Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

ஆட்டோ
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோ

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
ஆட்டோ
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோ
அனுபவங்கள் ஆயிரம்!

ஆட்டோ சகோதரர்களே..!

அன்று ஒரு ஆட்டோவில் நான் ஏற முயன்றபோது, தரை மட்டத்திலிருந்து சற்று உயரமாக இருந்த தால் காலைத் தூக்கி ஏற சிரமப்பட்டேன். அதைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர், ‘அம்மா, கொஞ்சம் இருங்க...’ என்று சொல்லி, தன் ஆட்டோவில் வைத்திருந்த அரை அடி உயரமுள்ள ஒரு பலகையைப் போட்டு, ‘இதுல கால் வெச்சு ஏறுங்க’ என்றார். அதன்படி சிரமம் இல்லாமல் ஆட்டோவில் ஏறினேன். பயணிகளின் சிரமத்தைப் புரிந்துகொண்டு செயல்படும் அவரை, மற்ற ஆட்டோ ஓட்டுநர்களும் பின்பற்றலாமே?!

- பிரேமா நாகராஜன், பிச்சாண்டார்கோவில்

அனுபவங்கள் ஆயிரம்!

மாஸ்க் இருக்கட்டும்!

கொரோனா தொற்றால் மாஸ்க் போட்டுப் பழகிய எனக்கு, பல அன்றாட வேலைகளிலும் மாஸ்க் அணிந்துகொள்ளும் பயன்பாடு இப்போது உதவு கிறது. வீட்டைச் சுத்தம் செய்யும் போது, பாத்ரூமில் ஆசிட் பயன்படுத்தி சுத்தம் செய்யும் போதெல்லாம் இப்போது நான் மாஸ்க் அணிந்துகொள்கிறேன். தூசி, ஆசிட் நெடி நாசியை பதம் பார்ப்பதில்லை. மேலும், மாவு மில்லுக்குப் போகும்போது அந்தச் சூழலின் நெடியை தவிர்க்கவும் மாஸ்க் அணிந்து கொள்கிறேன். தும்மலுக்கு குட் பை!

- பிரியதர்ஷினி, மதுரை-19

அனுபவங்கள் ஆயிரம்!

பலே ஐடியா!

மகளின் பூப்புனித நீராட்டு விழா பத்திரிகை கொடுப்பதற்காக தோழி வீட்டுக்குச் சென்றிருந்த போது, சோபாவில் அமர்ந்திருந்த தன் வயோதிக மாமனார், மாமியாரிடம் என்னை அறிமுகப் படுத்தி, என் மகளுக்கு ஆசீர் வாத வார்த்தைகள் சொல்லும் படி சொல்லச் சொல்ல, அவர்கள் மட்டுமல்ல, நானும் நெகிழ்ந்துவிட்டேன். காரணம், அவள் மாமனாரும் மாமியாரும் சுயமாக எழுந்து நடக்க முடியாத வயோதிகத்தை அடைந்தவர்கள். என்றாலும், அவர்களை அறைக்குள்ளேயே முடக்காமல் ஹாலில் அமர வைப்பது, மன மலர்ச்சியுடன் அவர்களுக்குப் பணிவிடைகள் செய்து வருவது, வீட்டுக்கு யாரேனும் வந்தால் அவர்களிடம் அழைத்துச் சென்று, ‘இவர், இதற்காக வந்திருக்கிறார்’ என்று தகவல் சொல்வது என, அந்த வீட்டில் அவர்களுக்கான முக்கியத்துவத்தை உறுதி செய்தபடியே இருக்கிறாள் தோழி. அவளை நான் பாராட்ட, ‘`நமக்கும் மூப்பு வரத்தானே செய்யும், நம்ம பிள்ளைகளும் இதைக் கத்துக் கிடணும்ல’' என்றாள் புன்னகையுடன்.

- ஜி.பரமேஸ்வரி, தூத்துக்குடி

அனுபவங்கள் ஆயிரம்!

மெஷினில் மாவு அரைக்கும்போது...

