Published:Updated:

ஆர்.பி.ஐ அள்ளித் தந்த ரூ.1,76,000 கோடி... சரியா, தவறா?

அலசல்
பிரீமியம் ஸ்டோரி
News
அலசல்

அலசல்

ஆர்.மோகன பிரபு, CFA

ச்சுறுத்தும் பொருளாதார மந்தநிலை ஒருபக்கம்; புதிய நலத் திட்டங்களை அறிவிக்க முடியாத அளவுக்கு நிதிப் பற்றாக்குறை இன்னொரு மறுபக்கம், எனத் திணறிவந்த மத்திய அரசுக்கு, உதவிகரம் நீட்டும்விதமாக ரிசர்வ் வங்கி, தனது இருப்பிலிருந்து ரூ.1,76,051 கோடியை வழங்குவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு, புதிய நிதித் திட்டங்களைச் செயல்படுத்த அரசுக்கு உதவியாக இருக்கும் என ஒருசாராரும், மத்திய வங்கியின் இருப்பில் கைவைப்பது சரியான முடிவல்ல என்று வேறொரு சாராரும் விவாதித்து வருகின்றனர். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமால் ஜலான் தலைமையிலான குழுவின் பரிந்துரையின்பேரில், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவின் தன்மைகள் பற்றிப் பார்ப்போம்.

நிதித் தேவையின் ஆரம்பப்புள்ளி

சிறப்பான மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் வாயிலாகவும் அடிப்படைக் கட்டுமானத்தை மேம்படுத்துவதன் மூலமாகவும் மக்களின் நன்மதிப்பைப் பெறமுடியும் என்று ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள். இதற்கு ஏராளமான நிதி தேவைப்படுகிறது. அந்த நிதியை நேரடி மற்றும் மறைமுக வரியின் மூலமாகத் திரட்ட முற்படும்போது, மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கலாம், அல்லது வரி அளவு ஏற்கெனவே மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில், வரி வருவாய் உயர்வு சாத்தியமில்லாத ஒன்றாகப் போய்விடலாம்.

எனவே, தேவையான நிதியைத் திரட்ட அரசு புதுமையான உத்திகளைக் கையாளவேண்டியிருக்கும். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, கணிசமான அளவிலான கறுப்புப் பணம் ரிசர்வ் வங்கிக்குத் திரும்ப வராது என்று தெரிந்தபிறகு, அடுத்தகட்ட எதிர்பார்ப்பாக ரிசர்வ் வங்கியின் அவசரக் கால கையிருப்பை நோக்கி நகர ஆரம்பித்தது.

மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளுடன் ஒப்பிடுகையில், இந்திய ரிசர்வ் வங்கி மிக அதிகமான அளவில் மூலதனத்தைக் கொண்டிருக் கிறது என்றும் அத்தகைய அதிகப்படியான நிதியை இந்தியாவின் அடிப்படைக் கட்டுமான வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் குரல்கள் வலுவாக எழத் தொடங்கின. ஆனால், இந்தியா ஒரு வளரும் நாடு என்றும் இந்தியாவின் நன்மதிப்பு, மத்திய வங்கியின் கையிருப்பைப் பெருமளவிற்குச் சார்ந்துள்ளது என்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் போன்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பிமால் ஜலான் குழு

மத்திய வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை மதிக்காத ஆட்சியாளர்கள், பொருளாதார ரீதியான பேரிடரைச் சந்திக்க வேண்டியிருக்கும் என விரால் ஆச்சார்யா அதிரடியாகப் பேசியதால் ஏற்பட்ட பரபரப்புகளுக்கு இடையே கூடிய ரிசர்வ் வங்கியின் மத்திய ஆட்சிக் குழு, முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் பிமால் ஜலான் தலைமையில் 2018-ல் ஆறு உறுப்பினர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.

ரிசர்வ் வங்கிக்குத் தேவையானப் பொருளாதார மூலதனம், சந்தை அபாயங்களைச் சந்திக்கத் தேவையான நிதித் தேவைகள், அவசரக் கால நிதித் தேவைகள் மற்றும் அதிகப்படியான வருவாயை மத்திய அரசுக்கு மாற்றுவதற்கான கொள்கைப் போன்றவற்றைப் பரிந்துரைக்குமாறு இந்தக் குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ரிசர்வ் வங்கியின் மத்திய ஆட்சிக் குழுவின் முடிவுக்கும் பிமால் ஜலான் குழு நியமனத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் உர்ஜித் பட்டேல் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பிமால் குழுவின் பரிந்துரைகள்

