Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!
அனுபவங்கள் ஆயிரம்!

புண்ணியத்துடன் பலனும்!

ஆதரவற்ற பெண்கள் வசிக்கும் இல்லத்துக்கு என் தோழியுடன் சென்றேன். அங்கிருந்த 30 பேரில் பெரும் பாலானவர்கள் மூத்த குடிமக்கள். அவர்களுக்கு பழங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் ஒருவருக்கு தலா இரண்டு உள்பாவாடைகள், குளிக்கும், துணி துவைக்கும் சோப்புகள், தலைவலி தைல பாட்டில்கள் எனக் கொடுத்தவுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர். எங்களுக்கு இந்த ஐடியாவை, அந்த இல்லத்தின் நிர்வாகி தான் கொடுத்தார். `பொதுவாக முதியோர், ஆதரவற்றோர் இல்லம் என்றால், ஒருநாள் விருந்து சாப்பாடு பெரிய ஹோட்டல்களில் இருந்து வரவழைத்துக் கொடுப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், இவையும் அவர்களுக்குத் தேவை என்பதால் கொடுக்கச் சொன்னேன்’ என்று எங்களிடம் விளக்கினார். சிந்திப்போம்.

- எஸ்.வெண்மதி, சென்னை-4

****

ஐடியா அசத்தல்!

சமீபத்தில் என் பள்ளித் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, கவலையுடன் காணப்பட்டாள். வீட்டின் வருமானத்துக்கு பங்களிக்க அக்கம் பக்கத்து வீடுகளுக்கு மாவு அரைத்துக் கொடுத்துக்கொண்டிருந்த அவள், வியாபாரம் மிகவும் படுத்துவிட்டதாகக் கூறினாள். `மாவுடன் மிளகாய்ப்பொடி, கறிவேப்பிலைப்பொடி, தேங்காய்ப்பொடி என இலவச சாம்பிள் கொடுத்து, சைடில் அந்த பிசினஸையும் நடத்து’ என்று ஆலோசனை கூறினேன். வியாபாரம் பெருகிவிட்டதற்கும், கூடுதலாக ஒரு தொழில் கிடைத்ததற்கும் பின்னர் நன்றி சொன்னாள். முயற்சி இருப்பின் முடியாதது உண்டோ?!

- லக்ஷ்மி ஸ்ரீநிவாசன், சென்னை-24

அனுபவங்கள் ஆயிரம்!

நகையைக் கொடுக்கும் நல்லவர்களே!

கல்லூரி பேராசிரியரான என் தோழியிடம், அவருடன் பணிபுரியும் இன்னொரு பேராசிரியர், மகளின் மருத்துவச் செலவுக்காக அவசரமாய் பணம் கேட்டிருக்கிறார். என் தோழியிடம் பணம் இல்லை என்று கூற, ‘நகை ஏதாச்சும் கொடு, பணம் வந்ததும் மீட்டுக் கொடுத்துடுறேன்’ என்று தோழி கழுத்தில் போட்டிருந்த சின்ன செயினைக் கேட்டுள்ளார். இதோ ஒரு வருடம் ஓடிவிட்டது... நகையை அவர் மீட்டுக்கொடுத்தபாடில்லை. ‘எங்கு, எவ்வளவு பணத்துக்கு அடகு வெச்சிருக்கீங்க?’ என்று கேட்டாலும் பதில் சொல்ல மறுக்கிறார். என்ன செய்வதென தெரியாமல் விழிக்கிறார் தோழி. அவசரத்துக்கு உதவ வேண்டும்தான். ஆனால், அது நமக்கு சிக்கலில் முடிந்து விடக் கூடாது என்பதையும் சிந்திப்போம்.

- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை

அனுபவங்கள் ஆயிரம்!

கடைக்காரரிடம் பணம் கொடுக்கும்போது!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழியைப் பார்க்கச் சென்ற நான், அந்த அவசரத்தில், மருத்துவ மனையின் எதிரில் இருந்த மளிகைக் கடை ஒன்றில், `ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் கொடுங்க’ என்று 300 ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்தேன். அவரும் வாங்கிக் கொண்டார். கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் பிஸியாக இருந்தார். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை அவரிடம், `ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் கொடுங்க’ என்று கேட்கவும், கொடுத்துவிட்டு, 250 ரூபாய் கேட்டார். `நான் ஏற்கெனவே 300 ரூபாய் கொடுத்துட்டேன், நீங்கதான் எனக்கு மீதம் 50 ரூபாய் கொடுக்கணும்’ என்று நான் சொல்ல, `நான் உங்ககிட்ட பணமே வாங்கல’ என்று மீண்டும் மீண்டும் அவர் சொல்ல, அனைவரும் வேடிக்கை பார்க்க, எனக்கு சங்கடமாகிவிட்டது. வேறு வழியில்லாமல் மீண்டும் 250 ரூபாய் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன். எந்தக் கடைக்குச் சென்றாலும் பொருளை கையில் வாங்கிய பின்னரே பணத்தைக் கொடுங்கள் தோழிகளே!

- ஜி.வளர்மதி, கோயம்புத்தூர்-46

அனுபவங்கள் ஆயிரம்!

சுகாதாரம் முக்கியம்!

எங்கள் ஊரில், தள்ளுவண்டியில் வைத்து திண்பண்டங்கள் விற்கும் ஒருவரிடம் குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர் களும் ஆர்வமாக வாங்குவார்கள். ஆனால் அவரோ, பிளாஸ்டிக் பையை வாயால் ஊதி, அதில் திண்பண்டங் களை போட்டுத் தருவார். இது சுகாதார அடிப்படையில் தவறானது என்பதுடன், ஒருவேளை அவருக்கு ஏதேனும் நோய் இருந்தால் ஆபத்தானதும்கூட. எனவே, அதை அவரிடம் எடுத்துச்சொல்லி, பாதுகாப்புடன் கையாள வலியுறுத்தினேன். டெலிவரியை சரியாகக் கையாளாதவர் களிடம் பொருள்கள் எதுவும், குறிப்பாக உணவுப் பொருள்களை வாங்குவதைத் தவிர்ப்போம்.

- அமுதா அசோக்ராஜா, திருச்சி-15

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com