அரவை மில்லில் இரு பெண்கள் மாவரைக்கும் நபரிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். விசேஷ வீட்டுக்காக முறுக்கு மாவு, மிளகாய்த்தூள், சாம்பார் பொடி அரைத்துச் சென்றதில், மிளகாய்த்தூளில் மசாலா சாமான்கள் வாசமும், உப்புமா ரவை உடைத்ததில் கேழ்வரகு மாவு கலந்திருந்ததாகவும் அவர்கள் குறைசொல்ல, அந்த நபர் மன்னிப்புக் கேட்டதுடன், கூடவே ஒரு ஆலோசனையும் சொன்னார். ‘`மெஷினில் அரைக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருள் எடுத்து வருவார்கள்தான். எனவே, நீங்கள் மாவு அரைக்க வரும்போது வீட்டில் இருந்து ரேஷன் அரிசி அரை கிலோ எடுத்து வாருங்கள். அதை முதலில் அரைத்துவிட்டு, பின் நீங்கள் அரைக்க வேண்டிய பொருளை அரைத்துக் கொள் ளுங்கள். முன்னர் மெஷினில் அரைத்த கேழ்வரகு, சத்துமாவில் உள்ள ஏலக்காய் வாசனை, சாம்பார் பொடியிலுள்ள மசாலா வாசனை எல்லாம் இந்த அரிசியை அரைத்து எடுக்கும் போது நீங்கிவிடும். மேலும், அரைத்த மாவை நீங்கள் மாடு களுக்கு வைக்கலாம்’' என்றார். நல்ல டிப் தானே?!

- எம்.வசந்தா, சென்னை-64

*****

வீடு எப்போதும் பொலிவிழக்காமல் இருக்க!

தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவள் வீடு எப்போதும் பளிச்சென்று இருப்பதைப் பற்றி அவளிடம் கேட்டேன். ‘`ஒவ்வொரு மாதமும் வீட்டு பட்ஜெட்டில் ரூ.2,000 வீட்டுப் பராமரிப்புக்கு என்று எடுத்து வைத்து சேமித்து வருவோம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்தப் பணத்தில் பெயின்ட் செய்வது, வீட்டில் உள்ள சின்னச் சின்ன மராமத்து வேலை களைப் பார்ப்பது என்று செய்வோம். இதனால் பெரிய செலவை திடீரென எதிர் கொள்ள வேண்டி இருக்காது என்பதுடன், வீடும் பழசு ஆகாமல் எப்போதும் பொலி வுடன் இருக்கும்’’ என்றாள். நானும் அதைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டேன்!

- ரஞ்சிதமணி ஜெயசிங், கோயம்புத்தூர்-36

அனுபவங்கள் ஆயிரம்!

பொறுப்பு வேண்டும் நமக்கு!

சமீபத்தில் எங்கள் வீட்டின் அருகே, தூய்மைத் தொழிலாளி ஒருவரை கையில் ரத்தம் சொட்ட சொட்ட ஆஸ்பத்திரிக்கு அழைத் துச் சென்றுகொண்டிருந்தனர். விசாரித்ததில், குப்பைத் தொட்டி யில் இருந்து குப்பை அள்ளும் போது, அதில் இருந்த உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்று அவரின் கையை ஆழமாகப் பதம் பார்த்துவிட்டதைச் சொன்னார்கள். மக்களே... உடைந்த கண்ணாடித் துண்டுகள், டியூப் லைட்டுகள், கூரான தகரத் தகடுகள் போன்ற வற்றை குப்பைத் தொட்டியில் போடும்போது ஒரு துணியிலோ, நான்கைந்து தடிமனான காகிதங் களிலோ சுற்றித் தூக்கிப் போட லாமே... அவற்றை நம் வீட்டுக்கு ஆபத்தின்றி வெளியேற்றிவிட்டால் போதும் என நினைக்கலாமா? தூய்மைத் தொழிலாளர்களும் மனிதர்கள்தானே?!

- ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்

*****

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism