தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

உங்களுக்கு இருக்கிறதா ஃபேஷன் பிரஷர்..?!

ஃபேஷன் பிரஷர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபேஷன் பிரஷர்

அவள் வாசகியின் கடிதம்....

முன் எப்போதையும்விட பெண்கள் ஆடைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் காலத்துக்கு வந்திருக்கிறோம். பொருளாதார தற்சார்பு, ஆன்லைன் ஷாப்பிங் வசதி, சோஷியல் மீடியாவின் தாக்கம் என இவையெல்லாம் பெண்களை அதிக ஆடைகளை வாங்கவும், ஆடைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் வைத்திருக்கின்றன.

விதவிதமாக உடுத்திக்கொள்வது என்பது பெண்களுக்குத் தோற்றம் சார்ந்ததாக மட்டுமல்லாது, அவர்களின் தன்னம்பிக்கைக்கும் கைகொடுக்கிறது. பெரு நகரங்களில் ஏ.சி அறைகளில் வேலைபார்க்கும் பெண்களின் ஆங்க்கிள் லெங்த் ஜீன்ஸ்களில் இருந்து, கிராமத்தில் மில் வேலைகளுக்குச் செல்லும் அக்காக் களின் கலம்காரி பிளவுஸ்கள்வரை, தங்களுக்குப்

பிடித்த உடைகளில் அவர்கள் தங்களை ஸ்பெஷலாக உணர்கிறார்கள். அது, அவர்களைப் புத்துணர்வுடன் தங்களின் தினங்களைச் சந்திக்க வைக்கிறது.

முன்னர் எல்லாம் ஒரு ஃபேஷன் பாலிவுட்டுக்கு வந்து, அது சில மாதங்கள் கழித்து கோலிவுட்டுக்கு வந்து, பின்னர் சென்னைக்கு வந்து, இறுதியாக ஊர்ப் பக்கம் சென்றடைய ஓராண்டுக்கு மேல் ஆகிவிடும். அதே போல, அந்த ஃபேஷனின் தன்மையும் இந்த அடுக்குகளில் இறங்கி வரும்போது அதற்கேற்றாற்போல மாறியிருக்கும். இன்று அப்படியல்ல. சோஷியல் மீடியாவின் தாக்கம் இந்தத் தூர, கால இடைவெளியை எல்லாம் தூக்கி எறிந்துள்ளது.

உங்களுக்கு இருக்கிறதா ஃபேஷன் பிரஷர்..?!

இன்று, இந்தியாவின் முன்னணி காஸ்ட்யூம் டிசைனரான மனிஷ் மல்ஹோத்ராவோ, நடிகைகள் ஆலியா பட்டோ, ஜான்வி கபூரோ, சமந்தாவோ தங்கள் இன்ஸ்டாவில் பதிவிடும் ஃபேஷனிஸ்டா புகைப்படங்களை பெண்கள் ஃபாலோ செய்கிறார்கள். உடனடியாக அதை ஜவுளிக் கடைகள், மால்கள், ஆன்லைன் ஷாப்பிங்குகள் எனத் தேடி வாங்கிவிடுகிறார்கள்; காஸ்ட்யூம் டிசைனர் களிடம் தங்களுக்கான பட்ஜெட்டில் வடிவமைத்து வாங்கி விடுகிறார்கள். இன்னொரு பக்கம், நம் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்களும் லைவ் கேட்லாக் ஆகி நம்மை தூண்டுகிறார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய ஒன்று... ஃபேஷனை பின்பற்றுவது பெண்களின் மகிழ்வுக்குரிய விஷயம். ஆனால், அதில் நாம் நம் சௌகர்யத்தை தொலைத்து விடாதபடி அந்த ஃபேஷன் நமக்கு வசதியாக அமைய வேண்டும். நாம் மிகவும் விலையுயர்ந்த, டிரெண்டில் இருக்கும் ஆடையை உடுத்தினாலும், ‘நமக்கு இது செட் ஆகுதா...’ என்ற சந்தேகம் வந்துவிட்டால், முகத்தில் அந்த தன்னம்பிக்கையின்மை நிச்சயம் வெளிப்பட்டுவிடும்.

அதற்காகப் புதிய ஆடைகளை முயலக் கூடாது என்பது அல்ல. நிச்சயம் முயன்று பார்க்கலாம். ‘அட சூப்பர்ல’ என்று கண்ணாடி குதித்தால், சந்தோஷமாக அதை உடுத்திக்கொள்ளலாம். ஆனால், ‘இன்ஸ்டாவில் அந்த சீரியல் நடிகை இந்த டிரஸ்ஸைப் போட்டு இருந்தபோது நன்றாகத் தெரிந்தே... ஆனால், எனக்கு செட் ஆகவில்லையே’ என்று தோன்றினால், நம் உள் மனம் சொல்வதைப் புறக்கணித்துவிட்டு, ஃபேஷன் பிரஷருக்கு நாம் ஆளாகாமல் பார்த்துக்கொள்வோம்.

நமக்கு வசதியில்லாத உடைகளை ஃபேஷன் என்ற கட்டாயத்தில் அணிவதைத் தவிர்த்து, நமக்கு வசதியான, பிடித்த ஆடைகளை நம்முடைய ஆல்டைம் ஃபேஷனாக ஆக்கிக்கொள்வோம். ஃபேஷன் என்பது மார்க்கெட்டிங் யுக்திதானே தவிர, நம் அழகுக்கான அளவுகோல் அல்ல என்றுணர்வோம்.

- அமுதா, மதுரை