Published:Updated:

‘40 லட்சம் கிலோ பாலை மீன் குஞ்சுகள்’ தடைமீறிப் பிடிக்கும் கும்பல்...

ராமநாதபுரம்
பிரீமியம் ஸ்டோரி
ராமநாதபுரம்

துணைபோகும் மீன்வளத்துறை அதிகாரிகள்... கொதிக்கும் ராமநாதபுரம் மீனவர்கள்!

‘40 லட்சம் கிலோ பாலை மீன் குஞ்சுகள்’ தடைமீறிப் பிடிக்கும் கும்பல்...

துணைபோகும் மீன்வளத்துறை அதிகாரிகள்... கொதிக்கும் ராமநாதபுரம் மீனவர்கள்!

Published:Updated:
ராமநாதபுரம்
பிரீமியம் ஸ்டோரி
ராமநாதபுரம்

தமிழக - இலங்கை மீனவர் பிரச்னையில் அதிகம் பாதிக்கப்பட்டுவருவது ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்தான். “இரு நாட்டு மீனவர் பிரச்னைகளுக்கும் பிரதானமான காரணம், இங்குள்ள மீன்வளத்துறை அதிகாரிகள்தான். இனப்பெருக்க காலத்தில் லட்சக்கணக்கான மீன்குஞ்சுகளைப் பிடித்து, தனியாருக்கு விற்பனை செய்துவருகின்றனர். இதன் மூலம் செயற்கையாக மீன் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளுகிறார்கள்” எனக் குற்றம்சாட்டுகிறார்கள் மீனவர்கள்!

பாலை மீன்
பாலை மீன்

‘தேசிய பாரம்பர்ய மீனவர்கள் கூட்டமைப்பு’ ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பியிடம் பேசினோம். “எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகத் தமிழக மீனவர்களை, இலங்கை அரசு கைதுசெய்வது ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்துவருகிறது. இதற்கான தீர்வைக் கேட்டு நாங்களும் ஓயாமல் போராடிவருகிறோம். ஆனால், இதுவரை மத்திய, மாநில அரசுகள் இதில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சமீபத்தில் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவுக்குச் சென்றபோது, அந்நாட்டு மீனவர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினோம். ‘தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் அறிவிக்கப்படும் அதேநேரத்தில்தான் இலங்கையிலும் அறிவிக்கப்படுகிறது. ஆனால், எங்களுக்குத் தடைக்காலத்துக்குப் பிறகு மீன்வளம் அதிகமாகிறது. ஆனால், தமிழகக் கடற்பரப்பில் மீன்வளம் குறைவாக இருக்கிறது... ஏன்?’ என்று எங்களிடம் கேள்வி எழுப்பினார்கள். இது தொடர்பாக ஆய்வுசெய்தபோதுதான், எங்களுக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

‘40 லட்சம் கிலோ பாலை மீன் குஞ்சுகள்’ தடைமீறிப் பிடிக்கும் கும்பல்...

இலங்கையைவிட, தமிழக முகவை மாவட்டமான, ராமநாதபுரம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிக அளவில் பாலை மீன் குஞ்சுகள் காணப்படுகின்றன. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டுமே இந்த மீன்கள் இனப்பெருக்கம் செய்யும். அதற்காகத்தான் இரண்டு மாதங்கள் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடைவிதிக்கப்பட்டுவருகிறது. இந்தியாவிலுள்ள மீன் குஞ்சுகள் பொரிப்பகத்தில், பாலை மீன் குஞ்சு உற்பத்தியை இதுவரை செய்ய முடியவில்லை. அதனால் ஆராய்ச்சிக்காகவும், சிறிய அளவிலான பண்ணைகளில் வளர்ப்பதற்காகவும் சில ஆயிரம் பாலை மீன்குஞ்சுகளைப் பிடிப்பதற்கு, தமிழக மீன்வளத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மீன்வளத்துறை அதிகாரிகள் பாலை மீன் குஞ்சுகளை லட்சக்கணக்கில் பிடித்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருக்கும் செயற்கைப் பண்ணைகளுக்கு விற்பனை செய்துவருகின்றனர். வருடத்துக்கு 40 லட்சம் கிலோ வரை பிடிப்பதாகவும், இந்த மீன் வளர்ந்தால் பல்லாயிரம் டன் மீன்களாக மாறும் எனவும், குஜராத் பாலைவனச் சூழலியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றும், முத்துச்சாமி ஜெயக்குமார் மன்னார் வளைகுடா பகுதியில் பிடிக்கப்படும் பாலை மீன்கள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பாலை மீன்களை விரும்பி இரையாக உண்ணும் பெரிய மீன்கள், இவை கிடைக்காததால் திரும்பவும் ஆழ்கடலுக்குச் சென்றுவிடுகின்றன. அதனால்தான், அண்மைக் கடலில் மீன் கிடைக்காமல், மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லவேண்டிய சூழல் உருவாகிறது.

