Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்
அனுபவங்கள் ஆயிரம்!

ஜோடி நல்ல ஜோடி!

சமீபத்தில் புடவை எடுக்கத் தோழியுடன் கடைக்குச் சென்றிருந்தேன். அவள் மூன்று புடவைகளை இறுதி செய்து, அவற்றை போட்டோ எடுத்து தன் கணவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி, மூன்றில் எதை எடுக்க எனக் கேட்டார். ‘இதையெல்லாமா உன் கணவர்கிட்ட கேட்கணும்? உனக்குனு விருப்பம், தேர்வு இல்லையா?’ என்று அவளிடம் கோபப்பட்டேன். அதற்குத் தோழி சொன்ன பதிலைக் கேட்டபோது ‘வாவ்’ என்றிருந்தது. ‘புடவைனு இல்லடி... எந்த விஷயம்னாலும் என்னை அவரும், அவரை நானும் கேட்காம எதையும் செய்ய மாட்டோம். டிரஸ்ஸை பொறுத்தவரை, எப்பவும் ரெண்டு பேரும் ஒரே கலர்ல, ஷேடுலதான் புடவை - ஷர்ட் போடுவோம். அதுல எங்களுக்கு ஒரு ரொமான்ஸ் திருப்தி. அதான் அவர்கிட்ட கேட்டு கலர் செலக்ட் செய்றேன். எங்ககிட்ட இதுவரை இல்லாத கலர், அல்லது சமீபத்துல எடுக்காத கலரை அவர்தான் சரியா சொல்வார்’’ என்றாள் வெட்கத்துடன்.

-எம்.ஏ.நிவேதா, திருச்சி-15

அனுபவங்கள் ஆயிரம்!

நாமளும் செய்யலாமே!

சமீபத்தில் தோழியைப் பார்க்க அவள் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, சிறிது நேரத்தில் ஒரு டப்பாவை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குக் கிளம்பியவள் என்னையும் அழைத்துச் சென்றாள். அங்கிருந்த பாத்திரங் களில், டப்பாவில் இருந்த தானியத்தைக் கொட்டிவிட்டு, மொட்டை மாடி பைப்பில் தண்ணீர் பிடித்து மற்றுமொரு பாத்திரத்தில் ஊற்றிவைத்தாள். ‘எல்லாம் பறவைகளுக்குத் தான். தினமும் வெச்சிடுவேன். பாவம்... அதுங்க இந்த கான்கிரீட் காட்டுல எங்க போகும்ங்க இரைக்கும் தண்ணிக்கும்... பறவைகள் இல்லைன்னா சுற்றுச்சூழல் இல்ல, நாமும் இல்ல...’ என்றாள் தோழி. அதிலிருந்து நானும் இப்போது எங்கள் வீட்டு மொட்டை மாடியில் தானியங்களும் தண்ணீரும் வைக்க ஆரம்பித்திருக்கிறேன். இயன்றவர்கள் செய்யலாமே?!

- ஜோ.தீபிகா, சேலம்-1

அனுபவங்கள் ஆயிரம்!

பாசமே பதற்றம் தரக்கூடாது!

என் தோழிக்கு 50 வயதாகிறது. அவர் மகன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நாள்தோறும் டூவீலரில் காலை 9 மணிக்கு அலுவலகம் கிளம்பி, மாலை 6 மணிக்கு வீடு திரும்புவார். சில நாள்களில் தாமதமாக வர நேரிடும்போது, ‘என்ன ஆச்சோ ஏது ஆச்சோ தெரியலையே’ என்று அலைபேசியில் விடாமல் அழைத்தபடியே இருப்பார் தோழி. பார்க்கும் நமக்கும் அந்தப் பதற்றம் தொற்றிக்கொள்ளும். ஆனால் ஒருமுறை அவர் மகன், ‘நான் என்ன சின்னப்பிள்ளையா... வீட்டுக்கு வரத் தெரியாதா எனக்கு... சிட்டி டிராஃபிக்ல வரும்போது இத்தனை தடவை கால் பண்ணினா அந்த டென்ஷன்லயே பைக் தடுமாறிடும்போல’ என்று பொறுமையிழந்து சத்தம்போட்டபோதுதான், அவர் தரப்பு நியாயம் புரிந்தது. என்றாலும், ‘ஆபீஸ்ல இருந்து கிளம்பும்போது, ஒருவேளை கிளம்ப லேட் ஆனா ஒரு மெசேஜ் அனுப்பிட்டு கிளம்பினா அம்மாவும் நிம்மதியா இருப்பாங்களே’ என்றேன் அவரிடம். அதேபோல தோழியிடமும், ‘பாசத்தையே பிள்ளைகளுக்கு டார்ச்சர் ஆக்கிடாதே’ என்று புரியவைத்தேன். சரிதானே பிள்ளைகளே, அம்மாக்களே?!

- ராணி சண்முகம், திருவண்ணாமலை

அனுபவங்கள் ஆயிரம்!

பில்லை செக் செய்வது ஏன் முக்கியம்?!

காய்கறிக் கடை ஒன்றில் காய்கறிகள் வாங்கினேன். ‘650 ரூபாய் கொடுங்கம்மா’ என்றார் கடைக்காரர். விலை அதிகமாகத் தெரிந்ததால், பில்லைக் கேட்டு வாங்கி ஒவ்வொரு காய்கறியின் விலையாகச் சரிபார்த்தேன். எல்லாம் சரியாக இருந்தது; ஆனால் கூட்டுத்தொகையில் 550-க்கு பதிலாக 650 என்று போட்டிருந்தார். அவரிடம் சுட்டிக்காட்ட, ‘மன்னிச்சிடுங்கம்மா, லைட்டு வெளிச்சம் சரியா தெரியல’ என்றார் அந்த முதியவர். கடைக்காரர்கள் நம்மை ஏமாற்றுவார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், கவனக்குறைவு தவறுகள் நடக்க எங்கும் வாய்ப்பு உண்டு என்பதால், பில்லை செக் செய்வதில் தயக்கமோ, சோம்பேறித்தனமோ வேண்டாம் தோழிகளே.

- வெற்றிச்செல்வி வடுகநாதன், வேதாரண்யம்

*****

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism