Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!
அனுபவங்கள் ஆயிரம்!

கிழித்துப் போடாதீர்கள்..!

தோழி தன் வீட்டிலிருந்த தினசரி காலண்டரில் தேதி தாள்களைக் கிழிப்பதற்கு பதிலாக, கேக்கின் மேலாக ஒரு ரப்பர் பேண்டு மாட்டி அதில் முந்தைய நாள் தாள்களை மடித்தபடி வைத்திருந்தாள். என்னவென்று கேட்டபோது, “இப்படி சேர்த்துவைத்து, ஆண்டு முடிந்ததும் மொத்தமாகக் கோயிலுக்குக் கொடுத்துவிடுவேன். அங்கு வருபவர்கள், தங்களிடம் உள்ள மீதி திருநீறு, குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல இதை பயன்படுத்துவர். மேலும் கையில் உள்ளதை கண்ட இடத்தில் அவர்கள் கொட்டுவதையும் தவிர்க்க வைக்கலாம். அத்துடன் திடீரென பழைய தேதியின் நாள், நட்சத்திரத்தில் எனக்கு ஏதேனும் பார்க்க வேண்டியிருந்தாலும் இது பயனுள்ளதாக இருக்கும்’’ என்றாள். நல்ல யோசனையாக இருக்கவே... இப்போது நானும் பின்பற்றத் தொடங்கிவிட்டேன்.

- எஸ்.சித்ரா, சென்னை-64

அனுபவங்கள் ஆயிரம்!

வாழும்போதே கொண்டாடுவோம்!

80 வயதான சித்திக்கு பிறந்தநாள் கொண்டாட சித்தியின் பெண் அழைத்திருந்தார். 80 வயதில் பிறந்தநாள் கொண்டாட்டமா என்று ஆச்சர்யத்துடன் சென்றேன். சித்தியின் அன்புக்கு பாத்திரமான உறவினர்கள், நண்பர்கள், உடன் பணி செய்தவர்கள் எனப் பல தரப்பினரும் இருந்தனர். தன் மனதுக்கு இனியவர்களை எல்லாம் சேர்த்துப் பார்த்ததில் சித்திக்கு பரம திருப்தி. அனைவருடனும் மிகவும் ஆர்வமாய் பேசிக் கொண்டிருந்தார். மேலும் அவர்களை எல்லாம், சித்தியுடனான தங்களின் இனிய தருணங்களை பகிர்ந்து கொள்ளச் சொல்லி சித்தியின் மகள் கேட்க, அனைவரும் சித்தியைக் கொண்டாடி, அன்பால் நிறைத்துவிட்டார்கள். பொதுவாக இங்கு, ஒருவரின் மறைவுக்குப் பின்தான், `அவர் எனக்கு அப்படி, இப்படி’ என்றெல்லாம் சொல்வது வழக்கம். ஆனால், ஒருவரின் வயோதிகத்தில், இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அவரது நல்லியல்புகளை கூறவைத்து, அவரை மகிழ்வுக்குள்ளாக்கிய விதம் மனதை மிகவும் கவர்ந்தது.

- ஜனனிராம், சென்னை-78

அனுபவங்கள் ஆயிரம்!

உதவும் செல்போன் போட்டோஸ்!

நரம்புத் தளர்ச்சியால் அவதிப்பட்ட தோழியுடன் மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, டாக்டர் 15 நாள்களுக்கு மாத்திரை எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை தோழி செல்போனில் போட்டோ எடுத்தாள். ``இதையெல்லாம் ஏன் போட்டோ எடுக்கிற?’' என்றேன். ``ஒருவேளை மருந்துச்சீட்டு தொலைந்துவிட்டால் தடுமாற வேண்டாம் இல்லையா? இது மட்டுமல்ல, நமக்கு வரும் திருமண அழைப்பிதழ்கள், முக்கியமான ரசீதுகள் எல்லாவற்றையும் அது தேவைப்படும் காலம்வரை போட்டோ எடுத்துவைத்துக்கொள்வதை பழக்கமாக்கியுள்ளேன்'’ என்றாள். ஐடியாவுக்கு நன்றி என்றேன்!

- வசந்தி மதிவாணன், அரூர்

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com