Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

கொரோனா தடுப்பூசி போட என் கணவரோடு சென்றிருந்தேன். ஊசி போட்டு அவர் கிளம்பியபோது, ‘படிக்கட்டுல பார்த்து இறங்குங்கய்யா.

அனுபவங்கள் ஆயிரம்!

கொரோனா தடுப்பூசி போட என் கணவரோடு சென்றிருந்தேன். ஊசி போட்டு அவர் கிளம்பியபோது, ‘படிக்கட்டுல பார்த்து இறங்குங்கய்யா.

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!
அனுபவங்கள் ஆயிரம்!

ஏன் சொல்ல வேண்டும்?!

சமீபத்தில் தோழி வீட்டுக்குச் சென்றிருந்தபோது, யாரோ வந்திருந்தார்கள். அவர்கள் தோழி யின் கணவர் பற்றிக் கேட்க, அலுவலகம் சென்றிருப்பதாகச் சொன்னாள். ஆனால், அவள் கணவர் வெளிநாட்டில் இருப்பதால், ‘ஏன்டி அப்படிச் சொன்னே?’ என்று கேட்டேன். ‘எல்லோரிடமும் என் கணவர் வெளிநாட்டில் இருப்பதை சொல்லத் தேவையில்லை. ஆண் துணை இல்லாத வீடு எனத் தெரிந்தால் திருட்டு முதல் ஆண் களின் தொந்தரவு வரை எல்லா வாய்ப்பும் இருக்கிறது. அதனால் மிக நெருங்கிய வட்டம் தவிர்த்து யாரிடமும் நான் என் கணவர் வெளி நாட்டில் இருப்பதை பகிர்வதில்லை’ என்றாள். சரிதானே?!

 - ரம்யா ராமகிருஷ்ணன், அறந்தாங்கி

அனுபவங்கள் ஆயிரம்!

ஒரு சொல் என்ன செய்யும்?!

கொரோனா தடுப்பூசி போட என் கணவரோடு சென்றிருந்தேன். ஊசி போட்டு அவர் கிளம்பியபோது, ‘படிக்கட்டுல பார்த்து இறங்குங்கய்யா. அஞ்சு நிமிஷம் உட்கார்ந்துட்டு போங்க, தண்ணி எதுவும் தரட்டுமா?’ என்றெல்லாம் ஊசி போட்ட செவிலியர் அவரை கரிசனத்துடன் சொன்னார். ‘இத்தனை பேரு ஊசி போட்டோம். அதென்ன உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு?’ என்றேன் என் கணவரிடம். ‘அந்தப் பொண்ணுகிட்ட ஊசி போட்டுக்கிட்ட நீங்க யாருமே சொல்லாத ஒரு வார்த்தையை நான் சொன்னேன்’ என்றார். நான் புரியாமல் பார்க்க, ‘தேங்க்ஸ்ம்மானு சொன்னேன். அந்த வார்த்தைக்கு எவ்ளோ அதிர்வு இருக்கு பாரு’ என்றார். நாமும் சொல்வோம் நன்றி!

- லலிதா தங்கவேல், பெருந்துறை

அனுபவங்கள் ஆயிரம்!

கமகம உருளைக்கிழங்கு!

அப்போது எனக்கு 10 வயது. அம்மா திடீரென ஊருக்குக் கிளம்ப வேண்டிய சூழல். உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று அம்மாவிடம் ஓராயிரம் முறை கேட்டுக் கொண்டேன். ஒருவழியாகச் சமைத்துவிட்டேன். ‘என்ன கமகமனு வாசனை’ என்றவாறு வந்த என் தங்கைகளுக்கு நான் சாப்பாடு போட, எடுத்து வாயில் வைத்தவர் களின் முகம் அஷ்டகோணலானது. ஆனாலும், செய்த தவறு என்ன என்பது புரியாமல் நாங்கள் விழித்துக் கொண்டிருக்க, மஞ்சள்தூளுக்குப் பதிலாக கஸ்தூரி மஞ்சள், பூலாங் கிழங்கு, பாசிப்பயறு, சந்தனம் சேர்த்து அரைத்த பூசு மஞ்சள்தூளை நான் சேர்த்ததை ஒருவழியாக நாங்கள் கண்டுபிடிக்க... இத்தனை வருடங்களாகியும் என் வீட்டில் அதைச் சொல்லிச் சொல்லிச் சிரிப் பார்கள் இன்றும். ‘பத்து வயசுல நீ சமைக்க நினைச்சதே பெருசு’ என்று, அப்போது என்னைத் தட்டிக் கொடுத்த அப்பாவின் அன்பைப் பற்றியும் சொல்லியாக வேண்டும்!

