Published:Updated:

கடலுக்குள் காற்றாலை... எதிர்க்கும் மீனவர்கள்!

காற்றாலை
பிரீமியம் ஸ்டோரி
காற்றாலை

ஏற்கெனவே பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக இந்தப் பகுதியில் மீன் வளம் குறைந்துவிட்டது. இந்தப் பகுதியில் கடற்பரப்பே குறைவுதான்.

கடலுக்குள் காற்றாலை... எதிர்க்கும் மீனவர்கள்!

ஏற்கெனவே பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக இந்தப் பகுதியில் மீன் வளம் குறைந்துவிட்டது. இந்தப் பகுதியில் கடற்பரப்பே குறைவுதான்.

Published:Updated:
காற்றாலை
பிரீமியம் ஸ்டோரி
காற்றாலை

இலங்கை கடற்படைத் தாக்குதலுக்கு எதிராக மல்லுக்கட்டுவதே அன்றாட வாழ்க்கையாகிவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள், இப்போது கடலுக்குள் காற்றாலை அமைக்கும் மத்திய, மாநில அரசுகளின் முடிவுக்கு எதிராகப் போராடும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

கடலுக்குள் காற்றாலை... எதிர்க்கும் மீனவர்கள்!

இது குறித்து நம்மிடம் பேசிய ஏ.ஐ.டி.யூ.சி மீனவர் சங்க மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், “நாட்டிலேயே நீண்ட கடற்பரப்பைக்கொண்ட தமிழகத்தில், அதிகமாக மீன்பிடித் தொழில் நடக்கும் பகுதி தனுஷ்கோடி முதல் தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா பகுதிதான். இங்கு அரிய வகையிலான கடல்வாழ் உயிரினங்கள் இருப்பதால் மத்திய அரசு, கடல்சார் உயிரியல் பூங்காவாக இந்தப் பகுதியை அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், ‘சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தவிருக் கிறோம். தனுஷ்கோடி கடல் பகுதியில் மணிக்கு 29 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால், அங்கே ரூ.350 கோடி மதிப்பீட்டில் காற்றாலை மின் நிலையம் அமைக்கவிருக்கிறோம்’ என்று அறிவித்திருக்கிறார் தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தின் இயக்குநர் பலராமன் கண்ணன்.

இது மீனவர்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக இந்தப் பகுதியில் மீன் வளம் குறைந்துவிட்டது. இந்தப் பகுதியில் கடற்பரப்பே குறைவுதான். அதிலும் ஒரு பகுதியை மின் நிலையத்துக்காக எடுத்துக்கொண்டால், நாங்கள் எப்படி வாழ்வது... டென்மார்க்கில் நடந்த காற்றாலை மின்சக்தி தொடர்பான மாநாட்டில், தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்ற பிறகே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தீவிரம் காட்டப்படுகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

கடலுக்குள் காற்றாலை... எதிர்க்கும் மீனவர்கள்!

தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் நிர்வாகி சின்னத்தம்பி, “ஏற்கெனவே தமிழ்நாடு அரசு சோதனைக் காற்றாலைகளை அமைத்து தனுஷ்கோடி, வாலிநோக்கத்தில் ஆய்வுசெய்யும் முயற்சியில் இறங்கிவிட்டது. மன்னார் வளைகுடா கடலில் 500 மீட்டர் இடைவெளியில் தொடர்ச்சியாக காற்றாலை கோபுரங்கள் நிறுத்தப்பட்டால் அவற்றைத் தாண்டி மீனவர்கள் எப்படி மீன்பிடிக்கப் போவார்கள்... இது குறித்து மீனவர்களிடமும் கருத்து கேட்கவில்லை. இந்தத் திட்டத்தை நிறுத்தாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” என்று படபடத்தார்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பலமுறை தொடர்புகொண்டும் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.

செந்தில்வேல்
செந்தில்வேல்
சின்னத்தம்பி
சின்னத்தம்பி

மீனவர்களின் கவலை குறித்து மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, “இதுவரை இந்த விவகாரம் என் கவனத்துக்கு வரவில்லை. இருந்தாலும், இது பற்றி உடனடியாக விசாரித்து மீனவர்களின் நலனைப் பாது காக்க நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

முதலில் மீனவர்களிடம் கருத்து கேளுங்கள்!