Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!
அனுபவங்கள் ஆயிரம்!

அதிர்ச்சி தந்த சோகம்!

தங்கள் அப்பார்ட்மென்ட் கிரகப்பிரவேசத்துக்கு தன் சொந்தங்களை அழைத்திருந்தார் அந்தப் பெண்மணி. அவர்கள் முதல் நாள் இரவே வந்துவிட்டனர். அடுத்த நாள் காலை 4 மணிக்கு புதுமனை புகுவிழா. அன்று இரவு, விசேஷத்துக்கு வந்திருந்த வயதான பாட்டி ஒருவர் பாத்ரூம் என நினைத்து லிஃப்ட்டுக்கு ஒதுக்கியிருந்த இடத்தில் கால் வைத்து இடறி விழுந்து உயிரிழந்துவிட்டது பெரும் துயரம். கட்டி முடிக்கப்படாத வீட்டில் புதுமனை புகுவிழா நடத்துபவர்கள் இதுபோன்ற ஆபத்துகளை கருத்தில்கொண்டு, பாதுகாப்பை உறுதி செய்யவும்.

- அன்புக்கரசி பாலசுப்ரமணியன், சென்னை-73

அனுபவங்கள் ஆயிரம்!

தோழியால் கிடைத்த சந்தோஷம்!

என் வீட்டுக்கு வந்திருந்த தோழியிடம், பீரோவை திறந்து, `இந்தப் புடவைகள்ல பல நான் கட்டி வருஷம் ஆகுது. சில இப்போ டிரெண்ட் இல்ல, சில சொந்தக்காரங்க எடுத்துக் கொடுத்து டிசைன், கலர் பிடிக்காம போனது, சில நீளம் கம்மியா இருக்கு...’ என்று அலுத்துக்கொண்டேன். ‘உனக்கு பயன்படாததை வைத்து பீரோவை நிறைப்பதற்கு, இந்தப் புடவைகள் தேவைப்படும் எளிய வீட்டுப் பெண்களுக்கு அதைக் கொடுக்கலாம்தானே?’ என்றாள். அடுத்த வாரமே அதைச் செய்தேன். என் புடவைகளைப் பெற்றுக்கொண்ட பெண்களின் சந்தோஷத்தைப் பார்த்தபோது, இத்தனை நாள் ஏன் இதைச் செய்யாமல் விட்டேன் என்று தோன்றியது. உங்கள் பீரோவையும் பயன்படுத்தாத புடவைகளால் நிறைத்து வைத்திருக்கிறீர்களா?

- வ.வெற்றிச்செல்வி, வேதாரண்யம்

அவசர முடிவு வேண்டாமே!

இரண்டு மாதங்களுக்கு முன் என் தோழி, தன் மகனை பள்ளிக்கு அனுப்ப பள்ளி வேனுக்கு ஆண்டுக் கட்டணமாக 10,000 ரூபாய் கட்டினாள். பிறகுதான் தெரிந்தது, பக்கத்து தெருவில் வசிக்கும் ஒரு பெண் தன் மகனை அதே பள்ளிக்கு ஆட்டோவில் ஆண்டுக்கு 6,000 கட்டி அனுப்புவது. எனவே, இதுபோன்ற ஆண்டுக் கட்டண முடிவெடுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் விசாரித்து, கட்டணத்தை ஒப்பிட்டு முடிவெடுக்க வேண்டும். அவசரம் வேண்டாம்.

- ஜெயலட்சுமி வசந்தராசன், கிருஷ்ணகிரி

அனுபவங்கள் ஆயிரம்!

ஆல் இஸ் வெல்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் சீரியஸாக இருந்தார். அவரைப் பார்க்க வருபவர்கள், பிழைப்பது சிரமம், அப்படி பிழைத்தால் அது மறுஜென்மம் என்றெல்லாம் எதிர்மறையாகப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்தார், அருகில் இருந்த ஒரு பேஷன்ட்டின் அட்டண்டர். ‘நேர்மறை எண்ணங்களுக்கு ஒரு வலிமை இருக்கிறது. அவர் பிழைத்துவிடுவார் என்பதையே ஒற்றை நம்பிக்கையாக வைத்து, அதை மட்டுமே பேசுங்கள். ஒருவேளை அவர் பிழைக்காவிட்டாலும், அதுவரை அவரைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் சற்று நிம்மதியாக இருப்பார்கள். ஏன் இப்படி எதிர்மறை யாகவே பேசி, இருப்பவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துகிறீர்கள்?’ என்று சொல்லிச் சென்றார். ஆம், தோழிகளே... மருத்துவமனையில் எந்தளவுக்கு ஆபத் தான நிலையில் இருந்தாலும், ‘நிச்சயம் குணமாகி விடும்’ என்ற நம்பிக்கையும் வார்த்தைகளுமே நோயாளிக்கு முதல் மருந்து, குடும்பத்தினருக்கு சிறந்த ஆறுதல், சொல்பவர்களுக்கு நல்ல பழக்கம்.

- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி

அனுபவங்கள் ஆயிரம்!

குழந்தை கூறிய உண்மை!

என் அண்ணன் பேத்தி திடீரென மூச்சு விட சிரமப்பட்டாள். மூக்கு சிவந்தும் காணப்பட்டது. வீட்டில் அனைவரும், `மூக்கில் ஏதாவது குச்சி குத்திவிட்டதா? எங்கேயாவது இடித்துக்கொண்டாயா?’ என்று பலமுறை கேட்டும், இல்லை என்று சாதித்துவிட்டாள். பிறகு டாக்டரிடம் அழைத்துச் சென்றபோது அவளாகவே, `டாக்டர் என் மூக்கில் புளியங்கொட்டையை எடுத்து திணித்து விட்டேன். ஆபரேஷன் மட்டும் செய்துவிடாதீர்கள்’ என்று உண்மையைக் கூறினாள். எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சர்யம். வீட்டில் அனைவரும் கேட்டபோது, சொன்னால் திட்டுவார்களோ என்ற பயம் இருந்திருக்கலாம். டாக்டரிடம் சென்றபோது, இவர் எப்படியும் நமக்கு சரிசெய்துவிடுவார் என்ற நம்பிக்கையில் சொல்லியிருக்கலாம். எனவே, இது போன்ற சூழல்களில் குழந்தைகள் வீட்டில் உண்மையை கூறாவிட்டாலும் டாக்டரிடம் கூறிவிடுவார்கள் என்பதால் விரைந்து மருத்துவமனை அழைத்துச் செல்லுங்கள்.

- இந்திராணி தங்கவேல், சென்னை-126

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com