Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

விமானப் பயணமானாலும், ரயில் பயணமானாலும் ஆன்லைனில் புக் செய்யும் டிக்கெட்டை தன் மொபைலிலிருந்து எனக்கும் அனுப்பிவிடுவார் கணவர்.

அனுபவங்கள் ஆயிரம்!

விமானப் பயணமானாலும், ரயில் பயணமானாலும் ஆன்லைனில் புக் செய்யும் டிக்கெட்டை தன் மொபைலிலிருந்து எனக்கும் அனுப்பிவிடுவார் கணவர்.

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!
அனுபவங்கள் ஆயிரம்!

டூருக்கு எந்த டவல்?!

சில வருடங்களுக்கு முன் நண்பர்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தபோது, நாங்கள் தங்கியிருந்த அறையில் குளிக்க ஆயத்தமாகி சூட்கேஸிலிருந்து நான் வெளியே எடுத்த டர்க்கி டவலை (தேங்காய்ப்பூ துண்டு) என் தோழி பார்த்தார். ‘பயணம், சுற்றுலாவின்போது இதுபோன்ற துண்டை எடுத்துச் செல்வது பை/சூட்கேஸில் இடத்தை அடைத்துக்கொள்ளும் என்பதுடன், காயவும் செய்யாது. எனவே மெல்லிய ரக துண்டை எடுத்துச் செல்வதே வசதி' என்று கற்றுக்கொடுத்தாள். நீங்களும் இதைத் தானே கடைப்பிடிக்கிறீர்கள்?

- ஆர்.ஆனந்த லட்சுமி, தஞ்சாவூர்

அனுபவங்கள் ஆயிரம்!

சொல்லித்தந்த தோழி!

பல வருடங்கள் கழித்து என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். எனக்குப் பிடித்த நெய் கந்தரப்பம் செய்து தருவதாகச் சொன்னாள். அவ்வப்போது, வயதான தன் மாமியாரிடம் போய் செய்முறை சந்தேகங்களைக் கேட்டு வந்தாள். எனக்கு விநோதமாக இருந்தது. அவளுக்குத் திருமணமாகிய இந்த 20 வருடங்களில் எனக்குப் பலமுறை நெய் கந்தரப்பம் செய்து கொடுத்திருக்கிறாள். ஆனாலும், அவளுக்கு செய்முறையில் என்ன சந்தேகம் என்று மாமியாரிடம் கேட்கிறாள் என்று அவளிடமே கேட்டுவிட்டேன். ‘நாம் எது செய்தாலும் அது நமக்கு முழுமையாகத் தெரிந்தாலும்கூட, அது பற்றி அவ்வப்போது வீட்டில் இருக்கும் பெரியவர்களிடமும் ஆலோசனை கேட்டால், வயோதிகத்தால் நாம் புறக்கணிக்கப்படவில்லை. இன்னும் நாம் குடும்பத்துக்குத் தேவைப்படுகிறோம் என்ற நிம்மதியும் சந்தோஷமும் அவர்களுக்குக் கிடைக்கும். அதுவே அவர்களுக்கு ஆரோக்கியம் தரும்’ என்றாள் புன்னகையுடன். முதிய உறவுகளைப் பேணும் பாடத்தை அன்று படித்தேன் தோழியிடம்!

- மல்லிகா அன்பழகன், சென்னை-78

முன்யோசனை!

விமானப் பயணமானாலும், ரயில் பயணமானாலும் ஆன்லைனில் புக் செய்யும் டிக்கெட்டை தன் மொபைலிலிருந்து எனக்கும் அனுப்பிவிடுவார் கணவர். ‘உங்களிடம் இருந்தால் போதுமே’ என்று கேட்டபோது, ‘ஒருவேளை என் மொபைலில் தவறுதலாக டெலீட் ஆகிவிட்டாலோ, மொபைல், நெட்வொர்க்கில் பிரச்னை என்றாலோ உன் மொபைலில் ஒரு காப்பி இருப்பது பாதுகாப்பு அல்லவா’ என்றார். டிக்கெட் டென்ஷன்கள் தவிர்க்க, இருவராகப் பயணிப்பவர்கள் இதைப் பின்பற்றலாமே!

- என்.கோமதி, நெல்லை-7

அனுபவங்கள் ஆயிரம்!

அரைக்கும் முன்!

மளிகைக்கடையில் வாங்கி வந்த மிளகை பவுடர் செய்ய மிக்ஸியில் கொட்டி அரைத்தபோது, ஒரே சத்தம். பதறி திறந்து பார்த்தால், அதில் கிடந்த ஏதோ ஒரு பிளாஸ்டிக் பொருள் நொறுங்கித் தூளாகியிருந்தது. கடையில் கவனிக்காமல் கொடுத்திருக்கிறார்கள், நானும் அதைப் பார்க்காமல் மொத்தமாக மிக்ஸியில் கொட்டிவிட்டேன். கடைசியில் கால் கிலோ மிளகும் வீணாகிப்போனது. இனி கடையில் வாங்கிய மளிகைப் பொருள்களை சமைக்கும், அரைக்கும் முன் சோதித்துப் பார்க்க வேண்டும் என்பதை மனதில் இருத்திக்கொண்டேன்.

- மு.ரினோஜ்முபாரக், வத்தலகுண்டு

அனுபவங்கள் ஆயிரம்!

ஆனந்தக் கண்ணீர் அழகு!

இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் மகனின் பள்ளி ஆண்டு விழாவில் முன்னாள் மாணவர்களை வரவழைத்து விழா நடத்தினார்கள். அப்படி வந்திருந்தவர்கள், அந்தப் பள்ளியில் பல வருடங்களாக வேலைபார்க்கும் மூன்று ஆயாம்மாக்களை மேடைக்கு அழைத்து, ‘நாங்க எல்.கே.ஜி சேர்ந்தப்போ டாய்லெட் கூட்டிட்டுப் போறது, சாப்பாடு ஊட்டிவிடுறதுல இருந்து, பெரிய வகுப்புகள் போனதுக்கு அப்புறமும் உடல்நிலை சரியில்லைன்னா அம்மா மாதிரி கவனிச்சுக்கிட்டது வரை எங்களை வளர்த்ததில் இவங்களுக்கும் பங்கிருக்கு’ என்று நன்றி சொன்னார்கள். மேலும், மூன்று பெண்களுக்கும் தலா அரை சவரன் தங்கத் தோடு பரிசளித்து, மேடையிலேயே அதை அணியச் செய்தார்கள். இவற்றையெல்லாம் எதிர்பார்க்காத அந்தப் பெண்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். மாணவர்களின் வெற்றிக்குப் பின் ஆசிரியர்கள் மட்டுமல்ல, பள்ளிப் பணியாளர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்திய ஓர் உணர்வுபூர்வமான நிகழ்வாக அது இருந்தது.

- எஸ்.சித்ரா, சென்னை-64

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism