Published:Updated:

‘அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி...’ - முற்றுப்புள்ளி வைக்குமா தமிழ்நாடு அரசு?

ரேஷன் அரிசி
பிரீமியம் ஸ்டோரி
ரேஷன் அரிசி

தமிழ்நாட்டின் ரேஷன் அரிசி முறைகேடு குறித்து, பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் அறிவுரை கூறுவது, இந்த அரசின் நிர்வாகச் சீர்கேட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது

‘அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி...’ - முற்றுப்புள்ளி வைக்குமா தமிழ்நாடு அரசு?

தமிழ்நாட்டின் ரேஷன் அரிசி முறைகேடு குறித்து, பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் அறிவுரை கூறுவது, இந்த அரசின் நிர்வாகச் சீர்கேட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது

Published:Updated:
ரேஷன் அரிசி
பிரீமியம் ஸ்டோரி
ரேஷன் அரிசி

`இந்தியாவிலேயே பொது விநியோகத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுவரும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது. அதேசமயம், சட்ட விரோத ரேஷன் பொருள்கள் கடத்தலிலும் முன்னணி வகிப்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம். “ஏழை எளிய மக்களின் பசியாற்றுவதற்காக அரசாங்கம் அனுப்பிவைக்கும் விலையில்லா அரிசி, மலிவு விலை உணவுப் பொருள்களெல்லாம் நியாயவிலைக் கடையை அடைவதற்கு முன்பே, அநியாயமாக அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டுவருகின்றன” என்று கவலை தெரிவிக்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்!

கடந்த மே மாத இறுதியில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ‘தமிழ்நாட்டிலிருந்து ஏழு வழித்தடங்கள் வழியாக, கார், பைக், லாரிகள் மூலம் தொடர்ந்து ஆந்திராவுக்கு அரிசி கடத்தப்பட்டுவருகிறது. அப்படிக் கடத்திவரப்படும் அரிசி, ஆந்திராவிலுள்ள ஆலைகளில் பாலிஷ் செய்யப்பட்டு, கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது. எனது சொந்தத் தொகுதியான குப்பம் தொகுதியிலுள்ள நான்கு காவல் நிலையங்களில், கடந்த 16 மாதங்களில் 13 அரிசிக் கடத்தல் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்’ எனத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதினார். இந்தக் கடிதம் தமிழ்நாடு அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

அர.சக்கரபாணி
அர.சக்கரபாணி

“தமிழ்நாட்டின் ரேஷன் அரிசி முறைகேடு குறித்து, பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் அறிவுரை கூறுவது, இந்த அரசின் நிர்வாகச் சீர்கேட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது” என அ.தி.மு.க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். `பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் சுட்டிக்காட்டுகிற அளவுக்கு இந்த அரசு செயல்படுவது வேதனையளிக்கிறது’ என்று அறிக்கை வெளியிட்டார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். `வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதென்றால், ஆளுங்கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்குமா?’ எனச் சந்தேகம் எழுப்பினார் அ.ம.மு.க தலைவர் டி.டி.வி.தினகரன்.

மேலும், `வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படும் அரிசி மூட்டைகள் நியாயவிலைக் கடைகளிலிருந்து கடத்திச் செல்லப்படுவதில்லை. நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளிலிருந்துதான் கடத்திச் செல்லப்படுகின்றன. இந்தக் கடத்தல்களுக்கு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரிகளும் உடந்தை. இதன் பின்னணியில் வலிமையான வலைப்பின்னல் இருக்கிறது. தமிழ்நாட்டில் ரேஷன் அரிசிக் கடத்தலைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. பெயரளவில் சில கடத்தல்களைத் தடுக்கும் அந்தப் பிரிவு, பெரும்பான்மையான கடத்தல்களைத் தடுப்பதில்லை. தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடையில் கைரேகை முறை கட்டாயமாக்கப்பட்டிருந்தபோதும், ரேஷன் பொருள்கள் கடத்தப்படுகின்றன என்றால், பொது விநியோகத் திட்டத்தில் ஓட்டை இருக்கிறது’ எனச் சரமாரியாகக் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

 ‘அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி...’ - முற்றுப்புள்ளி வைக்குமா தமிழ்நாடு அரசு?

இந்த நிலையில், ஜூன் 13 முதல் 19-ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் ரேஷன் பொருள்கள் கடத்தல் தொடர்பாக மொத்தம் 171 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும், ரூ.11.7 லட்சம் மதிப்பிலான 2,063 குவின்ட்டால் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், இந்தக் குற்றங்களில் ஈடுபட்ட 171 பேர் கைதுசெய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 47 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் `குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை’ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது.

தொடர்ந்து அதிகரித்துவரும் ரேஷன் பொருள்கள் கடத்தல், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணியிடம் விளக்கம் கேட்டோம், ``தி.மு.க ஆட்சி அமைந்ததற்குப் பிறகு பொது விநியோகத் திட்ட அங்காடிகள், கிடங்குகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம். கடந்த ஆட்சியில், சென்னை, மதுரை என இரண்டு மண்டலங்களாக இருந்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையை, கோயம்புத்தூர், திருச்சியைச் சேர்த்து நான்கு மண்டலங்களாக விரிவுபடுத்தி, கூடுதலாகக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கிறோம். தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் வாகனப் போக்குவரத்து அல்லாத குறுக்குவழிப் பாதைகளின் மூலம் ரேஷன் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, தற்சமயம் ரூ.20 லட்சம் செலவில் 50 `தனித்து இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள்’ (Standalone CCTV Cameras) பொருத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம். மேலும், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலூர், கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளில் கண்காணிப்புக்காக 24 புதிய ரோந்து வாகனங்களை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறோம். ரேஷன் பொருள்கள் எந்த குடோனிலிருந்து கொண்டுசெல்லப்படுகின்றன என்பது தெரியாததால்தான் கடத்தலைத் தடுக்க முடியாமல்போனது. எனவே, தமிழ்நாடு முழுவதுமுள்ள 286 குடோன்களிலிருந்து (Civil Supply Godown) கொண்டுசெல்லப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை என அனைத்து மூட்டைகளுக்கும் `குறியீடு எண்’ வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். இதனால் கடத்தல் தடுக்கப்படும்” என விளக்கமளித்தவர் மேலும், ``தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லாத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களிலும் எதிர்க்கட்சியினர்தான் தலைவர்களாக இருக்கின்றார்கள். எனவே, ஆளுங்கட்சியினரின் தொடர்பில்தான் கடத்தல் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டுவது மிகத்தவறு. கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், கட்சிப் பாகுபாடின்றி அவர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

 ‘அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி...’ - முற்றுப்புள்ளி வைக்குமா தமிழ்நாடு அரசு?

அப்பாவி மக்களின் வயிற்றிலடிக்கும் இந்தக் கொள்ளை உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். ஏழை மக்களுக்குச் சொந்தமான ஒரு பிடி அரிசிகூட கடத்தப்படாத நிலையை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்!