சின்னத்தம்பி
சின்னத்தம்பி

அதனால், இந்த ஆண்டு பாலை மீன் குஞ்சுகளைப் பிடிப்பதைத் தடைசெய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்தோம். அதன்படி, பாலை மீன் குஞ்சுகளைப் பிடிக்கக் கூடாது என மீன்வளத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது அரசு. ஆனால், மீன்வளத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் துணையுடன் சிலர் பாலை மீன் குஞ்சுகளைப் பிடித்து பண்ணைகளில் விற்பனை செய்துவருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு மண்டபம் காந்திநகர் தெற்குக் கடற்கரையில், இரண்டு லட்சம் பாலை மீன் குஞ்சுகளைப் பிடித்து சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ற நபர்களைக் கையும் களவுமாகப் பிடித்து மண்டபம் வனக்காப்பாளர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தோம். ஆனால், செந்தில்குமார் குற்றவாளிகளை மீனுடன் தப்பிக்கவைத்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

மேலதிகாரிகளிடம் புகார் அளித்தும் வனக்காப்பாளர் மீதும், மீன்வளத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறோம். தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை என்பது தற்காலிகம்தான். எனவே ‘பாலை மீன்குஞ்சுகளைப் பிடிக்க, நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்’ என தமிழக மீனவ சங்கப் பிரதிநிதிகள், மத்திய, மாநில மீன்வளத்துறை அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தவிருக்கிறோம்” என்றார் சின்னத்தம்பி.

காத்தவராயன்
காத்தவராயன்

மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயனிடம் இந்தப் புகார்கள் குறித்துக் கேட்டோம். “புரதச்சத்து வாய்ந்தது இந்தப் பாலை மீன். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன், குந்துகால், காஞ்சிராங்குடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பவளப்பாறைகள் அதிகமுள்ள சில இடங்களில் மட்டுமே வளரக்கூடியது. ஆராய்ச்சிக்காகவும், அரசு மீன்வளத்துறைப் பண்ணைகளுக்கு விற்பனைக்காகவும் ஆண்டுக்கு நான்கு லட்சம் பாலை மீன் குஞ்சுகளைப் பிடித்து, கொடுத்துவருகிறோம். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை மீன்வளத்துறைக்குச் செலவழித்து வருகிறோம். இதனால், மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. 40 லட்சம் கிலோ வரை பாலை மீன்களைப் பிடித்து, தனியாருக்கு விற்பனை செய்வதாகக் கூறுவதில் உண்மையில்லை. இதைவைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். அவர்கள் யார் எனக் குறிப்பிட விரும்பவில்லை. மீனவர்களும் உண்மை புரியாமல் பேசுகின்றனர். பாலை மீன் குஞ்சுகளைக் கடத்திச் சென்ற குற்றவாளிகளை விடுவித்தது தொடர்பாக, வனக்காப்பாளர் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்திவருகிறோம். அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

செந்தில்குமாரின் செல்போன் எண்ணுக்கு முன்று முறை தொடர்புகொண்டும், குறுஞ்செய்திகள் அனுப்பியும் நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.

“மீன்வளத்துறையிலுள்ள கறுப்பு ஆடுகளைக் களைந்தாலே, தமிழக - இலங்கை மீனவர் மோதலின் அடிப்படையான முதன்மைப் பிரச்னை முடிவுக்கு வரும்” என்கிறார்கள் ராமநாதபுரம் மீனவர்கள். தமிழக அரசு கவனத்தில்கொள்ளுமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism