Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!
அனுபவங்கள் ஆயிரம்!

கையில் கொடுக்காதீர்கள்!

சமீபத்தில் என் தோழிக்குக் குழந்தை பிறந்தது. எல்லோ ரும் ஆசையாகக் குழந்தையை தூக்கிக் கொஞ்சி கையில் பணமும் பரிசுப் பொருள்களும் கொடுத்தார்கள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த என் தோழி, ‘சொல் றேன்னு தப்பா நினைக்காதீங்க. இந்தப் பணம் பல பேர் கை மாறி வந்திருக்கும். பரிசுப் பொருள் பிளாஸ்டிக் பேப்பர்ல சுற்றியிருக்கும். நீங்க கொடுத்ததும் அதைக் குழந்தை வாயில்தான் வைக்கும்; அலர்ஜியாக வாய்ப் புண்டு’ என்று சொல்ல, அதைப் புரிந்துகொண்டு பணம், பரிசுகளைத் தோழியிடமே கொடுத்துவிட்டு வந்தோம்.

- ஜி.விஜயலட்சுமி, கும்பகோணம்

அனுபவங்கள் ஆயிரம்!

என் பையே எனக்கு உதவி!

நான் எப்போது வெளியில் சென்றாலும் கையில் துணிப் பையை எடுத்துச் செல்வேன். ஏதாவது வாங்க நேர்ந்தால், கடையில் தரும் பிளாஸ்டிக் பையைத் தவிர்த்துவிட்டு துணிப்பையில் வாங்கிக்கொள்வேன். என்னைக் கேலி செய்த உறவினர்களும், இப்போது என்னைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள். துணிப்பை கேலிக்குரியது அல்ல என்று உணர்வோம்.

- ஜி.இந்திரா, திருச்சி-6

அனுபவங்கள் ஆயிரம்!

பீரோவுக்குள் சாவி!

எங்கள் வீட்டு பீரோ சாவி தொலைந்துவிட்டது. எவ்வளவு தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பீரோ சமீபத்தில்தான் வாங்கினோம் என்பதால், பீரோ வாங்கிய கடை உரிமையாளரிடம் சொல்ல, ‘இன்னொரு செட் சாவி கொடுத் திருப்போமே?’ என்றார். ‘அதுவும் பீரோவுக்குள்ளதான் இருக்கு’ என்றதும், சிரித்தவர், ‘இப்படி செய்துவிட்டு

வந்து நிற்கும் மூன்றாவது கஸ்டமர் நீங்கள். ஒரு செட் தொலைந்துவிட்டால் மற்றொரு செட் பயன்படும் என்று தானே அதைக் கொடுக்கிறோம்? அதை வேறு இடத்தில் வைக்க வேண்டாமா?’ என்று சொல்லி, புதிய சாவிகள் இரண்டு போட்டுக்கொடுத்தார். சாவி பாடம் கற்றோம்.

- டி.நிர்மலா தேவி, மதுரை-2

அனுபவங்கள் ஆயிரம்!

உங்கள் கைப்பையில் என்ன இருக்கிறது?

மேட்டுப்பாளையம் பேருந்தில் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந் தேன். செக்கிங் இன்ஸ்பெக்டர் ஏறினார். என் ஹேண்ட் பேக்கில் டிக்கெட்டை தேடோ தேடென்று தேடினேன். தேவையற்ற காகிதங்கள், சிறிய பொருள்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வர, டிக்கெட் மட்டும் கிடைக்கவில்லை. நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அபராதம் வாங்கினார். பணம் போனது ஒருபக்கம் என்றால், மொத்த பேருந்தும் என்னைப் பார்த்த அவமானம் ஒருபக்கம். அலுவலகம் சென்று சேர்ந்த பின் மீண்டும் ஒருமுறை தேடியபோது டிக்கெட் கிடைத்தது. முதல் வேலையாக என் கைப்பையில் இருந்த தேவையற்ற பேப்பர்களைத் தூக்கி எறிந்தேன். ஹேண்ட் பேக்கை அவ்வப்போது சுத்தம் செய்வோம் தோழிகளே!

- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

எங்கள் தொழில் எங்களுக்கு தெய்வம்!

நீண்ட நாள்களுக்குப் பிறகு, என் கல்லூரித் தோழியை சந்தித்தபோது, அவள் தன் குடும்பத்தைப் பற்றியும், தற்போது நல்ல சம்பளத்தோடு அரசுப் பணியில் இருப்பதையும் சொல்லி, என் குடும்பத்தைப் பற்றிக் கேட்டாள். நானும் என் கணவரும் ஃபினாயில் தயார் செய்து விற்பனை செய்து வருவதைக் கூறினேன். ‘என்னது, ஃபினாயில் செஞ்சு விக்கிறியா?’ என்று கொஞ்சம் கேலி தோரணையோடு கேட்டாள். ‘ஆம், நானும் என் கணவரும் இரண்டு பணியாளர்களை வைத்துக்கொண்டு இத்தொழிலை செய்து வருகிறோம். எங்களுக்கும் நிறைவான வருமானம் கிடைக்கிறது, பணியாளருக்கும் நல்ல சம்பளம் தருகிறோம். மேலும், தீபாவளிக்கு அவர்களின் குடும்பத்துக்கு புத்தாடைகள் வாங்கித் தந்து, அவ்வப் போது எங்களால் முடிந்த பண உதவியும் செய்கிறோம். என்ன வேலை, எந்தத் தொழிலாக இருந்தால் என்ன... உழைப்பு எப்போதும் மதிப்புக்குரியது’ என்று நான் படபடவெனப் பேசியதில், அவளது கேலி என்னை காயப்படுத்தியதைப் புரிந்து கொண்டிருப்பாள் என்று நினைக்கிறேன். மற்றவர்களின் வேலை, தொழிலைப் பற்றிக் கேட்கும்போது அதற்கான மரியாதையுடன் கேட்போம்!

- மு.ரினோஜ் முபாரக், திருச்சி

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism