அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

அவனே சாகணும்னு முடிவு பண்ணிட்டான். நாங்க ஏன் காப்பாத்தணும்?

இராமநாதபுரம் அரசு மருத்துவமனை
பிரீமியம் ஸ்டோரி
News
இராமநாதபுரம் அரசு மருத்துவமனை

- இராமநாதபுரம் அரசு மருத்துவமனை அவலங்கள்!

நாள்தோறும் புதிய புதிய தனியார் மருத்துவமனைகள் முளைத்துக்கொண்டேயிருந்தாலும், இன்றும் பெரும்பான்மையான மக்கள் நாடுவது அரசு மருத்துவமனைகளைத்தான். இந்த நிலையில், சமீபத்தில் அரசு மருத்துவக் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்ட இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குறித்து அடுக்கடுக்கான புகார்களைச் சொல்கிறார்கள் பொதுமக்கள்.

அவனே சாகணும்னு முடிவு பண்ணிட்டான். நாங்க ஏன் காப்பாத்தணும்?

எதற்கெடுத்தாலும் லஞ்சம்!

“எங்க அம்மாவை இங்கதான் சேர்த்தோம். ஸ்கேன் எடுக்கக் கூட்டிட்டுப்போக, காயத்துல மருந்துவெச்சுக் கட்ட, வீல் சேர்ல பாத்ரூமுக்குக் கூட்டிட்டுப்போகன்னு எல்லாத்துக்கும் காசு கேக்குறாங்க. காசு கொடுக்கலைன்னா ரொம்ப லேட் ஆக்குறாங்க. இல்லைன்னா பாதியிலேயே விட்டுட்டுப் போயிடுறாங்க. தனியார் ஹாஸ்பிட்டல்ல காசு கொடுக்க முடியாமத்தானே இங்க வந்துருக்கோம்... இங்கேயும் காசு கேட்டா நாங்க என்ன பண்றது?” என்றார் பரமக்குடியைச் சேர்ந்த இராமநாதன்.

சித்தாரக்கோட்டையைச் சேர்ந்த சேதுராஜ் பேசும்போது, “என் மனைவிக்கு இப்போதான் குழந்தை பிறந்திருக்கு. மனைவியையும் குழந்தையையும் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே கொண்டுவர 500 ரூபாய் காசு கேட்டாங்க. கொடுக்கலைன்னதும், ‘ஸ்ட்ரெச்சரைத் தள்ளணுமா வேண்டாமா’னு முறைக்குறாங்க. வேற வழியில்லாம காசைக் கொடுத்துதான் பொண்டாட்டி, பிள்ளையைக் கூட்டிட்டு வந்தேன்” என்றார்.

அவனே சாகணும்னு முடிவு பண்ணிட்டான். நாங்க ஏன் காப்பாத்தணும்?

சுகாதாரமற்ற சூழல்!

“மருத்துவமனை வளாகத்துக்குள் நாலாபுறமும் கழிவுநீர்த்தொட்டிகள் நிரம்பி வழிகின்றன. மொய்க்கும் கொசுக்களுக்கும் ஈக்களுக்கும் நடுவில்தான் நோயாளிகள் கால்கடுக்கக் காத்துக்கிடக்கிறார்கள். மருத்துவமனை முழுவதும் நாய்கள் சுற்றிவருகின்றன. சில சமயம் வார்டுகளில்கூட நாய்கள் நுழைந்துவிடுகின்றன” என்று ஆதங்கப்பட்டனர் நோயாளிகளின் உறவினர்கள் சிலர்.

இராமநாதன்
இராமநாதன்

சிகிச்சையில் அலட்சியம்!

இராமநாதபுரத்தைச் சேர்ந்த சிக்கந்தர், “நான் ஒரு ஆட்டோ டிரைவர். போன வாரம் தற்கொலைக்கு முயற்சி செஞ்சு உயிருக்குப் போராடுன ஒரு இளைஞனை அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுவந்தேன். அவருக்கு முதலுதவி செய்ய ரொம்ப லேட் பண்ணினாங்க. நான் கேட்டதுக்கு ‘அவனே சாகணும்னு முடிவு பண்ணிட்டான். நாங்க ஏன் காப்பாத்தணும்’னு கேட்டாங்க அங்கே வேலை பார்க்கிற ஊழியர்கள். ஒரு ஏழையோட உயிருக்கு இவ்வளவுதான் மதிப்பா?” என்றார் கொதிப்புடன்.

இந்தப் புகார்கள் குறித்து இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் கிறிஸ்டி ஏஞ்சலிடம் கேட்டோம். “பிரசவ வார்டில் பலர் வேலை செய்கின்றனர். எனவே, பொத்தம் பொதுவாக புகார் தெரிவிக்காமல், யார் லஞ்சம் வாங்கினார்கள், எந்தச் செவிலியர் சரியாகக் கவனிக்கவில்லை என்று சம்பவம் நடக்கும்போதே எங்களிடம் புகார் தெரிவித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்” என்றார் உறுதியான குரலில்.

சிக்கந்தர்
சிக்கந்தர்

நோயைத் தீர்ப்பது மட்டுமல்ல, நோயாளிகளின் குறைகளைக் களைய வேண்டியதும் அதிகாரிகளின் கடமைதான்!