ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

உலகம் என் பார்வையில்... அந்த விபத்தும்.. நீங்காத நினைவும்!

அந்த விபத்தும்.. நீங்காத நினைவும்!
பிரீமியம் ஸ்டோரி
News
அந்த விபத்தும்.. நீங்காத நினைவும்!

சிறப்புப் பரிசு குக்கர்

கடந்த சில நாள்களில், உள்ளூர் முதல் உலகம் வரை நடந்த சம்பவங்களில், உங்களை மிகவும் பாதித்த, சிந்திக்க வைத்த, ரௌத்திரம் கொள்ள வைத்த, சிரிக்க வைத்த, அறிவூட்டிய என... உங்கள் உணர்வுடன் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாகிவிட்ட ஒரு செய்தியைப் பற்றித் திருத்தமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுங்கள் என்று சென்ற இதழில் (22.11.2022) அறிவித்திருந்தோம். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புப் பரிசு பெறுகிறது இந்த உணர்வு...

நான் வழக்கமாக ஆபீஸுக்கு இருசக்கர வாகனத்தில் செல்வது வழக்கம். பல நாள்களாக இது தொடர்ந்து வந்தாலும் 10.11.2022 அன்று ஏற்பட்ட நிகழ்வு என் மனதில் தொடர்ந்து ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

நான் இதற்கு முன்பு எத்தனையோ விபத்துகளைப் பார்த்திருந்தாலும் அன்று பார்த்த விபத்து மட்டும் என்னுள் பலவிதமான கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பியது.

நீ யார்?

நீ மனிதாபிமானம் கொண்டவள்தானா?

நீ ஏன் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை?

எங்கே போனது உன் மனிதநேயம்?

உன் குடும்ப உறுப்பினராக இருந்தாலும் நீ இவ்வாறு தான் கடந்து செல்வாயா?

குறைந்தபட்சம் உன்னால் அவர்களுக்கு பத்து நிமிடங்கள் ஒதுக்க முடியாமல் போனது ஏன்?

இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் என்னுள் எழுந்துகொண்டே இருந்தன.

ஆம்...

உலகம் என் பார்வையில்... அந்த விபத்தும்.. நீங்காத நினைவும்!

என்னதான் நடந்தது?

காலை 8.30 மணியிலிருந்து 8.45 மணிக்குள் அந்த விபத்து ஏற்பட்டு இருக்கும். ஆண், பெண் என இரண்டு முதியவர்கள். எப்படியும் வயது 65 + இருக் கும். அவர்கள் வந்த இருசக்கர வாகனம்தான் விபத்துக்குள்ளானது. அதிலும் அந்தப் பெரியவருக்கு சிறிய காயங்கள். ஆனால், அந்தப் பெண்மணிக்கு நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது. அவர் அணிந்திருந்த பச்சை வண்ணப் புடவையில் ரத்தம் வழிந்ததைப் பார்த்தபோது பதைபதைப்பாக இருந்தது. என் அன்னை யின் தோற்றத்தைப் பெற்றிருந்தார் அந்தப் பெண்மணி.

என்னையும் அறியாமல் வண்டியை ஓரங்கட்ட முயற்சி செய்தேன். எனக்குப் பின்னால் வரும் வாகனங்களின் ஹாரன் சத்தம் கேட்டு அடுத்த நொடி, ‘உனக்கு அலுவல கத்துக்கு நேரமாகிறது. உனக்கு அங்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு உள்ளது. ஒரு நிமிடம் கால தாமதமும் உனக்கான ஊதியத்தில் இழப்பீட்டை உண்டாக்கும். நேரத்தை வீணாக்காதே... விரைந்து செல்’ என்றது உள் மனம்.

குடும்பத்தின் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அத்தகைய முடிவே அப்போது சரி என்று எனக்குள் எண்ணத் தோன்றியது. அதனால் அலுவலகத்தை நோக்கி என் இருசக்கர வாகனத்தைச் செலுத்த தொடங் கினேன். ஆனால், அங்கே சில நல்ல உள்ளங்கள் அவர் களுக்கு உதவி செய்துகொண்டுதான் இருந்தார்கள்.

அலுவலகத்துக்கு சரியான நேரத்தில் வந்துவிட்டேன். ஆனால், என் வாழ்க்கைப் பயணத்தில் சரியான நபராக நடந்துகொள்ளவில்லை என்ற எண்ணம் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.

இருக்கையில் அமர்ந்தேன். என்னையும் அறியாமல் அந்த நிகழ்வுகள் தொடர்ந்து என்னுள் ஒருவிதமான குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டே இருந்தன.

அலுவலக நண்பர்களின் வழக்கமான நலம் விசாரிப்புகளுக்கு இடையே ஒரு சில நண்பர்களின் `என்னாச்சு ஒரு மாதிரியா இருக்கீங்க’ என்ற கேள்விக்கு... ‘சிறிது நேரம் கொடுங்கள். பிறகு பேசுகிறேன்’ என்று என்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு மெள்ள அந்த நினைவுகளில் தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தேன்.

இன்றைய நாள் பொழுதில் அவர்கள் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்களுக்காக நான் அன்றைய சூழ்நிலையில் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான். நான் வரும்போதும் வந்த பின்பும் நான் வணங்கும் கடவுளை பலமுறை அவர்களுக்காக பிரார்த்தனை செய்துகொண்டேன். அவர்கள் இருவரும் நலம் பெற வேண்டும், நலமுடன் இருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டே இருந்தேன்.

இந்த வயதில் அவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்த தையும் நான் எண்ணிப்பார்க்காமல் இல்லை.

எது எப்படியோ... அன்றைய நாளிலிருந்து இனி இது போன்ற தவற்றை நான் செய்யக் கூடாது என்று என்னுள் சில மாற்றங்களைச் செய்துகொண்டேன்.

அது.. விபத்து இல்லாமல் பயணிப்போம்... விபத்து ஏற்பட்டால் நாம் உடன் நிற்போம்!

- பவானி பாலகிருஷ்ணன், சென்னை-77

வாசகர்களே.... நீங்களும் எழுதி அனுப்பலாம்...

அனுப்ப வேண்டிய முகவரி:
உலகம் என் பார்வையில்...

அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com