‘‘என் மக பிறந்ததுலேயிருந்து நாங்கபட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமில்லை. ‘உன் பொண்ணு ரொம்ப நாள் உயிர் வாழாது’னு அபவார்த்தைகளைச் சொல்லி எங்களை அழவைக்க நிறையபேர் இருந்தாங்களேயொழிய, ‘கவலைப்படாதீங்க’னு ஒரு ஆறுதல் வார்த்தையைச் சொல்லி எங்களுக்கு ஆதரவா நிக்கிறதுக்கு ஒருத்தர்கூட இல்லை. அரசு உதவித்தொகை கேட்டு ஒரு வருஷம் நடையா நடந்தும், பிரயோஜனம் இல்லை. விகடன்ல செய்தி வந்த பிறகுதான் எங்களுக்கு விடிவுகாலமே பிறந்திருக்கு’’ நன்றி உணர்வுடன் பேசுகின்றனர் ராஜாவும் சரண்யாவும்.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் அருகே உள்ளது வாணியவல்லம் கிராமம். அங்கு இருக்கும் ராஜா-சரண்யா தம்பதிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை வேண்டும் என்ற தங்கள் ஆசை நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில் திளைத்தனர் அந்தத் தம்பதியர். ஆனால், அந்த மகிழ்ச்சி சில நாள்கள்கூட நிலைக்கவில்லை. `குழந்தைக்கு உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் குன்றியிருக்கின்றன. குழந்தை நீண்டநாள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை’ என்று மருத்துவர்கள் சொல்ல, மொத்த குடும்பமும் நொறுங்கிப்போனது. குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என, தங்கள் சக்திக்கு எட்டிய இடங்களிலெல்லாம் மருத்துவம் பார்த்தனர். ஆனாலும், குழந்தையின் உடல்நலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஒருகட்டத்துக்குமேல் மருத்துவத்துக்காகச் செலவழிக்க அவர்களால் இயலவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளைப் பெற, கடந்த ஆண்டு இறுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் பதிவுசெய்தனர்.

`மாற்றுத்திறனாளி’ என்று சான்று அளிக்கப்பட்டதேயொழிய, அரசு சார்பில் எந்த உதவியும் கிடைக்க வில்லை. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக்கழித்திருக்கின்றனர். அதுபற்றி அக்டோபர் 14-ம் தேதி, `‘ஒரு வருஷமாச்சு... எந்த உதவியும் கிடைக்கல!’’ என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் (vikatan.com) செய்தி வெளியிட்டோம். அதைப் படித்த ‘இணைந்த கைகள்’ என்ற பெயரில் இயங்கிவரும் கரூரைச் சேர்ந்த ஃபேஸ்புக் நண்பர்கள், குழந்தையின் பெற்றோருக்கு உதவிட முன்வந்தனர். மகிழ்ச்சியுடன் அவர்களை அழைத்துக்கொண்டு ராஜாவின் வீட்டுக்குச் சென்றோம். இணைந்த கைகளின் உதவியைப் பெற்றுக்கொண்டு, ராஜாவும் சரண்யாவும் நெக்குருகிப் பேசினர்.

‘‘என் மக பேரு மகாஸ்ரீ. நாலு வயசாகிடுச்சு. ஆனாலும் அவளால எந்த வேலையும் செய்ய முடியாது. பார்வை இல்லை. மனவளர்ச்சி கிடையாது. `ரத்த சொந்தத்துலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டதால்தான் இப்படி ஆகிருச்சு’ன்னும், `இந்தக் குழந்தை ரொம்ப நாள் உயிர்வாழ வாய்ப்பில்லை’ன்னும் டாக்டருங்க சொன்னாங்க. உலகமே இருண்டது மாதிரி ஆகிருச்சு. இவளுக்கு அடுத்து பிறந்த குழந்தை ஆரோக்கியமா இருந்தாலும், மகாஸ்ரீயை நினைச்சு மனசு கிடந்து அடிச்சுக்கும். எப்படியாவது சரிபண்ணிடலாம்னு நாங்களும் போராடினோம். ஆனா, முடியலை.

கிடைக்கிற சொற்ப வருமானத்துல மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியலை. எங்களுக்கு உதவ யாரும் தயாரா இல்லை. ஒரு வருஷமா போராடியும் அரசு உதவித்தொகை கிடைக்கலை. விகடன்ல எங்க நிலைமையைப் பற்றி எழுதிய பிறகுதான் எங்களுக்கு விடிவுகாலம் பிறந்திருக்கு. எங்க குழந்தையைப் பார்க்கிற எல்லோரும் அவளோட குறையைப் பற்றியே பேசுவாங்க. இணைந்த கைகள் அமைப்பினர்தான், அவளை உயர்வா பேசினாங்க. இதுவரைக்கும் யாருமே அப்படி உயர்வா பேசினது கிடையாது’’ என்று தழுதழுத்தனர்.

‘இணைந்த கைகள்’ முகநூல் நண்பர்கள் குழுவின் அமைப்பாளர் சாதிக் அலி, ‘‘ஃபேஸ்புக் மூலம் நிதி திரட்டி இயலாதவர் களுக்கு உதவும் பணியை, கடந்த நான்கு ஆண்டுகளாகச் செய்துவருகிறோம். சிறுமி மகாஸ்ரீயின் நிலைகுறித்து விகடனில் வந்த செய்தியைப் பார்த்ததும் கலங்கிவிட்டோம். முதற்கட்டமாக 12,000 ரூபாய் கொடுத்துள்ளோம். அதுதவிர, குழந்தையின் ஆயுள் முழுக்க மாதா மாதம் 4,000 ரூபாய் நிதியுதவி வழங்க இருக்கிறோம். மகாஸ்ரீக்கு வேண்டிய மருத்துவ உதவிகளையும் வழங்கவுள்ளோம்’’ என்றார்.

தன்னார்வலர்களே இவ்வளவு சிரத்தையோடு உதவும்போது, அரசு மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனோ?