப் போனது. அரசு, சட்டம் எனப் பார்க்காமல், தங்களின் அதிகாரத்துக்கு விடப்பட்ட சவாலாக நினைத்து அந்த அறிவிப்பை எதிர்த்தனர். எல்லாவற்றையும் கடந்து இப்போது விடுதலையாகியிருக்கிறோம்’’ என்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு - டைம் லைன்

1991, மே 21: தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்துக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை.

1991, மே 22: ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு.

1991, மே 24: வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம்.

1991, ஜூன் 11 முதல் 26 வரை: பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகியோர் கைது.

1992, மே 20: 41 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல். 26 பேர் சிறையிலடைப்பு.

1998, ஜனவரி 28: ‘26 பேருக்கும் தூக்குத் தண்டனை’ - சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

1999, மே 11: `தண்டனைக் காலம் முடிந்ததாகக்கூறி 19 பேர் விடுதலை. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மூவருக்கு ஆயுள் தண்டனை. பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி நால்வருக்கும் தூக்கு தண்டனை உறுதி’ - உச்ச நீதிமன்றம்.

1999, அக்டோபர் 10: பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோர் ஆளுநருக்குக் கருணை மனு.

1999, அக்டோபர் 29: அன்றைய ஆளுநர் பாத்திமா பீவியால் கருணை மனுக்கள் தள்ளுபடி.

1999, நவம்பர் 25: ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக நான்கு பேரும் உயர் நீதிமன்றத்தை நாட, `அமைச்சரவை முடிவின் மீதே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்’ எனக்கூறி ஆளுநரின் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்.

2000, ஏப்ரல் 24: `நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு’ - தமிழ்நாடு அரசு அரசாணை.

2000, ஏப்ரல் 26: பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு.

2011, ஆகஸ்ட் 12: மூவரின் கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்தார் அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

2014, பிப்ரவரி 18 -19: `கருணை மனுக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டதால், மூவரின் மரண தண்டனை ரத்து’ - நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு உத்தரவு. ஏழு பேரும் விடுதலையாவார்கள் என அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு. (தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய காங்கிரஸ் அரசு தடையாணை பெற்றது.)

2016, பிப்ரவரி 24: தந்தை மறைவையொட்டி நளினிக்கு முதன்முறையாக பரோல்.

2016, மார்ச் 2: ஏழு பேர் விடுதலைக்கு அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கடிதம். மத்திய பா.ஜ.க அரசு நிராகரிப்பு.

2017, ஆகஸ்ட் 24: பேரறிவாளனுக்கு முதன்முறையாக பரோல்.

2018, செப்டம்பர் 6: `விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கலாம்’ -உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு.

2018, செப்டம்பர் 9: தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

2021, மே 20: தமிழ்நாடு அரசு சார்பில் குடியரசுத் தலைவருக்குக் கடிதம்.

2022, மார்ச் 9: பேரறிவாளனுக்கு முதன்முறையாக உச்ச நீதிமன்றம் ஜாமீன்.

2022, மே 18: ஆளுநர் காலம் தாழ்த்தியதையடுத்து, சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்.

2022 நவம்பர் 11: `பேரறிவாளன் விடுதலையின் அடிப்படையில், சிறையிலிருந்த ஆறு பேரும் விடுதலை’ - உச்ச நீதிமன்றம் உத்தரவு.