Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

கல்லை கல்லால் எடுத்த கதை!

அனுபவங்கள் ஆயிரம்!

கல்லை கல்லால் எடுத்த கதை!

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

சிறப்புப் பரிசு

முதல் குரல் நமதாக இருக்கட்டும்!

கடலூரில் ஒரு பேருந்தில் பயணித்தபோது, நடத்துநர் அனைவருக்கும் எச்சில் தொட்டு டிக்கெட் கொடுத்தபடி இருந்தார். அதைப் பார்த்துப் பலரும் முகம் சுளித்தாலும், அவரைக் கண்டிக்கவில்லை. என்னிடம் டிக்கெட் கொடுத்தபோது, ‘தாடைக்குக் கீழ மாஸ்க் போட்டிருக்கீங்க. டிக்கெட்டை எச்சில் தொட்டுக் கொடுக்குறீங்க’ என்று அதை வாங்க மறுத்தேன். பின்னர், சக பயணிகளும் என்னுடன் சேர்ந்து குரல் கொடுக்க, வேறு வழியின்றி மன்னிப்புக் கேட்ட நடத்துநர், இனி திருத்திக் கொள்வதாகக் கூறினார். ஒரு தவற்றைத் தட்டிக் கேட்க யாராவது முதல் குரல் கொடுக்கட்டும் என்று காத்திருக்காமல், நாமே அந்த முதல் குரலாக இருக்க வேண்டும்.

- பா.கவிதா, சிதம்பரம்

****

ரொக்கப் பரிசு ரூ.300/-

என் முகம் போன போக்கு!

ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பி வந்து பார்த்தால், எனது ஸ்கூட்டியைக் காணவில்லை. பதறிப்போய் எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தும், காணவில்லை. அருகிலிருந்தவர்களின் அறிவுரைப்படி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். பார்த்தால், எனது ஸ்கூட்டி அங்கே நிற்கிறது. திருமணத்துக்கு நான் ஆட்டோவில் சென்றது அப்போதுதான் ஞாபகம் வந்தது. மறுநாள் காவல் நிலையத்தில் என் புகாரைத் திரும்பப் பெறச் சென்றபோது, என் முகம்போன போக்கை என்னவென்று சொல்வது? மேலும், திருமண வீட்டினரின் கேள்விகளுக்கும் கேலிகளுக்கும் நான் திணறிய பாடு தனிக்கதை.

- சுந்தராம்பாள், சென்னை-33

****

அனுபவங்கள் ஆயிரம்!

ரொக்கப் பரிசு ரூ.300/-

கிச்சன் க்வீன்!

கல்லூரி விடுமுறை நாள்களில் அம்மா சமைத்துப் பழகச் சொன்னபோது, முதன் முதலாகப் பாயசம் செய்தேன். ஜவ்வரிசி, சேமியா இரண்டையும் சேர்த்துக் குக்கரில் வேகவைக்க, சேமியா உருவே தெரியாமல் பசை போல ஆகிவிட்டது. உடனே சிறிது உப்பு, சீரகம் சேர்த்துப் பிசைந்து, மொட்டை மாடியில் துணி விரித்து வடகமாக ஊற்றிவிட்டேன். அம்மாவுக்குக் கோபம் வந்தாலும், என் சமாளிப்பைக் கண்டு ‘கூல்' ஆனார். அன்றிலிருந்து இன்றுவரை என் கிச்சனில் இட்லி மிஞ்சினாலும் வேஸ்ட் ஆகாமல் உருமாறிவிடும், சீரியலில் ‘இவருக்கு பதில் இவர் என்பது போல்’.

- என்.பாக்கியலட்சுமி, மதுரை-9

****

அனுபவங்கள் ஆயிரம்!

ரொக்கப் பரிசு ரூ.300/-

கல்லை கல்லால் எடுத்த கதை!

எங்கள் எதிர் வீட்டினர், மணல், ஜல்லியை வீட்டுக்கு முன் கொட்டி பாதி தெருவை அடைத்திருந்தனர். விசாரித்தபோது, ‘ஆறு மாசம் கழிச்சு வீட்டை விரிவாக்குற வேலையை ஆரம்பிக்கப்போறோம்’ என்றனர். ‘அதுவரை தெரு இப்படி அடைத்திருக்குமே’ என்றதற்கு பதிலில்லை. அது, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததோடு மட்டு மல்லாமல் தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களும் குடியேற ஆரம்பித்தன. ஊராட்சி மன்றத் தலைவர் வரை வந்து சொல்லிப் பார்த்தும் பலனில்லை. அம்மணி குணம் அப்படி. உடனே நாங்கள், கொஞ்சம் செங்கல், ஜல்லி வரவழைத்து மீதி தெருவையும் அடைத்துக் கொட்டினோம். அடுத்தடுத் துள்ள நான்கைந்து தெருவாசிகள் பிரதான சாலைக்குச் செல்ல எங்கள் தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால், அனைவரும் திரண்டு வந்து நியாயம் கேட்டனர். ‘தவறுதான் அள்ளி விடுகிறோம், அதே போல அவர்களையும் அள்ளச் சொல்லுங்கள்’ என்றதும், அனைவரும் அழுத்தம் கொடுக்க, ஒரு வழியாகத் தெரு சுத்தமானது. கல்லால் கல்லை எடுப்பது இதுதான்!

- ஆர்.ஆனந்த லட்சுமி, தஞ்சாவூர்

அனுபவங்கள் ஆயிரம்!

ரொக்கப் பரிசு ரூ.300/-

அதிரவைத்த கையெழுத்து!

நான் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியபோது, எட்டாம் வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவி ஒருவர் என்னிடம் வந்தார். யாரோ தன் நோட்டில் லவ் லெட்டரை வைத்து விட்டதாகவும், அதிலிருந்து தனக்கு அச்சமாக உள்ளதாகவும், படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை என்றும் கூறினார். அவர் வகுப்பு மாணவர்களின் ரெக்கார்டு நோட்டுகள் அனைத்தையும் எடுத்து வந்து, அந்தக் கடிதத்தில் இருந்த கையெழுத்துடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், யாருடைய கையெழுத் துடனும் ஒத்துப்போகவில்லை. சரி அடுத்த முறை கடிதம் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தோம். இந்நிலையில், வாரம் ஒருமுறை தலைமை ஆசிரியரிடம் பார்வைக்கு வரும் காம்போஸிஷன் நோட்டில் நான் கையெழுத்திட்டபோது, அந்தக் கையெழுத் தைக் கண்டுபிடித்தேன். பெயரை பார்த்தபோது அதிர்ந்துவிட்டேன். அது, அதே வகுப்பில் இருந்த ஒரு மாணவியின் நோட். அழைத்து விசாரித்தபோது, தன்னை எப்போதும் தன் வகுப்பு ஆசிரியை நன்றாகப் படிக்கும் அம் மாணவியுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுவதாக வும், அதனால் அவர் மேலுள்ள பொறாமையில் தான் அந்த லவ் லெட்டரை எழுதி வைத்த தாகவும் கூறினார். மாணவிக்கு அறிவுரை கூறியதுடன், அந்த ஆசிரியைக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன்.

- அன்புக்கரசி பாலசுப்பிரமணியன், திருவாரூர்

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்...

பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி

அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism