Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

`கேஸ் சிலிண்டரை ஆஃப் செய்தீர்களா? ஃபேன், லைட், ஏசி, டிவி ஆஃப் செய்தீர்களா? குழாயை மூடிவிட்டீர்களா?’

அனுபவங்கள் ஆயிரம்!

`கேஸ் சிலிண்டரை ஆஃப் செய்தீர்களா? ஃபேன், லைட், ஏசி, டிவி ஆஃப் செய்தீர்களா? குழாயை மூடிவிட்டீர்களா?’

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

படுக்கை, ஓய்வு, புத்தகம், புத்துணர்வு!

என் கணவரின் நண்பர் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கச் சென்றபோது பழங்களுடன் அவர் விரும்பிப் படிக்கும் பத்திரிகைகள் மற்றும் நூல்களை வாங்கிச் சென்றோம். அவர் மிகவும் மகிழ்ச்சியாக வாங்கிப் படித்ததோடு பாராட்டவும் செய்தார். மருத்துவமனை அட்மிஷனின் போது பெரும்பாலான நேரம் தனிமையில் இருக்க நேர் பவர்களுக்கு, புத்தகம் நல்ல தோழமையாக இருக்கும்; பொழுது போவதுடன் மனதையும் லேசாக்கும். இனி புத்தகத்துடன் போவோமா மருத்துவமனைக்கு?!

- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

அனுபவங்கள் ஆயிரம்!

இப்படியும் செய்வார்களா?

என் தோழியின் குடும்பம் பல வருடங்கள் வெளி மாநிலங்களில் வசித்துவிட்டு, பணி ஓய்வு பெற்று சொந்த ஊரில், சொந்த வீட்டுக்குக் குடி வந்தனர். அப்போது, அடிக்கடி செப்டிக் டேங்க் நிரம்பியதால் கழிவுநீர் ஊர்தியை அழைத்து சுத்தம் செய்தனர். அதைக் கட்டிய பிளம்பரை பலமுறை அழைத்தும் வராததால், வேறொரு பிளம்பரை அழைத்து ஒவ்வொரு சேம்பரையும் செக் செய்தபோதுதான் தெரிந்தது... காரணம். பக்கத்து வீட்டுக்காரர்களின் கழிவுநீரை, இவர்கள் வீட்டு செப்டிக் டேங்க்குக்குள் விழுமாறு செய்திருந்தனர். தோழி குடும்பம் வெளி மாநிலங் களில் இருந்தபோது, கான்ட்ராக்டர்கள் மூலம் கட்டடப் பராமரிப்பு வேலைகளைச் செய்ததால் இந்த மோசடி நடந்துள்ளது. பாடம் படித்துக்கொள்வோம்!

- இந்திராணி தங்கவேல், சென்னை-126

சீட் பிடிக்கும் அவசரம்...

அன்றைய பயணத்தில் பேருந்து வந்ததும், பலரும் அவரவர் கையில் இருந்த பொருள்களை ஜன்னல் வழியே சீட்டில் போட்டு இடம்பிடிக்க, அந்தக் கூட்ட மனப்பான்மை தந்த ஏதோ ஓர் உந்துதலில் நானும் என் ஹேண்ட் பேக்கை வைத்து சீட் போட்டேன். பின்னர் பேருந்தில் ஏறிய எனக்கு அதிர்ச்சி. என் ஹேண்ட்பேக்கை காணவில்லை. நான் பின் பக்கமாக ஏறியபோது, என்னைக் கவனித்திருந்த யாரோ அதை எடுத்துக்கொண்டு முன்பக்கமாக இறங்கிவிட்டார்கள். நல்லவேளையாக ஹேண்ட் பேக்கில் அதிக பணம், முக்கியப் பொருள்கள் எதுவும் இல்லை என்பதாலும் தப்பித்தேன். பழைய தவறுதான், இருந்தாலும் இன்னமும் செய்துகொண்டுதானே இருக்கிறோம்? திருத்திக் கொள்வோம்!

- வசந்தி மதிவாணன், அரூர்

அனுபவங்கள் ஆயிரம்!

லிஃப்டில் ஒரு செக் லிஸ்ட்!

தோழியின் வீடு அப்பார்ட்மென்டின் நான்காவது மாடியில் என்பதால் லிஃப்டில் சென்றோம். உள்ளே பெரிய எழுத்துகளில், `கேஸ் சிலிண்டரை ஆஃப் செய்தீர்களா? ஃபேன், லைட், ஏசி, டிவி ஆஃப் செய்தீர்களா? குழாயை மூடிவிட்டீர்களா?’ எனப் பல கேள்விகள் எழுதி ஒட்டப்பட்டிருந்தன. `காலையில் அவசரமாக வேலைக்குக் கிளம்புபவர்கள் வீட்டில் இவற்றை யெல்லாம் மறக்க வாய்ப்புள்ளது. எனவே, நினைவூட்ட எழுதியுள்ளோம்’ என்றார் அப்பார்ட் மென்ட் செகரட்டரி. நன்றி சொல்ல வேண்டிய ஐடியா!

- எஸ்.சித்ரா, சென்னை-64

அனுபவங்கள் ஆயிரம்!

சங்கடம் தீர்க்கலாமே இப்படி!

உள்ளூரில் உள்ள ஒரு நடுத்தர ஹோட்டலில் நானும் என் மகளும் மதியம் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நல்ல கூட்டம். நாங்கள் சாப்பிட்டு முடிக்கவில்லை. அதற்குள் எங்களது நாற்காலிக்குப் பின்னால் ஒரு சில பெண்கள் இடத்தைப் பிடிக்க நின்றனர். அதைப் பார்த்ததும் எங்களுக்கு ஒரு மாதிரி ஆகி, அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்தோம். இது இப்போது பல ஹோட்டல்களிலும் நடைபெறுகிற சங்கடம்தான். இதைத் தவிர்க்க, இன்று பல ஊர்களில் ஹோட்டல் நிர்வாகத்தினர், வாடிக்கையாளர்களின் பெயர்களைக் குறித்துக்கொண்டு வெயிட்டிங் ஹாலில் காத்திருக்கச் சொல்லி, டேபிள்கள் காலியானதும் வரிசைப்படி அமர வைக்கிறார்கள். அதை மற்ற ஹோட்டல் நிர்வாகத்தினரும் பின் பற்றலாமே..!

- எஸ்.வாணி, திருச்சி-9

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com