Published:Updated:

`போலீஸ் எங்கப்பா..!' - ராம்கோபால் வர்மாவின் டிரிபிள் ரைட் ட்வீட்டும் காவல்துறையின் எதிர்வினையும்

ராம் பிரசாத்

இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் 3 பேர் சென்ற வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டார், ராம் கோபால் வர்மா.

ராம் கோபால் வர்மா
ராம் கோபால் வர்மா ( Twitter )

ராம் கோபால் வர்மா, சர்ச்சைக்கு பெயர் போன இயக்குநர். ஏதாவது ட்வீட் செய்து, சர்ச்சைகளுக்குள் சிக்குவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். தனது ட்விட்ட ர் பதிவு மூலம் தெலங்கானா காவல்துறையினரை வம்புக்கு இழுத்தார். தெலுங்கில் பிரபல இயக்குநர் பூரிஜெகநாத் இயக்கத்தில் வெளியான 'ஐ ஸ்மார்ட் சங்கர்' திரைப்படம், ஆந்திராவில் உள்ள திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன், ராம்கோபல் வர்மா தனது ட்விட்டர் பதிவில், 'ஐ ஸ்மார்ட் ஷங்கர்' படம் என்னை பைத்தியமாக்கிவிட்டது என ட்வீட் செய்திருந்தார். பீர் பாட்டிலை ஓப்பன் செய்து தலையில் ஊற்றியவாறு ஒரு வீடியோவும் அதில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று ஒரு ட்வீட் செய்திருந்தார். மூசாபேட்டில் உள்ள திரையரங்கில், 'ஐ ஸ்மார்ட் சங்கர்' திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை காண்பதற்காக இரு சக்கர வாகனத்தில் இயக்குநர் ராம்கோபால் வர்மா, அஜய் பூபதி, அகஷ்தியா ஆகியோர் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். இவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிலர் செல்ஃபியும் எடுத்தனர்.

இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் 3 பேராகச் சென்ற வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட ராம் கோபால் வர்மா, `இந்த போலீஸ் எல்லாம் எங்கப்பா? ஓ எல்லாரும் 'ஐ ஸ்மார்ட் சங்கர்' படத்தை தியேட்டரில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் போல, ' என ட்வீட் செய்தார்.

காவல்துறை அனுப்பிய இ - சலான்
காவல்துறை அனுப்பிய இ - சலான்

ட்வீட்டை அடுத்து, தெலங்கானா காவல்துறைக்கு புகார் சென்றது. அந்த ட்வீட்டுக்கு நச் கமென்ட் கொடுத்ததுடன், ``சாலை விதிமீறல்களை சுட்டிக்காட்டியதற்கு நன்றி ராம் கோபால் வர்மா. இந்தப் பொறுப்புணர்வு, சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதிலும் உங்களுக்கு இருக்க வேண்டும். திரையரங்குகளில் மட்டுமல்ல சாலையில் நடக்கும் டிராமாக்கள், சர்க்கஸ்கள் அனைத்தையும் போக்குவரத்து காவல்துறையினர் கண்காணித்துக்கொண்டு தான் இருக்கிறோம்” என்று பதிவிட்ட காவல்துறையினர், அல்டிமேட் லெவலாக சாலை விதிகளை மீறியதற்காக அபராதத்தை இ-செலானாக அனுப்பினர். ஹெல்மெட் அணியாததற்கு ரூ.100, இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்ததற்காக ரூ.1,200 ஆக மொத்தம் ரூ.1300 அபராதமாகச் செலுத்த வேண்டும் என அந்த செலானில் தெரிவித்துள்ளனர்.