Published:Updated:

‘‘பசியைப் போக்குகிறதா ரேஷன் அரிசி?’’

ரேஷன் அரிசி
பிரீமியம் ஸ்டோரி
News
ரேஷன் அரிசி

என்ன சொல்கிறார்கள் மக்கள்...

விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைக் குலைத்துப் போட்டுள்ளது கொரோனா ஊரடங்கு. அன்றாட கூலிகள் தொடங்கி கைவிடப்பட்டவர்கள் வரை உணவுக்கே வழியில்லாமல் தவித்துவருகிறார்கள்.

கட்டடத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள், வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்கள், டூரிஸ்ட் கைடுகள், வீட்டு வேலை செய்துவந்த பெண்கள் எனக் கோடிக்கணக்கான அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. இத்தகைய மக்களின் பசியைப் போக்கத்தான், ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசியும் மளிகைப் பொருள்களும் வழங்கப்படுகின்றன என்று சொல்கிறது, தமிழக அரசு.

பொதுவாக, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் எப்படியிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மாவுத்தூள், தவிட்டுத் தூசி மற்றும் குப்பைகளுடன் ஒவ்வாத மணத்துடன் இருக்கும் அந்த அரிசியும்கூட, சரியான எடையில் மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு வரைகூட பெரும்பாலான மக்களுக்கு தேவையில்லாத பொருளாகத்தான் ரேஷன் அரிசி இருந்தது. ஆனால், கொரோனோ ஏற்படுத்திய நெருக்கடி, கோடிக்கணக்கான மக்கள் சாப்பாட்டுக்காக ரேஷன் அரிசியை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை உருவாகி விட்டது. சரி, இப்போது அரிசியின் தரம் எப்படியிருக்கிறது எனப் பார்ப்பதற்காக, ஜூ.வி டீம் களமிறங்கியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

திருநெல்வேலி ஊரடங்குக்கு முன்பு வரை ரேஷன் அரிசியை கோழிகளுக்கும் மாடுகளுக்கும் தீவனமாக வழங்கி வந்த நிலை மாறி, பெரும்பாலானோர் அதை அன்றாட உணவுக்குப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, நாடோடி சமூகத்தினர் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் போன்றோரின் பசியை ரேஷன் அரிசிதான் போக்கிவருகிறது.

இதுநாள் வரையில், ரேஷன் அரிசி பெரும்பாலும் இங்கிருந்து கேரளாவுக்குக் கடத்தப்பட்டு அங்கு பாலீஷ் செய்து மற்ற அரிசியுடன் கலந்து விற்கப்பட்டுவந்தது. தவிர, இட்லி மாவுத் தயாரிப்பு ஆலைகளிலும் ரேஷன் அரிசியைப் பயன்படுத்திவந்தனர். தற்போது பெரும்பாலான ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் அரிசியை சொந்த பயன்பாட்டுக்கு வாங்குவதால், வெளிச்சந்தையில் நடக்கும் சட்டவிரோத விற்பனை குறைந்துவிட்டது.

‘‘பசியைப் போக்குகிறதா ரேஷன் அரிசி?’’

திருச்சி திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியாவிடம் பேசினோம். ‘‘இப்போது வேறு வழியில்லாமல் ரேஷன் அரிசியைப் பயன்படுத்துகிறோம். இந்த அரிசியை அப்படியே பயன்படுத்த முடியாது. நான்கைந்து முறை சலித்து, குப்பை, தூசு, உமி நீக்கித்தான் பயன்படுத்துகிறோம். இதை பத்து மணி நேரத்துக்கும்மேல் ஊறவைத்து அரைத்தால் தான் இட்லி மாவு தயாரிக்க முடியும்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதே பகுதியில் ரேஷன் கடையில் அரிசி வாங்க நின்றிருந்த சிலரிடம் பேசினோம். ‘‘பல நேரங்களில் ரேஷன் அரிசிதான் எங்களைக் காப்பாற்றுகிறது. காலையில் சாப்பிட்டால் மாலை வரை பசி எடுப்பதில்லை. சில நேரம் வயிறு வலிக்கிறது. ஆனால், இதைவிட்டால் எங்களுக்கு வேறு வழியும் இல்லை’’ என்றனர்.

‘‘பசியைப் போக்குகிறதா ரேஷன் அரிசி?’’

தஞ்சாவூர் நெல் விளையும் பூமியான தஞ்சாவூர் மாவட்டத்திலேயே ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் அரிசி, பழுப்பு நிறத்தில் தரமற்றுதான் இருக்கிறது. பெரும்பாலான ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் அரிசி, சோறு சமைக்க உகந்ததாக இல்லை. நடுத்தர வர்க்க மக்கள் ரேஷன் அரிசியை, கடையில் வாங்கும் இட்லி அரிசியுடன் கலந்து மாவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், அடித்தட்டுவர்க்க மக்களுக்கு அதுதான் முழுநேர உணவு.

ஒரு மாதத்துக்கு முன்பு வரை ரேஷன் அரிசியை வெளிச் சந்தையில் சட்ட விரோதமாக, ஒரு கிலோ ஆறு ரூபாய்க்கு வாங்கிய வியாபாரிகள், கோழித்தீவனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், சிறிய உணவகங்களுக்கும் விற்று லாபம் பார்த்து வந்தனர். தற்போது இந்தச் சட்டவிரோத வியாபாரம் தானாக தடைப் பட்டுள்ளது. ‘‘மக்கள் பலர் அன்றாட உணவுக்காக ரேஷன் அரிசியை மட்டுமே நம்பியிருக்கும் சூழலில், ரேஷன் கடைகளில் தரமான அரிசியை வழங்க வேண்டும்’’ என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி, ஓரளவுக்கு நல்ல அரிசியாகவே இருக்கிறது. அதனால், கிராமப் பகுதிகளில் பலரும் தங்கள் உணவுக்காக இந்த அரிசியைத்தான் பயன்படுத்திவருகின்றனர். தற்போது, போக்குவரத்து முடக்கம் மற்றும் கடையடைப்பு காரணமாக, வெளி மாநிலங்களுக்குக் கடத்துவது, வெளிச்சந்தையில் விற்பனை செய்வது போன்றவை நின்றுள்ளன.

கோயம்புத்தூர் கோயம்புத்தூரில் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருள்களைப் பதுக்கிக் கடத்துவது, நீண்டகாலப் பிரச்னை. கேரள எல்லையோர மாவட்டம் என்பதால் இங்கிருந்து அந்த மாநிலத்துக்குக் கடத்தப்படும் ரேஷன் அரிசிதான் அதிகம். தற்போது ஊரடங்கு காரணமாக கடத்தல் குறைந்துவிட்டாலும், பதுக்கல் தீவிரமடைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுமார் ஆறாயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை வாங்குவதில்லை எனக் கூறப்படுகிறது. இந்த கார்டுகளுக்கான பொருள்கள்தான் பதுக்கப்பட்டு வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. மாவட்டத்தில் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி ஓரளவு தரமாகவே இருப்பதால், பதுக்கலும் தாராளம் என்கிறார்கள்.

கரூர் கரூர் மாவட்டத்தில் தற்போது விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி, ஓரளவு தரமாகவே இருக்கிறது. அதே நேரத்தில் ரேஷன் அரிசியை அரசியல் பிரமுகர்கள் பதுக்கி வெளிச்சந்தையில் விற்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ‘பெரும்பாலும் மாதத்தின் பிற்பகுதியில் எந்த கார்டுதாரருக்கும் அரிசி வழங்கப்படுவதில்லை’ என்று குற்றம்சாட்டுகிறார்கள் பயனாளிகள். மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்காகத் தங்கியிருக்கும் வடமாநிலத் தொழிலாளர் களுக்குத்தான் பதுக்கல் அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

‘‘பசியைப் போக்குகிறதா ரேஷன் அரிசி?’’

ராயனூர் பகுதியில் டோக்கன் அடிப்படையில் ரேஷன் அரிசி வழங்காததைக் கண்டித்த சந்திரசேகர் என்பவரை, மாவட்ட வழங்கல் அதிகாரி ஒருமையில் திட்டிய விவகாரம் சர்ச்சைக்குள்ளானது. சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர் மூலமாக சந்திரசேகர்மீது, தான்தோன்றி மலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், ரேஷன் கடை அவலங்களைத் தட்டிக்கேட்க முடியாத நிலையில் பொதுமக்கள் இருக்கிறார்கள்.

நீலகிரி தோட்டப்பயிர்களையும் சுற்றுலாவையும் முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்தில், பெரும்பாலான மக்கள் நிரந்தர வருமானமின்றி பிழைப்பு நடத்திவருகின்றனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் லட்சக் கணக்கானோர் வேலையிழந்து தவிக்கின்றனர். மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பழங்குடிகள், தோட்டத் தொழிலாளர்கள் ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் பொருள்களை மட்டுமே நம்பி உள்ளனர். இங்கு ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி, ஓரளவு தரமானதாகவே இருக்கிறது. அதேசமயம், ‘`அரசு வழங்கும் அரிசி போதுமானதாக இல்லை. இன்னும் கூடுதலாக வழங்க வேண்டும்’’ என்று பலரும் கோரிக்கைவைக்கிறார்கள்.

இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்

பந்தலூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், ‘‘நாங்கள் மூன்று வேளையும் அரிசி உணவைத்தான் உட்கொள்கிறோம். குடும்ப உறுப்பினர்கள் அதிகம் உள்ள வீடுகளில் தற்போது வழங்கப்படும் அரிசி, அரை மாதம்கூட வருவதில்லை. மாதம் 30 கிலோ அளவு வழங்கினால்தான் பசியாற முடியும்’’ என்கிறார்கள்.

ஒரு குடும்பத்துக்கு இது போதுமா?

கடந்த ஏப்ரல் மாதம் ரேஷன் கடைகளில் அரிசி அட்டை குடும்பதாரர்களுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகையும், அரிசி 20 கிலோ, துவரம்பருப்பு ஒரு கிலோ, சர்க்கரை இரண்டு கிலோ, சமையல் எண்ணெய் ஒரு கிலோ வழங்கப்பட்டது. மே மாதத்துக்காக டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், பொருள் விநியோகம் இன்னும் தொடங்கப் படவில்லை. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் வீட்டு வேலை செய்துவருபவர் ராணி. இவரிடம், ‘‘ரேஷனில் வழங்கப்பட்ட இந்தப் பொருள்கள் போதுமானதாக இருந்தனவா?’’ என்று கேட்டோம்.

‘‘எதுவுமே இல்லைங்கிறதுக்கு இது பரவாயில்லைங்க. கொடுக்கிற கவர்மென்ட்டை குறை சொல்லக் கூடாதில்லையா... ஆனாலும், அரிசி ரொம்ப மோசமா இருந்துச்சு. இருபது கிலோன்னு சொன்னாலும் 16, 17 கிலோதான் கிடைச்சது. அதிலும் குப்பை, தூசு போக சலிச்சு எடுத்தா 12, 13 கிலோதான் தேறும். அதுல பாதி இட்லி மாவுக்கும் பாதியை சாப்பாட்டுக்கும் வெச்சுக்கிட்டோம். ருசி, தரம் எல்லாம் பார்க்கக் கூடாது; ஏதோ வயிறு ரொம்புனா போதும்னு நினைக்கிறோம். ஆனா, குழந்தைங்கதான் இதைச் சாப்பிட்டா வயித்துவலின்னு அழுவுதுங்க. துவரம்பருப்பு, எண்ணெய், சீனி எல்லாம் ஒரு வாரத்துக்குக்கூட காணாது. அரிசியை மட்டும் இன்னும் தரமாவும் சரியான எடையிலும் கொடுத்தா போதும்... சமாளிச்சிக்குவோம்’’ என்றார்.