Published:Updated:

இரண்டு பெண் அதிகாரிகளால் முருகன் உயிருக்கு ஆபத்து?

முருகன்
பிரீமியம் ஸ்டோரி
முருகன்

திடுக்கிட வைக்கும் வழக்கறிஞர்

இரண்டு பெண் அதிகாரிகளால் முருகன் உயிருக்கு ஆபத்து?

திடுக்கிட வைக்கும் வழக்கறிஞர்

Published:Updated:
முருகன்
பிரீமியம் ஸ்டோரி
முருகன்

“என் உயிருக்கு ஆபத்துள்ளது. மனஉளைச்சலை ஏற்படுத்தி, தற்கொலைக்குத் தூண்டுகின்றனர். என் மரணத்தை எதிர்பார்த்து வேலூர் சிறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்” என்று கதறுகிறார் முருகன். இதற்குப் பின்னால் சில அரசியல் ஆளுமைகள் மறைந்திருப்பதாக சிறைத்துறையை வட்டமிடுகிறது, புதிய சர்ச்சை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளான முருகனும், அவர் மனைவி நளினியும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நளினி
நளினி

அக்டோபர் 18-ம் தேதி, முருகனை அடைத்திருந்த அறையில் நடத்தப்பட்ட சோதனையில் ஆண்ட்ராய்டு செல்போன், இரண்டு சிம் கார்டுகள், ஒரு ஹெட்செட் கிடைத்ததாகச் சொல்லி முருகன்மீது வழக்கு பதிவுசெய்தனர். சிறை விதிகளை மீறிவிட்டதால், 15 நாள்களுக்கு ஒருமுறை நளினியைச் சந்திப்பது, பார்வையாளர்கள் சந்திப்பு உட்பட அனைத்து சிறப்புச் சலுகைகளையும் மூன்று மாதத்துக்கு ரத்துசெய்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உயர் பாதுகாப்புப் பிரிவு மூன்றில் இருந்த முருகன், முதல் பிரிவில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கின் விசாரணைக்காக, அக்டோபர் 31-ம் தேதி துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

புகழேந்தி
புகழேந்தி

அப்போது செய்தியாளர்களிடம் `‘சிறையில் தன்னை கொடுமைப் படுத்துகிறார்கள்’’ என்று கதறிய முருகன், “தனி அறையில் அடைத்து உணவு தர மறுக்கிறார்கள். பல் துலக்க, குளிக்க, துணி துவைக்க என எதற்கும் அனுமதிப்பதில்லை. எனக்கு இழைக்கப்படும் கொடுமை குறித்து முதல்வருக்கு நான்கு பக்க அளவில் கடிதம் எழுதினேன். அதை முதல்வருக்கு அனுப்பாமல் சிறை அதிகாரிகளே வைத்திருக்கிறார்கள். எனக்கு மருத்துவப் பரிசோதனை செய்தாலே உடல் பலவீனம் தெரியவரும். நிலைமை இப்படி இருக்கும்போது இவர்களை ஏமாற்றி சிறைக்குள் நான் செல்போன் பயன்படுத்த முடியுமா? அதிகாரிகள் நாடகமாடுகிறார்கள். சிறை அதிகாரிகள் நினைத்தால் யார்மீது வேண்டுமானாலும் பழிபோடுவார்கள்.

இலங்கையில் உள்ள என் தந்தையின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது. சிகிச்சைக்காக அவர் தமிழகம் அழைத்துவரப்படுகிறார். அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக நளினியும் நானும் பரோல் கேட்டு விண்ணப்பித்தோம். அதைத் தடுக்கத்தான் சிறை அதிகாரிகள் இப்படிச் செய்கிறார்கள். தமிழக அரசு எங்களுக்கு எதிராக இல்லை. இதன் பின்னணியில் வேறு யாரோ இருக்கிறார்கள்” என்று பொங்கினார்.

மத்திய சிறை
மத்திய சிறை

இதுகுறித்து முருகனின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம்.

“முருகன், கடவுள் நம்பிக்கை உடையவர்; காவி உடையைத்தான் எப்போதும் உடுத்துவார். சிறை அதிகாரிகள், காவி உடையைப் பறித்து வெள்ளை பேன்ட்- சட்டையைக் கொடுத்துள்ளனர். விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து வரும்போது மட்டுமே காவி உடையை அணிந்துகொள்ள அனுமதிக்கின்றனர். அவர் அறையில் வைத்திருந்த ஸ்வாமி படங்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர். அதைக் கண்டித்துதான் முருகன் உண்ணாவிரதம் இருக்கிறார். கணவருக்கு ஆதரவாக நளினியும் சாப்பிடாமல் இருக்கிறார்.

இருவரையும் சிறையில் சந்தித்துப் பேசினேன். முருகனின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கிக்கிடந்துள்ளார். ‘சிறைத்துறை பெண் உயரதிகாரிகள் இரண்டு பேர்தான் தங்களை தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள்’ என்று இருவரும் கூறினர்.

முருகன்
முருகன்

அந்த அதிகாரிகளின் பின்னணியை என்னால் கண்டறிய முடியவில்லை. ஏழு பேரின் விடுதலையை விரும்பாத எவரோதான் சிறை அதிகாரிகளை இயக்குவதாக நினைக்கிறேன். வேலூர் சிறையில் உணவு, கைதிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் போன்றவற்றில் மாதத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய்க்குமேல் ஊழல் நடக்கிறது. இதுதொடர்பாக சிறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தேன். அதன் தொடர்ச்சியாகத்தான் என்னைப் பழிவாங்குவதாக நினைத்து முருகனைத் தொந்தரவு செய்கிறார்கள். நளினி, முருகனை சித்ரவதை செய்யும் சிறை அதிகாரிகள்மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பேசினோம். “உயர் பாதுகாப்புப் பிரிவில் உள்ள தனி அறையில்தான் இத்தனை ஆண்டுகளாக முருகன் அடைக்கப்பட்டுள்ளார். உணவு தரப்பட்டவில்லை, கொடுமைப்படுத்துகிறோம் என்பதெல்லாம் பொய். அவரின் உடல்நிலையை, மருத்துவர்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். சிறை விதிகளின்படி நடந்த சோதனையின்போது அவரிடமிருந்து செல்போன் கைப்பற்றப்பட்டது உண்மை. அதை மறைப்பதற்காகத்தான் தன் வழக்கறிஞர் மூலம் சிறைத்துறை அதிகாரிகளைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பிவருகிறார். சிறையில் ஊழல் நடப்பதாக வழக்கறிஞர் வைக்கும் குற்றச்சாட்டு, முழுக்க முழுக்கப் பொய். சிறைக்கென்று தனியாக விஜிலென்ஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களை கண்காணித்துவருகிறார்கள்” என்றனர் தீர்க்கமாக.

அரசு, அவசரமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் இது!