- பழனீஸ்வரி தினகரன், சென்னை-129

எதிர்மறை எண்ணம் தராமல் இருப்போம்!

ஒருநாள் என் தோழி வீட்டுக்குச் சென்றிருந்தபோது, பூ விற்கும் பெண்ணிடம் பூ வாங்கி மகளுக்குச் சூட்டிவிட்டவள், ‘`நாளைக்கு கல்யாணம் பண்ணப் போற எடத்துல உன்னை எப்படி பார்த்துக்கிறாங்களோ தெரியல. இங்க இருக்கும்போது என்ன வேணும்னாலும் கேட்டு வாங்கிக்கோ, அனுபவிச்சுக்கோ. அங்க நீ விருப்பப்பட்டது எல்லாம் கிடைக்குமோ என்னவோ...’’ என்று கூறினாள். அதைக் கேட்டு வருந்திய நான், ‘`திருமணம்னாலே கஷ்டம் மாதிரியும், திருமணமான பெண்கள் எல்லாருமே கஷ்டப்படுறது மாதிரியும் பெண் பிள்ளைகள்கிட்ட பேசக்கூடாது. நாளைக்குக் கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்குப் போகும்போதே அவங்க அந்த முன்முடிவோடதான் போவாங்க. ஒருவேளை, அப்புறம் ஏன் நாம கல்யாணம் பண்ணிக்கணும்னு அவங்க நினைக்க ஆரம்பிக்கிற வாய்ப்பும் இருக்கு. எப்பவுமே லைஃப் இஸ் பியூட்டிஃபுல்னு நேர்மறை எண்ணமே கொடுத்து வளர்ப்போம் நம்ம பிள்ளைகளுக்கு’’ என்றேன். சரிதானே?!

- பி.ரமணி, சேலம்-3

அனுபவங்கள் ஆயிரம்!

100 ரூபாய் நோட்டு!

என் அப்பா 1970-களில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, பிடித்தம் போக கையில் 60 - 70 ரூபாய் சம்பளம் வாங்கி வந்து அம்மாவிடம் தருவார். அதில் 1, 2, 5, 10 ரூபாய் நோட்டுகள் இருக்கும். அப்போதெல்லாம் நான் 100 ரூபாய் நோட்டைப் பார்த்ததே இல்லை. ஒரு தீபாவளி நேரம், போனஸ் பணத்தோடு 150 ரூபாய் அப்பா கைக்கு வந்தது. அதில் இருந்த 100 ரூபாய் நோட்டைப் பார்த்ததும் அம்மாவுக்கும் அண்ணனுக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை. அதே உற்சாகத்தோடு, அம்மா, அண்ணனை அழைத்துக்கொண்டு, அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு தீபாவளிக்கு துணி முதல் மளிகை வரை வாங்கச் சென்றுவிட்டார். நான் பள்ளி விட்டு வீடு திரும்பியதும் என் அண்ணனும் அம்மாவும் என்னிடம், தாங்கள் 100 ரூபாய் நோட்டை பார்த்ததையும், அதில் பொருள்கள் வாங்கி வந்ததையும் சொல்ல, ‘நான் மட்டும் அதைப் பார்க்கல, என்கிட்ட காட்டாம ஏன் செலவழிச்சீங்க’ என்று ஒரே அழுகை. இப்போது ஆயிரம் ஆயிரமாகக் கைகளில் பணம் வந்தாலும், 50 வருடங்களுக்கு முன் நான் பார்க்காமல்விட்ட அந்த 100 ரூபாய் நோட்டு இப்போதும் என் மனதில் நிற்கிறது ஏக்கமாக!

-  ஆர்.ரேவதி, கபிஸ்தலம்

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism