Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!
அனுபவங்கள் ஆயிரம்!

பெண்களால் எதுவும் முடியும்!

அன்று வழக்கமாக மிக்ஸி பழுது பார்க்கும் கடைக்குச் சென்றபோது, புதிதாக ஓர் இளம்பெண் இருந்தார். தான் அந்தக் கடை உரிமையாளரின் மகள் என்றும், கல்லூரியிலிருந்து திரும்பிய பின் கடையில் வேலைபார்ப்பதாகவும் கூற, சுவாரஸ்யமாகி பேச்சுக்கொடுத்தேன். ‘கொரோனா ஊரடங்கின்போது அப்பாகூட தினமும் கடைக்கு வந்து, இந்த வேலைகளைக் கத்துக்கிட்டேன். ஆறு மாசத்துல பெரும்பாலான வேலைகளைப் பழகிக்கிட்டேன். என் ஃப்ரெண்ட்ஸ் உட்பட பலரும் ஆச்சர்யப்பட்டு பாராட்டுறாங்க. அப்பாவுக்குத் துணையாவும், அவர் இல்லாதப்போ தனியாவும் கடையைப் பார்த்துக்குறேன். எலெக்ட்ரிக் வேலை, மெக்கானிக் வேலை எல்லாம் பொண்ணுங்களும் ஈஸியா கத்துக்கலாம்’ என்றபடியே மிக்ஸியை சரிசெய்து என் கையில் கொடுக்க, ‘சூப்பர் கண்ணம்மா’ என்று தட்டிக்கொடுத்துவிட்டு வந்தேன்.

- எஸ்.சித்ரா, சென்னை-64

******

அனுபவங்கள் ஆயிரம்!

ஆசிரியரான ஸ்டூடன்ட்!

நான் கல்லூரியில் இளங்கலை கணிதம் படித்துக்கொண்டிருந்தபோது, கணிதப் பாடத்தில் மிகவும் வீக்காக இருந்த என் தோழியின் தங்கைக்குக் கணிதம் சொல்லித் தரும்படி அவள் தந்தை என்னைக் கேட்டுக்கொண்டார். ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த அந்தச் சிறுமிக்கு, ஆறு மாதங்கள் மிகவும் அக்கறையுடனும் கண்டிப்புடனும் நான் கணித டியூஷன் எடுத்தேன். அந்தப் பெண் கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டாள். பிறகு, தோழி குடும்பம் வெளியூர் போய்விட்டது, தொடர்பே இல்லாமல் போனது. சென்ற வருடம், ஒரு திருமண நிகழ்ச்சியில் என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டாள் தோழியின் தங்கை. ‘அக்கா, மேத்ஸ்னாலே பயந்த எனக்கு, அதோட அடிப்படை களை நீங்க தெளிவா சொல்லிக்கொடுத்ததுக்கு அப்புறம் தன் அதில் ஆர்வமே வந்தது. இப்போ நான் கணித ஆசிரியரா இருக்கேன். இதுக்கு நீங்கதான் காரணம்’ என்று சொன்னதோடு, அவள் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் என்னைப் பெருமையுடன் அறிமுகப்படுத்தினாள். உள்ளம் குளிர்ந்துபோனது எனக்கு. நான் அக்கறையுடன் செய்த ஒரு செயல், ஒரு பெண்ணின் முன்னேற்றத்துக்குக் காரணமாக அமைந்தது அளவிட முடியாத சந்தோஷத்தைத் தருகிறது. நம்மைச் சுற்றியுள்ள பெண் களின் முன்னேற்றத்தில் நம்மால் இயன்ற ஏதோ ஒருவிதத்தில் பங்களிப் போம் தோழிகளே!

- வி.உஷா, சிதம்பரம்

அனுபவங்கள் ஆயிரம்!

நகையைக் கொடுக்கும் முன்..!

என் உறவினரின் திருமணத்தில், பெண் அழைப்பின் போது மணப்பெண்ணின் அம்மா, நான் அணிந் திருந்த ஐந்து பவுன் டாலர் செயின் நன்றாக இருப்பதாகக் கூறி, அதை வாங்கி மணமகளுக்கு அணிவித்தார். நானும் சந்தோஷமாகக் கொடுத் தேன். திருமணம் முடிந்து நான் கிளம்பியபோது, ‘பெண் கழுத்தில் இருந்து இப்போது செயினைக் கழற்றினால் நன்றாக இருக்காது, மறுவீட்டுக்குச் சென்று வந்த பின் தருகிறேன்’ என்றார். ஆனால், இரண்டு வாரங்கள் ஆகியும் செயினைக் கொடுக்க வில்லை. மீண்டும் கேட்டபோது, ‘அவசரமாகப் பணம் தேவைப்பட்டது, எங்கள் நகையுடன் உங்கள் நகையையும் சேர்த்து அடகு வைத்துவிட்டேன் மன்னித்துவிடுங்கள், சீக்கிரமே மீட்டுக் கொடுக் கிறேன்’ என்றார். அதிர்ந்துபோனேன். நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க, ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் என் நகை எனக்குக் கிடைத்தது. எனவே, விசேஷ வீடுகளில் இப்படி நகையைக் கொடுக்கும் முன் நிதானம் ப்ளீஸ் தோழிகளே!

- உமா பாலா, திருவண்ணாமலை

உணவு வீணாகாமல் இருக்க!

என் சிநேகிதி தன் அப்பாவுக்கு 70-வது வயது ரதகஜ சாந்தி ஹோமம் செய்தபோது, சாப்பாடு வீணாகாத வகையில் உணவு ஏற்பாட்டை கையாண்ட விதம் சிறப்பு. எப்படி என்று கேட்டேன். விசேஷ நாள் நெருங்கிய போது, அழைத்திருந்த விருந்தினர்களை எல்லாம் போனில் தொடர்பு கொண்டு, நிச்சயமாக வருபவர்கள் எத்தனை பேர் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அதற்கு ஏற்ப சாப்பாட்டு எண்ணிக்கையை இறுதி யாக உறுதி செய்திருக்கிறாள். மேலும், முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகத்துக்கு தனியாக, குறிப்பிட்ட எண்ணிக்கையில் சாப்பாட்டை திட்டமிட்டு, மதியம் 1 மணிக்குள் அவர் களுக்கு டெலிவரி செய்தாள். நல்ல திட்டமிடல்!

- ஆர்.ராஜலட்சுமி, பெங்களூரு-32

சாவியை பீரோவின் மேல் வைக்கலாமா?!

உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, பீரோ சாவியைக் கண்ணுக்குத் தெரிவதுபோல் பீரோவுக்கு மேலேயே வைத்திருந்ததைப் பார்த்தேன். அந்த சாவிக்கொத்தில் சுமார் பத்து சாவிகளுக்கும் மேல் இருந்தன. ‘சாவிக் கொத்தை இப்படி கண்ணுக்குத் தெரிவதுபோல் வைக்கலாமா? மறைவான இடத்தில் வையுங்கள்’ என்றபோது உறவினர் சொன்ன பதில், ஆச்சர்யம். ‘பீரோ மேலே உள்ள சாவிக்கொத்தில் உள்ள சாவிகள் எல்லாமே பயன்பாட்டில் இல்லாத பழைய சாவிகள். இதை வைத்து இங்குள்ள எதையும் திறக்க முடியாது. ஒருவேளை யாராவது திருடும் நோக்கத்தில் இந்தச் சாவிக்கொத்தை எடுத்து, பீரோ முதல் வீட்டில் உள்ள ஒவ்வோர் அலமாரியாகத் திறக்க முயன்றால், அந்தக் கால அவகாசத்தில், சிசிடிவி கேமராக்கள் மூலம் அது நம் கவனத்துக்கு வர வாய்ப்புள்ளது. ஆகையால்தான் டம்மி சாவிக் கொத்தை அங்கே வைத்துள்ளேன். நகை, பணம் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாக உள்ளன’ என்றார் சிரித்துக்கொண்டே. அட!

- ஆர்.ஆனந்த லட்சுமி, பாபநாசம்

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism