சினிமா
தொடர்கள்
Published:Updated:

“அவன் அழுதது இன்னமும் என் கண்ணுக்குள்ளயே நிக்குது!”

ராம்குமாரின் தங்கை மற்றும் பெற்றோர்
பிரீமியம் ஸ்டோரி
News
ராம்குமாரின் தங்கை மற்றும் பெற்றோர்

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நாங்க சந்திக்காத அவமானமில்ல. வெளியில தலைகாட்ட முடியாத அளவுக்கு ஆகிப்போச்சு.

``ஆறு வருஷமாச்சு... என் புள்ளை சாவுக்கு நீதி கிடைச்சுடாதா, அவன் எந்தத் தப்பும் செய்யாத அப்பாவின்னு இந்த உலகத்துக்குத் தெரிஞ்சுடாதான்னு தினமும் வேண்டாத சாமியில்லை... வடிக்காத கண்ணீரில்ல... செய்யாத ஒரு குற்றத்துக்கு அவப்பெயரைச் சுமந்துக்கிட்டு குடும்பமே தவிச்சுக்கிட்டுக் கிடக்கும்போது மனித உரிமை ஆணையம் சொல்லியிருக்கிறது கொஞ்சம் ஆறுதலா இருக்கு...’’ கண்கலங்கப் பேசுகிறார் பரமசிவம்.

தென்காசி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பரமசிவம், ராம்குமாரின் அப்பா. ரயில் நிலையத்தில் கொடூரமான முறையில் சுவாதி கொலை செய்யப்பட்டதையும், அந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட ராம்குமாரையும் எளிதில் மறக்கமுடியாது. கைது செய்யப்பட்டு் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், மின்சார வயரைக் கடித்துத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில், ‘ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. உண்மையைக் கண்டறிய சுதந்திரமான விசாரணை நடத்தவேண்டும்’ என்றும் ‘ராம்குமாரின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்’ என்றும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ராம்குமாரின் தங்கை மற்றும் பெற்றோர்
ராம்குமாரின் தங்கை மற்றும் பெற்றோர்

இந்தச் சூழலில் ராம் குமாரின் அப்பா பரமசிவத்திடம் பேசினேன். மிகுந்த வருத்தத்தோடும் வலியோடும் பேசினார்.

“நாங்க ரொம்ப சாதாரண மான ஆளுங்கம்மா... எங்களுக்குக் கல்யாணமாகி அஞ்சு வருஷமா குழந்தையே இல்ல. நாங்க வேண்டாத தெய்வமில்ல. போகாத கோயில் இல்ல. தவமிருந்து பெத்த மாதிரிதான் ராம்குமார் பிறந்தான். அதனால அவனை நாங்க ‘தங்கப்பா'ன்னு ஆசையாக் கூப்பிடுவோம். ரொம்ப குணமான பையன். அவனுக்கு அடுத்துதான் மதுபாலாவும் காளீஸ்வரியும் பிறந்தாங்க. தங்கச்சிக மேல உசுரா இருப்பான். ஆனா, அவங்களுக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்கத்தான் அவன் இல்லை.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நாங்க சந்திக்காத அவமானமில்ல. வெளியில தலைகாட்ட முடியாத அளவுக்கு ஆகிப்போச்சு. அப்படியிருந்தும் கஷ்டப்பட்டு ரெண்டு பிள்ளைங்களும் டிகிரி முடிச்சுதுங்க. மூத்த பொண்ணு மதுபாலாவுக்குக் கல்யாண ஏற்பாடு பண்ணினப்போ ராம்குமாரோட தங்கச்சின்னு தெரிஞ்சதும் நிராகரிச்சுட்டாங்க. ஆனா, ராம்குமார் அப்படிப் பண்ணியிருக்கமாட்டான்னு எங்க ஊரு நம்புச்சு. சுவாதி கொலையில உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கணும். எங்க ஊரு மக்களும் அதைத்தான் சொல்றாங்க. எங்க ஊர் மக்கள் கொடுத்த நம்பிக்கையிலும் உதவியிலும்தான் 2020-ல எங்க பொண்ணுக்கு நல்ல வரன் அமைஞ்சது. மாப்பிள்ளை மைக் செட் வேலை செய்யுறாரு. தங்கமான மனுஷன். இப்போ பேரன் பிறந்திருக்கான். இந்த ஆறு வருஷத்துல எங்களுக்கு இருக்குற ஒரே ஆறுதல், பேரன் மட்டும்தான்.

இப்போ, கடைசிப் பொண்ணு காளீஸ்வரி எம்.பி.ஏ. முடிச்சுட்டா. ஒரு கம்பெனியில வேலைக்குப் போயிட்டிருக்கா. அவளுக்கு இப்போ மாப்பிள்ளை பாக்குறோம். ராம்குமார் தங்கச்சியான்னு இவளுக்கும் கல்யாணம் தள்ளிப் போயிக்கிட்டே இருக்கு. நிறைய பேரு பயப்படுறாங்க. சிலபேர் இதைச்சொல்லியே வரதட்சணை அதிகமா கேட்குறாங்க. நான் குற்றம் செய்யலேன்னு என்புள்ள வெளியில வந்து நிப்பான்னு மனப்பூர்வமா நம்பினோம். அவனைச் சிறையில வச்சே முடிச்சுட்டாங்க...’’ அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் தேம்புகிறார் பரமசிவம்.

“80 நாள்களுக்குமேல என் புள்ள ஜெயில்ல இருந்தான். போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் பண்ணவேயில்லை. அதனாலேயே, அவனுக்கு ஜாமீன் கிடைச்சிடும்னு நம்பினோம். அதுக்கு முன்னாடியே, என் புள்ளையக் கொன்னுட்டாங்க. எதையும் முழுசா விசாரிச்சுத் தெரிஞ்சுக்காம ‘குற்றவாளியைப் புடிச்சுட்டோம்'னு ெஜயலலிதாவும் போலீஸுக்கு நன்றி சொல்லிட்டாங்க. நீதிமன்றம் தீர விசாரிக்கிறதுக்கு முன்பே குற்றவாளி ராம்குமார்தான்னு எல்லாரும் முடிவு பண்ணிட்டாங்க. ஜாமீன்ல வெளியில வந்து ‘நான் குற்றவாளி இல்லை'ன்னு ராம்குமார் சொல்லிட்டா, போலீஸுக்கும் அரசாங்கத்துக்கும் கெட்ட பேரு ஏற்படும்னுதான் சிறையிலேயே அவனைக் கொன்னுட்டாங்க. அவன் செத்து மூணுமாசம் கழிச்சு குற்றப்பத்திரிகை தாக்கல் பண்ணி, ‘ராம்குமார் உசுரோட இல்ல. கேஸை முடிச்சிட்டோம்'னு சொன்னாங்க.

ஜெயில்ல கரன்ட் வயரைக் கடிச்சுத் தற்கொலை பண்ணிக்கிட்டான்னு சொல்றதை நாங்க நம்பல. மனித உரிமை ஆணையமும் அதைத்தான் சொல்லியிருக்கு. யாருமே புகார் கொடுக்காட்டியும் மனித உரிமை ஆணையமே சுயமா இதை எடுத்திருக்கு. அவங்க சொன்ன வார்த்தைகள் கொஞ்சம் ஆறுதலா இருக்கு. இப்போ உள்ள அரசாங்கம் சுவாதியைக் கொன்ன உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கணும். யாரைக் காப்பாத்துறதுக்காக என் புள்ள ராம்குமாரைக் கொன்னாங்கன்னு இந்த ஊர் உலகத்துக்குத் தெரிஞ்சாகணும்” என்கிறார் பரமசிவம்.

ராம்குமார், ராம்ராஜ்
ராம்குமார், ராம்ராஜ்

இரண்டு சிறிய அறைகள் கொண்ட ஓட்டு வீட்டுக்குள் மாட்டப்பட்டிருக்கும் ராம்குமாரின் புகைப்படத்தைப் பார்த்தபடி ராம்குமாரின் தாய் புஷ்பம் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார். “சிறையில இருக்கும்போது நானும் வீட்டுக்காரரும் போயி ராம்குமாரை ஒருமுறை பார்த்தோம். அவனுக்கு ஒரு சட்டையும் தின்பண்டங்களும் வாங்கிட்டுப் போனோம். அதை யெல்லாம் உள்ளே அனுமதிக்கவே இல்லை. கடைசியா அவனுக்கு நாங்க பச்சத் தண்ணியைத் தான் கொடுக்க முடிஞ்சது. எங்ககிட்ட பேசக்கூட விடாம போலீஸ்காரங்க பக்கத் திலேயே நின்னுக்கிட் டிருந்தாங்க. எங்களைப் பார்த்ததுமே, ‘நான் அந்தக் கொலையைப் பண்ணல… நான் அந்தக் கொலையைப் பண்ணலை'ன்னு கதறி அழுதான். ‘என்னை அடிச்சுக் கொடுமைப் படுத்துறாங்க. சரியா சாப்பாடுகூட கொடுக்கிறதில்ல. என்னைக் கொன்னாலும் கொன்னுடுவாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. தங்கச்சிங்களை நீங்கதான் பார்த்துக்கணும்'னு சொன்னான். அதுதான், அவன் கடைசியா பேசுன வார்த்தைகள். அவன் சொன்னமாதிரியே போலீஸ் இப்படிப் பண்ணிடுச்சு. அவன் அழுதது இன்னமும் என் கண்ணுக்குள்ளயே நிக்குது” என்று மேலும் கலங்குகிறார்.

‘‘தென்காசிக்கும் சென்னைக்கும் அலைஞ்சு அலைஞ்சு எங்க காலமே தேஞ்சுபோச்சு. என்னைக்காவது எம்புள்ள குற்றவாளி இல்லேன்னு சொல்லிடமாட்டாங்களான்னு உசுரைப் புடிச்சுக்கிட்டுக் கிடக்குறோம். எத்தனை நாள் எங்க ஜீவன் இருக்கும்னு தெரியலே. ராம்குமார் இருந்திருந்தா எங்க இடத்திலிருந்து தங்கச்சிகளைக் கரையேத்தியிருப்பான். அரசாங்கமே எங்க புள்ளைய கொன்னுடுச்சு. இப்போ இருக்கிற அரசு எங்க ரெண்டு பொண்ணுங்களுக்கும் வேலை கொடுத்து உதவணும். எங்க புள்ளையை எதனால சிறையில வச்சுக் கொன்னாங்கன்னு கண்டுபிடிக்கணும். ஸ்டாலின் அய்யா நிச்சயமா உண்மையை வெளிக்கொண்டுவருவாரு’’ என்று கலங்குகிறார் அந்தத் தாய்.

பல தடைகளைக் கடந்து ராம்குமாருக்காகத் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்திவரும் வழக்கறிஞர் ராம்ராஜிடம் பேசினேன். “சுவாதியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை வைத்துப் பார்க்கும்போது, ஒரு நபர் இந்தக் கொலையைச் செய்திருக்கமுடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. சமீபத்தில் வந்த ஹிஸ்டோபெத்தாலாஜி ரிப்போர்ட்படி ராம்குமாரின் உடலில் மின்சாரம் பாய்ந்ததற்கான தடயமே இல்லை. ராம்குமாரின் மூக்கையும் வாயையும் பொத்தி மூச்சுத்திணறல் ஏற்படுத்திக் கொலை செய்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இப்போது, ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனித உரிமை ஆணையமே விசாரித்து உறுதிசெய்துள்ளது. சாமானியருக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. ராம்குமாரின் மரணத்துக்காக நீதி கிடைக்கும்வரை அவர்களது குடும்பத்தினரின் சட்டப்போராட்டத்தில் துணை நிற்பேன்’’ என்கிறார் உறுதியாக.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை சுவாதியின் குடும்பம் எப்படிப் பார்க்கிறது என்பதை அறிய சுவாதியின் அம்மாவைத் தொடர்புகொண்டேன். அவரிடம் பேச முடியாத சூழலில் சுவாதியின் அக்கா நித்யாவிடம் பேசினேன். ‘‘இது பற்றி நாங்க எதுவும் பேச விரும்பல...’’ என்று முடித்துக்கொண்டார்.

சுவாதி கொலை தொடக்கத்திலிருந்தே பல மர்மங்களைக் கொண்டிருக்கிறது. ராம்குமாரின் சிறை மரணம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியிருக்கும் நிலையில் மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரை மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தமிழக அரசு சுவாதி கொலையை மட்டுமன்றி, ராம்குமாரின் மர்ம மரணத்தின் பின்னணியையும் சார்புத்தன்மையற்று விசாரிக்கவேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கை.