Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!
அனுபவங்கள் ஆயிரம்!

அவரவருக்குத் தேவையானதைக் கொடுப்போம்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரை பார்க்கச் சென்றிருந்தேன். அறுவைசிகிச்சை செய்து எதுவும் சாப்பிட முடியாத நிலையில் இருந்தவரை நலம் விசாரிக்க வந்தவர்கள் கொண்டுவந்த பழம், பிரெட் போன்றவை பயனின்றி ஒரு புறம் குவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், அவர் தோழி ஒருவர் மட்டும் ஒரு கவரில் பணம் வைத்துக் கொடுத்துச் சென்றார். விழா மற்றும் சுப காரியங்களில் அன்பளிப்பு செய்யும்போது அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ளட்டும் எனப் பணமாகப் பரிசளிப்பதுபோல, மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களைப் பார்க்கச் செல்லும்போதும் பணமாகக் கொடுத்தால், மருத்துவர் பரிந்துரைப்படி அவர் உணவுப் பொருள்கள் வாங்கிக்கொள்ளலாம். மேலும், மருத்துவமனை செலவை சமாளிக்கவும் உதவி யாக இருக்குமே? இன்னொரு பக்கம், பணத் தேவை இல்லாத செல்வந்தர்களுக்கு கைப்பட இரண்டு வரிகள் எழுதிய `கெட் வெல் சூன்’ வாழ்த்து அட்டை, பூங்கொத்து எனக் கொடுக்கலாம்.

குறிப்பு: அந்த மலர்களால் ஏதேனும் தொற்று ஏற்படாத வகையில் அவர் உடல்நிலை உள்ளதா என்று உறுதி செய்துகொள்ளவும்.

- ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

அனுபவங்கள் ஆயிரம்!

பொன்னான நேரம் வீணாகலாமா?!

பொதுவாக, தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லும் போது டோக்கன் வாங்கிக்கொண்டு நெடுநேரம் காத்திருக்க வேண்டும். அப்போது பொழுது போகாமல் தவிப்போம். நான் திருச்சியில் ஒரு மருத்துவமனைக்கு சென்றபோது, நோயாளிகள் காத்திருக்கும் இடத்தில் வித்தியாசமாக ஒரு சிறிய புக் ஸ்டாலில், இயற்கை மருத்துவம் சார்ந்த நிறைய புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்தனர். மேலும் சிறுதானியங்கள் பற்றியும், கருங்குறுவை அரிசி, மூங்கில் அரிசி, சீரக சம்பா அரிசி, கவுனி (கறுப்பு) அரிசி போன்ற அரிசிகளின் பயன்களையும் எழுதி எல்லா பக்கமும் ஒட்டி இருந்தனர். என் நேரம் பயனுள்ளதாகக் கழிந்தது. வெயிட்டிங் ஏரியாவில் டிவியை வைத்திருக்கும் நிறுவனங்கள் இந்த ஐடியாவை பரிசீலிக்கலாமே?!

- ஆர்.அனுராதா ரவீந்திரன், ஸ்ரீரங்கம்

அனுபவங்கள் ஆயிரம்!

முதலில் செய்ய வேண்டியது இதைத்தான்!

தங்கை வீட்டில் அன்று மதியம் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தபோது, உறவினர்கள் தங்கள் மகள் திருமண பத்திரிகையைக் கொடுக்க வந்தனர். அப்போது ஓடிக்கொண்டிருந்த டிவி சீரியலில் ஒரு பெண்மணி, `இந்தக் கல்யாணம் நடக்காது, எப்படி நடக்குதுனு பார்க்குறேன்’ என்று கத்திக்கொண்டிருந்தார். என் தங்கை மகள் ஓடிச் சென்று டிவியை ஆஃப் செய்து விட்டாலும், வந்தவர்களுக்கும் எங்களுக்கும் ஒரு மாதிரி யாகிவிட்டது. முக்கியமான விஷயங்களை பேசும்போது முதலில் டிவி-யை ஆஃப் செய்வோம் தோழிகளே!

- பி.தில்லைக்கரசி, ஈரோடு

அனுபவங்கள் ஆயிரம்!

ஆன்மிகத்துடன் சமூக அக்கறை இணையும்போது..!

எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயிலில், நாள்தோறும் விடியற்காலையில் ஒலிப் பெருக்கியில் பக்திப் பாடல்கள் ஒலிக்கும். அவற்றைக் கேட்டபடியே வீட்டு வேலைகளைச் செய்வேன். இந்த நிலையில், ஒரு வாரமாகப் பாடல்கள் கேட்கவில்லை என்பதால் பூசாரியிடம் விசாரித்தேன். மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறுவதால், பாடல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பது கோயில் நிர்வாகத்தின் முடிவு என்றார். ஆன்மிகத்துடன் சமூக அக்கறையும் இணைந்த இந்த முடிவை மற்ற கோயில்களிலும் பின்பற்றலாமே!

- பி.வீரமணி இளங்கோ, சேலம்-4

***

தமிழ்... தங்கமான முயற்சி!

தோழி தன் ஒன்பது வயது மகளிடம் மளிகைப் பொருள்களின் லிஸ்ட்டை சொல்லச் சொல்ல, அவள் எழுதிக் கொண்டிருந்தாள். `வரவு, செலவை இப்போதே தெரிந்துகொள்ள வைக்கும் ஏற்பாடா?’ என்றேன் தோழியிடம். `இவளுக்கு தமிழில் சரியாக எழுதப் படிக்கத் தெரியவில்லை. வகுப்பில் படிப்பது மட்டும் போதவில்லை. எனவே, இதுபோல் லிஸ்ட் எழுதச் சொல்வது, செய்தித்தாளை வாய்விட்டு படிக்கச் சொல்வது, சிறுவர்களுக்கான கதை புத்தகங்களை வாசிக்கச் செய்வது, டிவியில் வரும் வாசகங்களைப் படிக்கச் சொல்வது எனக் கூடுதல் பயிற்சி அளிக்கிறேன். இப்போது தவறுகள் குறைந்துவருகின்றன’ என்றாள். தாய்மொழியைப் பழக்க தங்கமான முயற்சி!

- அபூர்வம், திருவள்ளூர்

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com