ரிசர்வ் வங்கியின் பொருளாதார மூலதனத்தை (Economic Capital), லாப மூலதனம் (Realized Equity) மற்றும் மறுமதிப்பீட்டுக் கையிருப்பு (Revaluation Reserves) என இரண்டு பகுதிகளாக பிமால் ஜலான் நிபுணர் குழு பிரித்து மதிப்பிட்டது. மறு மதிப்பீட்டுக் கையிருப்பு என்பது ரிசர்வ் வங்கியிடம் உள்ள சொத்துகளின் அதிகப்படியான சந்தை மதிப்பீட்டினால் கிடைப்பது. இது முழுக்க முழுக்கச் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. மறுமதிப்பீட்டுக் கையிருப்பை மற்ற காரணங்களுக் காகப் பயன்படுத்தக்கூடாது என்று உறுதியாகப் பரிந்துரைத்தது ஜலான் கமிட்டி.

அதேசமயம், லாப மூலதனம் என்பது ரிசர்வ் வங்கியின் பல செயல்பாடுகளின் வாயிலாகக் கிடைப்பது என்பதால், அந்த நிதியை மட்டுமே தேவையான ஒதுக்கீடுகளுக்குப் பயன்படுத்தலாம். அதாவது, மறுமதிப்பீட்டுக் கையிருப்பு குறையும் போது, லாப மூலதனத்தைத் தேவையான அளவு மறுமதிப்பீட்டுத் தொகுப்புக்கு வழங்கலாம். ஆனால், ஒருபோதும் அதைத் திரும்பப் பெற முடியாது. காரணம், இது ஒருவழி பாதை மட்டுமே.

சர்வதேச நடைமுறைகளின்படி, உலகெங்கிலும் மத்திய வங்கிகள் பெரும்பாலும் சந்தை இழப்பு அபாயங்களை (Expected Shortfall) 99% நம்பிக்கை அடிப்படையில்தான் கணக்கிடுகின்றன. ஆனால், ஜலான் கமிட்டியோ, இந்திய ரிசர்வ் வங்கிக்கு சந்தை அபாயங்களை மதிப்பிட 99.5% இலக்கு நிர்ணயித்துள்ளது. அதே சமயம், கடினமான தருணங்களில் இந்த இலக்கை 97.5 சதவிகிதமாகத் தளர்த்திக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

இந்த அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் லாப மூலதனம், அதன் பேலன்ஸ்ஷீட்டின் மொத்த அளவில் 5.5% - 6.5% வரை இருக்கலாம் என ஜலான் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இதில் 4.5%-5.5% நிதி ஒதுக்கீடு தேசத்தின் பொருளாதாரச் சமன்நிலையை உறுதிப்படுத்துவதற்காகவும் 1% நிதி ஒதுக்கீடு கடன் மற்றும் நடைமுறை அபாயங்களை (Credit and Operational Risks) எதிர் கொள்வதற்காகவும் ஆனவை.

ஆக மொத்தத்தில், ரிசர்வ் வங்கியின் லாப மூலதனத் தேவை விகிதத்தை 5.5% - 6.5% என்ற வரம்பிற்கு இடையே மத்திய ஆட்சிக் குழு முடிவு செய்யலாம். தேவைக்கு அதிகப்படியான கைவசம் உள்ள லாப மூலதனத்தை மத்திய அரசுக்கு வழங்கலாம். இதுமட்டுமல்லாமல், தேவையான ஒதுக்கீடுகள் செய்தபிறகு வருடாந்தர உபரி வருவாயையும் மத்திய அரசுக்கு வழங்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரிசர்வ் வங்கியின் கொடை

பிமால் ஜலான் ஆய்வறிக்கையை முழுமை யாக ஏற்றுக்கொண்ட ரிசர்வ் வங்கி 2018-19-ம் ஆண்டிற்கான உபரி வருவாய் வழங்குதலுக்கும் ஒப்புதல் வழங்கியது. கடந்த ஆண்டின் இறுதியில், ரிசர்வ் வங்கியின் லாப மூலதனம் 6.8% ஆக உள்ள நிலையில், பிமால் ஜலான் ஆய்வின்படி, இது 5.5%-6.5% வரம்புக்குள் இருந்தால் போதுமானது. இந்த வரம்பின் அடிமட்ட நிலையான 5.5% அளவிற்கு லாப மூலதனம் இருந்தால் போதுமானது என்று முடிவெடுத்த ரிசர்வ் வங்கியின் சென்ட்ரல் போர்டு, அதிகப்படி யாக உள்ள 1.3% லாப மூலதனத்தை (ரூ.52,637 கோடி) மத்திய அரசின் கஜானாவிற்கு மாற்ற உத்தரவிட்டது.

பிமால் ஜலான் அறிக்கையின்படி, சந்தை அபாயங்களைக் கணக்கிட்ட ரிசர்வ் வங்கி, அதன் பொருளாதார மூலதனம், 23.3% ஆக இருப்பதாக அறிவித்துள்ளது. சர்வதேச நடைமுறைகளின்படி, இது போதுமானதாகக் கருதப்படுவதால், 2018-19-ம் ஆண்டின் உபரி வருவாய் முழுவதையும் (ரூ.1,23,414 கோடி) மத்திய அரசுக்கு வழங்க முடிவெடுக்கப் பட்டது. ஆக மொத்தத்தில், பிமால் ஆய்வறிக்கையின் பலனாக, ரூ.1,76.051 கோடி மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது. இந்தத் தொகையில் ரூ.28,000 கோடி இடைக்கால நிவாரணமாக மத்திய அரசுக்கு (பிப்ரவரி 2019) வழங்கப்பட்டுவிட்டதால், மிச்சமுள்ள ரூ.1,28,051 கோடி நடப்பு நிதியாண்டில் வழங்கப்படும். இந்தத் தொகையில், நடப்பு நிதியாண்டின் பட்ஜெட்டில் ஏற்கெனவே ரூ.90,000 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுவிட்டதால் அதாவது, இந்த இந்தத் திட்டங்களுக்கு இவ்வளவு செலவு என மத்திய அரசு முடிவு செய்துவிட்டதால், க்குக் கிடைக்கப் போகும் அதிகப்படியான வருவாய் ரூ.38,051 கோடி மட்டுமே. இந்தப் பணமும் பட்ஜெட் எனும் பெருங்கடலில் கரைந்த பெருங்காயமாக மாறாமல், அடிப்படைக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தினால், மக்களிடம் நல்ல பெயர் வாங்கமுடியும்.

மத்திய வங்கி - நாட்டின் கடைசி நம்பிக்கை

ஒரு நாட்டின் மத்திய வங்கிக்கு ஏராளமான பொறுப்புகள் உள்ளன. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது, அந்நியச் செலாவணிச் சந்தையில் அதீத ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்ப்பது, கரன்சி தாள்களை அச்சிடுவது, வணிக வங்கிகளை மேற்பார்வையிடுவது, மத்திய, மாநில அரசுகளின் கடன்களை நிர்வகிப்பது என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும்விட முக்கியமானது, சாதாரண மக்களின் இறுதி நம்பிக்கை யாக நிலைத்திருப்பதுதான். மேலும், ரகுராம் ராஜன் போன்ற பொருளாதார நிபுணர்கள் எச்சரித்ததுபோல, சர்வதேச முதலீட்டாளர் களின் மதிப்பீட்டில், மத்திய வங்கியின் தன்னாட்சி அதிகாரம் மற்றும் ஆரோக்கியம் மிக முக்கியமானவை என்பதை மத்தியில் ஆட்சிசெய்யும், செய்யவிருக்கும் அரசாங்கங்களும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்!

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளவை கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே!)

ஆர்.பி.ஐ செய்தது சரி!

வ.நாகப்பன், முதலீட்டு ஆலோசகர்

ஆர்.பி.ஐ அள்ளித் தந்த ரூ.1,76,000 கோடி... சரியா, தவறா?

“ரிசர்வ் வங்கி ஈட்டும் லாபத்தின் ஒரு பகுதி, எதிர்காலத் தேவைகளுக்காக ரிசர்வ் தொகையாகச் சேமிப்பில் இருக்கும். இப்போது அந்தச் சேமிப்பைத்தான் எடுக்க இருக்கிறார்கள். இதில், எந்தத் தவறும் இல்லை. ரிசர்வ் வங்கி கொடுத்த ரூ.1.76 லட்சம் கோடியில் ரூ.1,23,414 கோடி ரிசர்விலிருந்து எடுக்கப்பட்ட தொகையல்ல. இது 2018-19-ம் ஆண்டு உபரித்தொகை. இது தவிர எடுக்கப்படும் ரூ.52,637 கோடிதான் கையிருப்புத் தொகையிலிருந்து எடுக்கப்படும் தொகை. ஆகவே, பணத்தை ரிசர்வ் வங்கி அளிப்பது முறையானதுதான்.

ஆனால், எந்த அவசரத் தேவைக்காக இது பயன்படப்போகிறது என்பதை மக்களுக்குச் சொல்வது அரசின் கடமை. அதை அரசு சொல்லாமல் போனதுதான் இந்தச் செய்தி மிகப்பெரிய விவாதத்திற்கு உள்ளாகக் காரணம்.”

-தமிழ்ப்பிரபா