சினிமா
Published:Updated:

“கொரோனா: மூன்றாவது அலைக்கும் வாய்ப்பிருக்கிறது!”

கொரோனா டெஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா டெஸ்ட்

தடுப்பூசி போட்டுக்கொள்வோரில் மிக மிகச் சிலருக்கு அது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது மரணத்திலும் முடியலாம்.

கோவிட் 19 பெருந்தொற்றின் இரண்டாவது அலை ஆட்டத்தைப் பார்த்து ஆடிப்போயிருக்கிறது இந்தியா. ‘அடுத்தடுத்த வாரங்கள் சவாலானவை’ என அரசு விடும் எச்சரிக்கைகள் இன்னொரு பக்கம் மக்களை பீதியடைய வைக்கின்றன. இந்நிலையில் ‘‘மூன்றாவது அலையும் தாக்கலாம்... தயாராக இருங்கள்’’ என எச்சரிக்கிறார் ரமணன் லட்சுமிநாராயணன். வாஷிங்டனின் ‘சென்டர் ஃபார் டிசீஸ் டைனமிக்ஸ், எகனாமிக்ஸ் அண்ட் பாலிசி’ அமைப்பின் இயக்குநர். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் துறையில் விரிவுரையாளர். கொரோனா இந்தியாவுக்குள் அடியெடுத்துவைப்பதற்கு முன்பே ‘அடுத்த ஹாட்ஸ்பாட் இந்தியாதான்’ என்று சொன்ன அவரது கணிப்பு அப்படியே பலித்தது. ‘கொரோனா 2.0’வை எப்படி எதிர்கொள்வது, வரப்போகிற நாள்கள் எப்படி இருக்கக்கூடும்... இப்படி ஏராளமான கேள்விகள் நம்மிடம்.

உலகமே தடுப்பூசி என்ற ஒற்றை ஆயுதத்தை நம்பிக்கொண்டிருக்கும் வேளையில், அதுதொடர்பான சர்ச்சை, நடிகர் விவேக்கின் மரணப் பின்னணி போன்ற செய்திகள் அந்த நம்பிக்கையை ஆட்டம்காண வைத்திருக்கின்றன. தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாளே நிகழ்ந்த நடிகர் விவேக்கின் மரணத்தையே முதல் கேள்வியாக்கி, பேட்டியைத் தொடர்ந்தேன்.

``நோயிலிருந்து உயிரைக் காக்க வேண்டிய தடுப்பூசி, உயிரையே பறிக்குமா?’’

‘‘தடுப்பூசி போட்டுக்கொள்வோரில் மிக மிகச் சிலருக்கு அது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது மரணத்திலும் முடியலாம். ஆனால், கோவிட் தொற்று பாதித்து மருத்துவமனையில் சேர்வதோடும், தொற்று தீவிரமாகி இறப்பதோடும் ஒப்பிடுகையில் தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகள் மிக மிகக் குறைவு. தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஒருவர் இறப்பதற்கு அதற்கு முன்பே அவருக்குத் தொற்றிய கோவிட் ஒரு காரணமாக இருக்கலாம். ஒருவேளை தடுப்பூசிகளால் தீவிரமான பக்கவிளைவுகளோ, மரணமோ நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தால் நிச்சயம் தடுப்பூசித் திட்டத்தையே அரசு உடனடியாக நிறுத்திவிடும்.’’

``கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?’’

“ஒரு வருடத்துக்கு முன்பு நமக்கு இந்த நோயைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. இன்று நிறைய தூரம் கடந்துவந்திருக்கிறோம். இதை சமாளிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு ‘நோய் எதிர்ப்புத்திறன் இல்லாதவர்கள் தொற்றால் பாதிக்கப்படுவதால், பள்ளிகளைத் திறப்பது, பணியிடங்களில் முழுவீச்சில் பணிபுரிவது போன்ற இயல்பு வாழ்க்கையை நோக்கிய நகர்வுகள் தொற்று எண்ணிக்கையில் மீண்டுமோர் ஏற்றத்தைக் கொண்டு வரும்’ என்று சொல்லியிருந்தேன். உண்மையில் நம் பணி இன்னும் முடியவில்லை. சமநிலையை அடைந்தது போன்ற செயற்கையான சூழலை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நாம் சகஜ நிலைக்குத் திரும்பினால், மீண்டும் நோய் பரவ வாய்ப்புள்ளது. இதுதான் இப்போது நடந்துவருகிறது.”

``கோவிட் தொற்று திடீரென உச்சம் பெற்றதன் காரணம்?’’

“அந்த நோயின் இயற்கையான சுழற்சிதான் காரணம். முதல் அலையில் தொற்றுக்கு ஆளாகாதவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். தடுப்பூசியால் மட்டுமே தொற்றைத் தடுத்துக் குறைத்துவிட முடியாது. அதேநேரம் கடந்த வருடம் லாக்டௌன் போடப்பட்டிருக்காவிட்டால் தொற்று எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என்பதையும் தற்போதைய தொற்று எண்ணிக்கை உயர்வு உணர்த்தியுள்ளது.”

``இந்தியாவின் தடுப்பூசித் திட்டத்தைப் பற்றிய உங்கள் பார்வை?’’

“தடுப்பூசித் தயாரிப்பில் உலகிலேயே மிகப்பெரிய நாடு இந்தியா. ஆனால், சரியான திட்டமிடல் இல்லை. தற்சமயம் இந்தியா ஒரு நாளைக்கு 2.2 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளையே தயாரிக்கிறது. அது இன்னும் சில நாள்களில் 3 மில்லியனைத் தொடலாம். ஆனால் நாம் ஒரு நாளைக்கு 5 மில்லியன் அல்லது அதற்கு மேலானவர்களுக்குத் தடுப்பூசி போட நினைத்தால் நிச்சயம் பற்றாக்குறை வரும். தினசரி 2 மில்லியன் டோஸ், அதில் வேஸ்டேஜையும் சேர்த்துக் கணக்கிட்டால், 70 சதவிகித மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த இன்னும் இரண்டரை வருடங்கள் ஆகும். தடுப்பூசி போட்டுக்கொள்வதில் உள்ள தயக்கம், இந்த இலக்கை அடையத் தடையாக இருக்கும்.”

``தொற்று எண்ணிக்கையின் ஏற்ற இறக்கமும், திடீரென எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் நமக்கு எதை உணர்த்துகிறது?’’

“நம் ஒவ்வொருவரின் நடவடிக்கையும்தான் இதற்குக் காரணம். கடந்த வருடம் எண்ணிக்கை வெறும் 500 ஆக இருந்தபோது இந்தியாவில் லாக்டௌன் அறிவிக்கப்பட்டு பேரழிவுக்கான சூழல் தடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் நம் எச்சரிக்கை உணர்வின் காரணமாக எண்ணிக்கை குறைந்தது. ஆனால், போகப்போக, ‘இந்தியர்கள் ரொம்ப ஸ்பெஷல் எதிர்ப்புத்திறன் கொண்டவர்கள்’ என்ற மனநிறைவுக்கு வந்தார்கள் மக்கள். அதன் விளைவே, இந்தச் சூழல்.”

 “கொரோனா: மூன்றாவது அலைக்கும் வாய்ப்பிருக்கிறது!”

``இந்த இரண்டாவது அலையோடு கொரோனா விடைபெறுமா?’’

“இரண்டாவது அலை மட்டுமல்ல, மூன்றாவது அலைக்கும் இங்கே வாய்ப்பிருக்கிறது. பல நாடுகளிலும் அதுதான் நடந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், டெல்லி நான்காவது அலையின் தாக்கத்தில் இருக்கிறது. பெருவாரியாகப் பரவும் எந்தத் தொற்றுநோயிலும் இது இயல்புதான். ஆனால் இந்த முறை தொற்று எண்ணிக்கை அதிகரித்ததன் காரணம், கட்டுப்பாடுகள் ஏதுமின்றிக் கூடிய மக்கள் கூட்டமும் பயணங்களும்தான்.”

``மீண்டும் முழு முடக்கம் தேவைப்படுமா?’’

“மீண்டும் முழு முடக்கம் என்பது சாத்தியமும் இல்லை, ஏற்புடையதும் இல்லை. தொற்றின் எண்ணிக்கை 500 ஆக இருந்த நிலையில் லாக்டௌன் மூலம் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவது சாத்தியம். ஆனால் இன்று ஒருநாளைக்கு இரண்டேமுக்கால் லட்சத்தைக் கடந்து போய்க்கொண்டிருக்கும் நிலையில் முழு முடக்கம் உதவாது. தவிர இன்னொரு முழுமுடக்கத்துக்கு நாட்டின் பொருளாதார நிலை தாங்காது. எனவே அதைப் பற்றி யோசிக்காமல் தொற்று எண்ணிக்கைக்கேற்ப அந்தந்தப் பகுதிகளில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதுதான் சரி.”

``இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பலருக்கும் தயக்கம் நீடிக்கிறதே... மக்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கட்டாயப்படுத்துவது சரியா?’’

“இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை பெரியவர்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பழக்கம் இல்லை. அதனால் இந்தப் புதிய தடுப்பூசி குறித்த பயம் இருக்கிறது. அடுத்த காரணம், தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து உலவும் தவறான செய்திகள். எமர்ஜென்சி தேவையின் அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, புழக்கத்துக்கு வந்திருக்கும் இந்தத் தடுப்பூசிகள் தொடர்பான விஷயங்களும் விவாதங்களும் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இடையே நடத்தப்பட வேண்டியவை, பொதுவெளியில் அல்ல. ஆனால் இன்று முடிவெடுக்கும் விஷயங்கள் எல்லாம் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நடைபெறுகின்றன. அவர்களால் இந்தத் தகவல்களைப் புரிந்துகொள்ள முடியாது. மூன்றாவதாக, ‘கோவிட் தொற்று என்பது அவ்வளவு பயங்கரமான நோயெல்லாம் இல்லை, இந்தியர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் அவர்களை இந்த நோய் ஒன்றும் செய்யாது, பிறகு ஏன் தடுப்பூசி’ என்கிற தவறான நினைப்பு. யாரையும் தடுப்பூசி போடச் சொல்லி வற்புறுத்த முடியாது. அது முறையானதும் அல்ல. பாசிட்டிவ்வான விஷயங்களைச் சொல்லி அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதுதான் சரியான அணுகுமுறை.”

``தொற்று பாதிப்பில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த அமெரிக்கா, இன்று லாக்டௌன் இல்லாமலேயே நோயைக் கட்டுக்குள் கொண்டு வந்தது எப்படி?’’

“அமெரிக்கா மிகக் குறுகிய காலத்தில் நிறைய மக்களைத் தடுப்பூசி போட வைத்திருக்கிறது. அந்த வகையில் கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்கள். மிகப்பெரிய தொற்று எண்ணிக்கையையும் ஏராளமான மரணங்களையும் சந்தித்துக் கடினமான சூழலுக்குப் பிறகே அங்கே இது சாத்தியமாகியிருக்கிறது. மற்றபடி அவர்கள் இதைச் சிறப்பாக எதிர்கொண்டார்கள் என்று சொல்ல முடியாது.”

``கோவிட் தொற்று முடிவுக்கு வருமா?’’

“நிச்சயம் முடிவுக்கு வரும். அதற்கு ஒவ்வொருவருக்கும் வெற்றிகரமாகத் தடுப்பூசி போட வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, மற்ற நாட்டினருக்கும் சேர்த்து. நோயின் தீவிரம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டே இருப்பது, மக்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்வது - இவை மட்டுமே தொற்று எண்ணிக்கையைக் குறைக்க உதவும். எந்த நாடும் தனித்தீவில்லையே... எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இணைப்பில் இருக்கிறோம். பூமியின் ஏதோ ஒரு மூலையில் கோவிட் தொற்று இருக்கும்வரை அது நமக்கான அச்சுறுத்தல் என்பதில் சந்தேகமில்லை.”

***

ரமணன் லட்சுமிநாராயணன் - நாராயணசாமி
ரமணன் லட்சுமிநாராயணன் - நாராயணசாமி

தமிழகத்தின் இரண்டாம் அலை கொரோனாத் தொற்றின் வேகம் தீவிரமாகியுள்ளது. நாளுக்கு நாள் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இச்சூழலில், கிண்டி கொரோனா மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் கி.நாராயணசாமியிடம் பேசினேன்.

``கொரோனா அறிகுறிகள் மாறியுள்ளனவா?’’

‘‘ஆரம்பத்தில் காய்ச்சல், இருமல், சளி, தலைவலி, உடல்வலி போன்றவை கொரோனாவுக்கான பொதுத் தொற்று அறிகுறிகளாக இருந்தன. இப்போது அறிகுறிகளின் தன்மை மாறியிருக்கிறது. வயிற்று வலி, வாந்தி, தோல் தடிப்பு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளோடு வருபவர்களுக்கும் தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது. முதல் அலைத் தொற்றுபோல இல்லாமல் இரண்டாம் அலைத் தொற்று குடும்பத்தில் எல்லோரையும் பாதித்துவிடுகிறது என்றொரு கருத்து நிலவுகிறது. இதுவும்கூட மிகைதான். முதல் அலையைவிட, இரண்டாம் அலைத் தாக்குதலில் ஃபேமிலி கிளஸ்டர் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது.’’

``குழந்தைகளைக் குறிவைக்கிறதா இரண்டாம் அலை?’’

“முதல் அலை கொரோனாத் தொற்று 20 வயதுக்குட்பட்டவர்களைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை. இரண்டாம் அலைத் தொற்று குழந்தைகளையும் பாதிக்கிறது என்று ஒரு கருத்து நிலவுகிறது. எங்கள் கள அனுபவத்தில் அது உண்மையில்லை. முதல் அலையிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள். 18 வயது முதல் 3 மாதக் குழந்தைகள் வரை பாசிட்டிவ் ரிசல்ட்டோடு வந்தார்கள். அவர்களில் 5 முதல் 10 சதவிகிதம்தான் அட்மிட்டாக வேண்டிய தேவை இருந்தது. அவர்களுக்கும் பெரிய அளவில் சிகிச்சை தேவைப்படவில்லை. அனைவருமே குணமடைந்து சென்றார்கள். இரண்டாம் அலை தொற்றிலும் குழந்தைகள் வருகிறார்கள். அதேமாதிரி சிகிச்சை முடிந்து செல்கிறார்கள். இந்தத் தொற்றின் வேகம் அதிவேகமாக இருப்பதால் பரவல் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. குழந்தைகள் விஷயத்தில் அச்சம் தேவையில்லை. பொதுவிடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லாமல் சத்தான உணவு கொடுத்துக் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டால் எந்தப் பிரச்னையும் வராது.’’

``இறப்பு குறைவாகத்தான் உள்ளது அல்லவா?’’

‘‘தொற்றின் பரவல் வேகம் மிகவும் அதிகமாக இருந்தாலும் இறப்பு விகிதம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதற்குக் காரணம், நமக்கு ஏற்பட்ட அனுபவம். கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையிலேயே கடந்த பத்து மாதங்களில் 14,700 பேர் குணம் பெற்றுச் சென்றிருக்கிறார்கள். மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் சிகிச்சையில் கைதேர்ந்திருக்கிறார்கள். கொரோனாவால் ஏற்படும் குறைந்தபட்ச மரணங்களுக்கும் காலதாமதம்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையளிக்கும் எல்லா மருத்துவமனைகளுக்கும், இப்போது வழங்கப்பட்டிருக்கும் முக்கிய அறிவுரை, ‘ஜீரோ டிலே, ஜீரோ டெத்.’

இப்போது மக்களிடம் விழிப்புணர்வு இருக்கிறது. முன்பு, தொற்று பரவிய பிறகே சோதனைக்குச் சென்றார்கள். இப்போது, அறிகுறிகள் தெரிந்தாலே சோதனை செய்து கொள்கிறார்கள். தற்போது தனியார் ஆய்வகங்களிலும் சோதனை செய்வதால் காலதாமதமும் நடைமுறைச் சிக்கல்களும் குறைந்திருக்கின்றன.’’

``சோதனையில் நெகட்டிவ்... நுரையீரலில் பாதிப்பு?’’

``சிலர், தொடர்ந்து இருமல் காய்ச்சல் இருந்தால் நேராக சி.டி ஸ்கேன் எடுக்கப் போய்விடுகிறார்கள். அதற்கு அவசியமில்லை, ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட்தான் கோல்டன் ஸ்டாண்டர்டு. இந்த டெஸ்ட்டை எடுக்க சில நுட்பங்கள் இருக்கின்றன. அந்த நுட்பங்கள்படி டெஸ்ட் எடுக்கப்பட்டால் தவறு நடக்க வாய்ப்பேயில்லை. சுடுநீரில் உப்புப் போட்டுக் கொப்புளித்துவிட்டோ, ஆவி பிடித்துவிட்டோ வந்து டெஸ்ட் எடுத்தால் சில நேரங்களில் நெகட்டிவ் ரிசல்ட் வரலாம். டெஸ்ட் முறையாக எடுக்காவிட்டாலும் தவறான ரிசல்ட் வரலாம். இப்போது இருக்கும் பேண்டமிக் சூழலில், கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரிந்தால் முதலில் செய்யவேண்டியது, ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட்தான். அதில் நெகட்டிவ் வந்து, தொடர்ந்து இருமல், காய்ச்சல் இருந்தால் சி.டி ஸ்கேன் செய்யலாம். ஆக்ஸி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவையும் தொடர்ந்து பார்க்கவேண்டியது அவசியம்.’’

``இரண்டாம் முறை தாக்குதல்...’’

``ஒருமுறை கொரோனா வந்து குணமாகிச் சென்ற சிலர் இரண்டாம்முறை அறிகுறிகளோடு மருத்துவமனைக்கு வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் உடலில் வைரஸின் தாக்கம் இருக்கும். குறைந்தது 15 நாள்களுக்காவது ஓய்வில் தனியே இருக்கவேண்டும். சத்தான உணவு சாப்பிட வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் உடலிலிருக்கும் வைரஸ் மேலும் ஊக்கமடைந்து செகண்டரி இன்ஃபெக்‌ஷன் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது மிகவும் குறைவு.’’