Published:Updated:

“ராஜா ராணிங்கிறது பெரிய வேஷம்!”

மகள், மகனுடன் ராஜா குமரன் சேதுபதி, ராணி லக்குமி நாச்சியார்
பிரீமியம் ஸ்டோரி
மகள், மகனுடன் ராஜா குமரன் சேதுபதி, ராணி லக்குமி நாச்சியார்

மூவாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்டது இந்த சமஸ்தானம்.

“ராஜா ராணிங்கிறது பெரிய வேஷம்!”

மூவாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்டது இந்த சமஸ்தானம்.

Published:Updated:
மகள், மகனுடன் ராஜா குமரன் சேதுபதி, ராணி லக்குமி நாச்சியார்
பிரீமியம் ஸ்டோரி
மகள், மகனுடன் ராஜா குமரன் சேதுபதி, ராணி லக்குமி நாச்சியார்

சரியாக 120 ஆண்டுகளுக்கு முன் 1901-ல், அன்றைய சேது சமஸ்தானத்தின் மன்னர் பாஸ்கர சேதுபதி மற்றும் அவரின் உறவினர் வள்ளல் பாண்டித்துரை ஆகிய இருவரின் முயற்சியில், மதுரையில் நிறுவப்பட்டது நான்காம் தமிழ்ச் சங்கம். இன்றும் கல்லூரிகள், ஆராய்ச்சிகள் வழியே தமிழ்ப் பணியாற்றி வரும் இச்சங்கத்தின் தற்போதைய தலைவர், ராமநாதபுரம் அரண்மனையின் இப்போதைய மன்னர் ராஜா என்.குமரன் சேதுபதி.

36 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிற சேது சமஸ்தான அரண்மனை, இம்மாதக் கடைசி வாரத்தில் நடக்கவிருக்கும் இளையராணி மகாலட்சுமி நாச்சியாரின் திருமணத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது. மணமகன், வள்ளல் பாண்டித்துரை வழிவந்த பாளையம்பட்டி ஜமீனின் இளைய ராஜா பத்மராஜா என்கிற அஸ்வின்.

‘`தெய்வச் செயல்ல நடக்கிற கல்யாணம் இது. காலங்கள் மாறி மன்னராட்சி முறையே முடிஞ்ச பிறகும் பாஸ்கர ராஜா வழி வந்த எங்க பொண்ணு அதே பாண்டித்துரை வழி வந்த பரம்பரைக்கே மருமகளாப் போறதுங்கிறதை வேற எப்படிச் சொல்ல முடியும்?’’ என்றபடியே நம்மை வரவேற்கிறார் ராஜா குமரன் சேதுபதி. அவரிடன் சில கேள்விகளை முன்வைத்தேன்.

அரச சபை
அரச சபை

``அரண்மனையின் இப்போதைய அன்றாட அலுவல்கள் என்னென்ன?’’

“நான், ராணி, இளையராஜா, இளைய ராணி ஆகியோர் இப்ப இங்க குடியிருக்கோம். மற்ற சில உறவினர்கள் சூழல் காரணமா சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசிக்கிறாங்க. தசரா மாதிரி சில முக்கியமான விசேஷங்களில் எல்லோரும் இங்க கூடிடுவோம். நான்காம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் நான். சங்கக் கட்டுப்பாட்டுல இயங்கி வர்ற கல்லூரிகளின் செயலாளரா ராணி இருக்காங்க. இளைய ராஜாவும் இளைய ராணியும் இப்பதான் படிச்சு முடிச்சிருக்காங்க. அலுவல்னா, எங்க குடும்பத்தைக் கவனிச்சுக்கிட்டு, கூடவே காலம்காலமா அரண்மனையில் வசிச்சு வர்ற குடும்பங்களையும் பார்த்துக்கறோம். இதுதவிர ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில்ல நான் தக்கார். அரசு தன் பங்குக்குச் சில மரியாதைகளைத் தந்துட்டு வருது.”

மன்னர் பாஸ்கர சேதுபதி
மன்னர் பாஸ்கர சேதுபதி

``சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டு சுதந்திர இந்தியா ஆனபிறகான ராஜ குடும்பத்தினரின் வாழ்க்கை முறையை எப்படி எடுத்துக்கறீங்க?’’

“இந்தக் கேள்வியை ராணிகிட்ட கேளுங்க; அவங்க பதில் சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்” என ராஜா தன் மனைவியைப் பார்க்க, தொடர்ந்தார் ராணி லக்குமி நாச்சியார்...

‘‘மூவாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்டது இந்த சமஸ்தானம். சுதந்திரத்துக்கு முன்னாடி சேத்தூர், சிவகிரி, தலைவன்கோட்டை... இப்படி சுமார் 75 ஜமீன்களை உள்ளடக்கியதா இருந்த இந்த சமஸ்தான ஆளுகையில மக்கள் மகிழ்ச்சியா வாழ்ந்திருக்காங்க. மத வித்தியாசமில்லாம இறைப்பணிகளை இந்தப் பகுதியில நிறைய செய்திருக்காங்க இந்த சமஸ்தான ராஜாக்கள். சுவாமி விவேகானந்தரை சிகாகோவுக்கு அனுப்பியது சேது ராஜாங்கிறது வரலாறு. தமிழ் மொழிக்குச் செஞ்ச சேவைன்னு பார்த்தா தமிழ்ச்சங்கம் ஒண்ணே போதும். அதேபோல பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துல அவங்களுக்கு அடிபணியாமலும் இருந்திருக்காங்க.

சுதந்திரத்துக்குப் பின்னாடி அரண்மனையின் பெரும்பாலான சொத்துகளை மக்களுக்காகக் கொடுத்துட்டாங்க. இங்க உள்ள மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், ஏன், சென்னையிலுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக் கட்டடமே எங்க முன்னோர்கள் கொடுத்ததுதான். ராஜாவா இருக்கும்போதே கொடுத்துக் கொடுத்துப் பழக்கப்பட்ட வம்சம். அதனால இப்ப வரைக்கும் மக்களுக்குச் செய்ய யோசிக்கறதே கிடையாது. காரணம், அப்ப இருந்து இன்ன வரைக்கும் மக்கள் எங்கமீது காட்டுகிற அன்புதான். இன்னைக்கும், ஏன், இன்னும் எத்தனை வருஷமானாலும் இந்தப் பகுதி மக்களுக்கு நாங்க ராஜா குடும்பம்தானே? கல்யாணம் காட்சின்னா ‘நீங்கதான் வந்து தாலி எடுத்துத் தரணும்’னு கூப்பிடுவாங்க. மறுக்காமப் போய் வருவோம். மத்த சமஸ்தானங்கள் எப்படியோ, இங்க அரண்மனை ஊழியர்களுமே எங்களுக்குக் குடும்ப உறவுகள்தான். அவங்க நல்லது கெட்டது எல்லாத்தையுமே அரண்மனைதான் பார்த்துக்கும்.

வாழ்க்கைமுறைன்னு கேட்டீங்களே, அதுக்கு இப்படிச் சொன்னாச் சரியா இருக்கும்னு தோணுது. என்னுடைய மூத்த ராணிகள், ராஜாக்களின் ஆட்சியில எப்படி இருந்தாங்கன்னு எனக்குத் தெரியலை. நான் இந்தக் குடும்பத்துக்கு வந்த புதுசுல எல்லாரும் `ராணி, ராணி’ன்னு கூப்பிடறதையே ஏத்துக்க ஒரு மாதிரியா இருந்தது. சமஸ்தானத்துக்குன்னு சில மரபுகள் இருக்குன்னு புரிஞ்சதும் அது சரியாகிடுச்சு. ஆனா வாழ்க்கை முறை எல்லாரையும் போலத்தான். ராஜாவுமே இந்த சாமானிய வாழ்க்கை முறையைத்தான் இப்ப விரும்பறார். எங்க குழந்தைகள் ரெண்டு பேரையுமே மதுரை, சென்னையில ஹாஸ்டல்ல சேர்த்துதான் படிக்க வச்சோம். ராஜா ராணி வாழ்க்கைங்கிறது இன்றைய நடைமுறை வாழ்க்கைக்குச் சரிவராதுன்னு சொல்லியே அவங்களை வளர்த்திருக்கோம். அவங்களுக்குப் பிடிச்சதைப் படிச்சிருக்காங்க. பிடிச்ச வேலைகளைச் செய்வாங்க’’ என்றவரிடம் தொடர்ந்து கேள்விகளை வைத்தோம்.

“ராஜா ராணிங்கிறது பெரிய வேஷம்!”
“ராஜா ராணிங்கிறது பெரிய வேஷம்!”
“ராஜா ராணிங்கிறது பெரிய வேஷம்!”

``சில ஜமீன்கள் மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு ரொம்பவே நொடித்துப்போனதாகச் சொல்கிறார்களே?’’

“உண்மைதான். பெரும்பாலான ஜமீன்களின் நிலை அப்படி ஆகியிருக்கு. அரசாங்கம் ஜமீன்களின் சொத்துகளை எடுத்தபோது ஆங்கிலேயர்களுடன் இணக்கமா இருந்த ஜமீன்கள்கிட்ட இருந்துதான் நிறைய எடுத்திருக்காங்க. ஆங்கிலேயர்களுக்கு அடிபணிய மறுத்த சமஸ்தானங்களுக்கு இப்ப வரைக்கும் நல்ல மரியாதை தந்திட்டிருக்காங்க. மன்னராட்சி முடிவுக்குப் பிறகு சில ஜமீன்கள் நொடிஞ்சுபோனதுக்கு ஒரேயொரு காரணம்தான். இருக்கிற சொத்துகளை வித்து வித்து சாப்பிட்டுட்டே இருந்தா எவ்வளவு நாள் தாங்கும்? சொத்துகளை விக்கிறதுலகூட ஏமாத்தப்பட்டிருக்காங்க. அந்தச் சொத்தின் மதிப்புமே முழுசா அவங்களுக்குக் கிடைச்சிருக்காது. இடையில யாராவது தொடர்பில்லாதவங்க தலையிட்டு பெரிசா ஆதாயம் அடைஞ்சிருப்பாங்க. ராஜ வாழ்க்கையிலேயே இருந்துட்டதால நெளிவு சுளிவு, வியாபாரச் சூட்சுமங்கள், தந்திரங்கள் எதுவுமே தெரியாம வளர்ந்ததுதான் காரணம். இருக்கிற சொத்தைப் பெருக்கற வழி தெரியலை. எங்களை எடுத்துக்கோங்க, இவ்ளோ பெரிய அரண்மனையை எப்படி மெயின்டெய்ன் பண்றது? ரொம்பக் கஷ்டம். முழுசா ஒருமுறை பெயின்ட் அடிக்கணும்னாலே லட்சக்கணக்குல ஆகும். ஆனா அதுக்கேத்த வருமானம்? அதனால அரண்மனையின் வெளிப்பகுதிகளில் இருக்கிற கட்டடங்களை வாடகைக்கு விட்டுட்டோம். அந்த வாடகை வருது. வேறெந்த பிசினஸும் எங்க குடும்பத்துக்குக் கிடையாது. ஆனா பாருங்க, இந்தப் பகுதியில எந்த நிகழ்ச்சின்னாலும் நாங்க போய் ஆகணும். ராஜான்னு கூப்பிடறப்ப அவங்க எதிர்பார்க்காட்டாலும் குறைஞ்சது பத்தாயிரம் ரூபாயாவது அன்பளிப்பாத் தரணும். ஆனாலும் சந்தோஷமாத்தான் செய்துட்டு வர்றோம். சட்டியில இருந்தாதான் அகப்பையில வரும்னு சொல்வாங்க. சட்டியில இருக்கோ இல்லையோ, அகப்பை நிறையத்தான் கொடுத்துட்டு வர்றோம். சில நேரங்களில் ராஜா ராணிங்கிறது பெரிய வேஷமா இருக்கேன்னு நினைக்கத் தோணும். அதையெல்லாம் கடந்துதான் போயிட்டிருக்கு வாழ்க்கை.’’

“ராஜா ராணிங்கிறது பெரிய வேஷம்!”
“ராஜா ராணிங்கிறது பெரிய வேஷம்!”

``சுதந்திரத்துக்குப் பிறகு சமஸ்தானத்தைச் சேர்ந்த உங்க முன்னோர்கள் காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்திருக்காங்க. தற்போது மன்னர் குடும்பத்துல யாரும் நேரடி அரசியல்ல இருக்காங்களா?’’

“ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதி பொதுப்பணித் துறை அமைச்சரா இருந்திருக்கார். நீதிக்கட்சியில இருந்தார் அவர். அவர் ஒருத்தரோடு சரி, பிறகு யாரும் நேரடி அரசியல்ல ஈடுபடலை. அதுக்குக் காரணம், மக்களைப் பொறுத்தவரைக்கும் அரண்மனைங்கிறதைப் பொதுவாப் பார்க்கிறாங்க. அப்படி இருக்கிறப்ப ஏதாவதொரு அரசியல் இயக்கத்தில் இருந்தா சிலருக்கு அது சங்கடத்தைத் தரும்னு தோணுச்சு. அதனாலதான் அரசியல் வேண்டாம்கிற முடிவுக்கு வந்தோம்.”

“கல்லூரி விடுதியில உங்களை முழுப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டிருக்காங்களா” என, இளைய ராஜா பிரம்ம முத்துராமலிங்க நாகேந்திர சேதுபதியிடம் கேட்டேன்.

“ராஜா ராணிங்கிறது பெரிய வேஷம்!”
மகள், மகனுடன் ராஜா குமரன் சேதுபதி, ராணி லக்குமி நாச்சியார்
மகள், மகனுடன் ராஜா குமரன் சேதுபதி, ராணி லக்குமி நாச்சியார்

‘‘நிறைய பேருக்கு நாங்க ராஜா குடும்பத்தைச் சேர்ந்தவங்கன்னு தெரியாது. நானோ என் தங்கையோ நாங்களா சொல்லிக்க மாட்டோம். என்னை நாகேந்திர சேதுபதின்னு கூப்பிடுவாங்க. சிலர் சீரியஸாகவே ‘விஜய் சேதுபதி கஸினா’ன்னு கேட்டிருக்காங்க’’ என அவர் சிரிக்க, குறுக்கிட்ட லக்குமி நாச்சியார், “இந்தப் பகுதியைச் சேர்ந்த நிறைய பேர் சமஸ்தானம் மீதுள்ள ஒரு பிரியத்துல சேதுபதிங்கிற பெயரைச் சேர்த்துக்குவாங்க. அல்லது அப்படிப் பெயர் வச்சிருக்கிறவங்க குடும்பத்துக்கு அரண்மனையுடன் எப்படியாவது ஒரு தொடர்பு இருந்திருக்கும். அரண்மனையின் ஒரு ஊழியரா அதாவது ஒரு அங்கத்தினரா வசித்த குடும்பமா இருப்பாங்க. ஒரு பிரியத்துல வச்சிருக்காங்க... மகிழ்ச்சியா வச்சுட்டுப் போகட்டுமே’’ என்கிறார்.

மகாலட்சுமி நாச்சியாருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism