Published:Updated:

அகவிலைப்படி - அரசாணை - போராட்டங்கள்... விழிபிதுங்கும் ரேஷன் பணியாளர்கள்!

ரேஷன் பணியாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ரேஷன் பணியாளர்கள்!

அ.தி.மு.க அரசு வெளியிட்ட அரசாணையை நாங்கள் எதிர்க்கவில்லை. அதில் ஒரு வரி விடப்பட்டதுதான் இந்தப் போராட்டங்களுக்குக் காரணம்.

அகவிலைப்படி - அரசாணை - போராட்டங்கள்... விழிபிதுங்கும் ரேஷன் பணியாளர்கள்!

அ.தி.மு.க அரசு வெளியிட்ட அரசாணையை நாங்கள் எதிர்க்கவில்லை. அதில் ஒரு வரி விடப்பட்டதுதான் இந்தப் போராட்டங்களுக்குக் காரணம்.

Published:Updated:
ரேஷன் பணியாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ரேஷன் பணியாளர்கள்!

‘அரசு ஊழியர்களுக்கு இணையாகத் தங்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி ரேஷன் கடைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, கறுப்பு ரிப்பன் அணிதல் எனப் பல்வேறு முறைகளில் போராடிவருகிறார்கள். கோரிக்கை ஒரு பக்கமென்றால், ‘எந்தச் சங்கத்தின் போராட்டத்தில் பங்கேற்பது?’ என்கிற புதிய குழப்பத்தில் விழிபிதுங்கி நிற்கிறார்கள் ரேஷன் கடைப் பணியாளர்கள்!

தமிழ்நாடு முழுவதும் 35,323 ரேஷன் கடைகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றில் 23,000 பணியாளர்கள் வேலை செய்துவருகிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியில், ரேஷன் கடைப் பணியாளர்களுக்கு 14 சதவிகித அகவிலைப்படி உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப் பட்டது. இந்த அரசாணையை மையப்படுத்தித்தான் தற்போதைய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அகவிலைப்படி - அரசாணை - போராட்டங்கள்... விழிபிதுங்கும் ரேஷன் பணியாளர்கள்!

இது குறித்துப் பேசுகிற தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ) தலைவர் கிருஷ்ணமூர்த்தி, “அ.தி.மு.க அரசு வெளியிட்ட அரசாணையை நாங்கள் எதிர்க்கவில்லை. அதில் ஒரு வரி விடப்பட்டதுதான் இந்தப் போராட்டங்களுக்குக் காரணம். அதாவது, ‘எப்போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்த அகவிலைப்படி உயர்வு ரேஷன் கடைப் பணியாளர்களுக்கும் பொருந்தும்’ என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்படவில்லை. இதனால்தான் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும்போது, அது எங்களுக்குப் பொருந்துவதில்லை.

கடந்த 1.1.2022 அன்று அரசு ஊழியர்களுக்கு 17 சதவிகித அகவிலைப்படி உயர்வைத் தமிழக அரசு வழங்கியது. முந்தைய அரசாணையில் மேற்குறிப்பிட்ட வரி இருந்திருந்தால், ரேஷன் கடைப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைத்திருக்கும். ஆனால், அ.தி.மு.க அரசு செய்த தவற்றால், இன்று ரேஷன் கடைப் பணியாளர்கள் அகவிலைப்படி உயர்வின்றித் தவிக்கிறார்கள். எனவே, திருத்தப்பட்ட அரசாணையை வெளியிடக் கேட்டுத்தான் தற்போது போராட்டங்கள் நடக்கின்றன. கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையில், இது பற்றி அறிவிப்பு வெளியிட்டும் இன்னும் திருத்தப்பட்ட அரசாணை வெளியிடப்படாததால், அமைச்சர் மற்றும் அதிகாரிகளைத் தொடர்ந்து சந்தித்துப் பேசிவருகிறோம். நிதித்துறை அதிகாரிகள்தான் இதற்கு முட்டுக்கட்டைப் போடுவதாக, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு தீர்வு பெற்றுத்தர வேண்டும்’’ என்றார்.

அகவிலைப்படி - அரசாணை - போராட்டங்கள்... விழிபிதுங்கும் ரேஷன் பணியாளர்கள்!

மற்றொரு சங்கமான, ‘தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் சங்கப் பொதுச்செயலாளர்’ தினேஷிடம் பேசுகையில், “ரேஷன் பணியாளர்களுக்கு மட்டுமே சுமார் 15-க்கும் மேற்பட்டச் சங்கங்கள் உள்ளன. ஆனால், தி.மு.க ஆளுங்கட்சியாக இருப்பதால், சி.ஐ.டி.யூ அரசுக்கு ஆதரவாக இருக்கிறது. ஜூன் 13-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 28 மாவட்டங்களில் எங்கள் சங்கத்தின் சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தோம். அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அடுத்த ஒரு வார காலம் எங்கள் போராட்டங்களைத் தற்காலிகமாக ஒத்திவைத்திருக்கிறோம். சரியான தீர்வை அரசு வழங்கவில்லையெனில், எங்கள் போராட்டம் மீண்டும் தொடரும். நாங்கள் ஒன்றும் புதிய சலுகையைக் கேட்கவில்லை, எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம். ஏற்கெனவே, சம்பளம் மிகக்குறைவு, இதில் அகவிலைப்படி வேறு கிடைக்கவில்லையென்றால் பாதிப்பு பெரிதாக இருக்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் 17 சதவிகித அகவிலைப்படியை அரசு ஊழியர்களுக்கு உயர்த்தியபோது, கூட்டுறவுத்துறை ஊழியர்கள் பயன்பெற்றனர். ஆனால் ரேஷன் கடைப் பணியாளர்களுக்கு மட்டும் இல்லை என்றால் நியாயமா?” என்றார் கொதிப்புடன்.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

இந்தப் பிரச்னை குறித்துப் பேசுகிறவர்கள், “டாஸ்மாக், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அந்தந்தத் துறையின் கீழ் மட்டுமே வருவதால் சிக்கலில்லை. ஆனால், ரேஷன் கடைப் பணியாளர்கள் பல கூட்டுறவு சங்கங்களின் கீழ் பிரிந்துகிடப்பதால், ஒற்றுமையில்லாமல் இருக்கிறோம். இப்போதுகூட பல சங்கங்கள் தனித்தனியாகத்தான் போராடி வருகின்றன. எந்தச் சங்கத்தின் போராட்டத்தில் கலந்துகொள்வது என்பதுகூடத் தெரியவில்லை. வேலை செய்யவில்லையென்றால், ஊதியம் கிடைக்காது என்று அரசு எங்களை எச்சரித்திருக்கிறது. ஆனால், எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் போராடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை” என்றனர் விரக்தியுடன்.

தினேஷ்
தினேஷ்

திருத்தப்பட்ட அரசாணை வெளியிடுவதில் என்னதான் சிக்கல் என விளக்கம் பெற, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியைத் தொடர்புகொள்ள முயன்றோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. அதனால், கூட்டுறவுத்துறைச் செயலாளர் நசிமுதீன் ஐ.ஏ.எஸ்-ஸிடம் பேசினோம். “ஒரு திட்டத்தை அறிவிக்கவோ, அரசாணை வெளியிடவோ அரசுக்கென்று சில நடைமுறைகள் உள்ளன. எனினும், ரேஷன் பணியாளர்களின் கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருக்கிறது” என்பதோடு முடித்துக்கொண்டார்.

நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு நியாயம் செய்யுமா அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism