Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

வாய்விட்டு கேட்டார்!
பிரீமியம் ஸ்டோரி
வாய்விட்டு கேட்டார்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

Published:Updated:
வாய்விட்டு கேட்டார்!
பிரீமியம் ஸ்டோரி
வாய்விட்டு கேட்டார்!

இப்படிச் சொல்லலாமா?

என் நண்பர், தன் மனைவி பிள்ளைகளை அறிமுகப் படுத்தினார். அப்போது மூத்த பிள்ளையைக் காட்டி, ‘இவன் பிறந்த பிறகுதான் என் அந்தஸ்து உயர்ந்தது. வீடு கட்டினேன். கார் வாங்கினேன். அதிர்ஷ்டத்தின் உச்சம்’ என்று பெருமை பேசினார். இரண்டாவது பிள்ளையைக் காட்டி, ‘ஆனால் இது பிறந்த பிறகுதான் கஷ்டம் ஆரம்பமானது’ என்றார். அவரின் பேச்சைக் கேட்டதும் அவன் முகம் வாடியது. பிறகு, என் நண்பரை தனியே அழைத்து, ‘குழந்தையை இப்படியெல்லாம் மட்டம் தட்டாதே. அவனுக்குள் ஒரு தாழ்வு மனப்பான் மையை இது உண்டாக்கிவிடும். மேலும் கார், வீடு இரண்டுக்குமே டியூ கட்டும்போது சிரமம் இருக்கத்தான் செய்யும். அகலக்கால் வைத்தது உன்னுடைய தவறு. உன் தவறுக்கு குழந்தையைப் பொறுப்பாக்காதே’ என்றேன். இதுபோல் செய்பவர்கள் திருத்திக்கொள்ளுங்கள்.

- எம்.நிர்மலா, புதுச்சேரி-1

அனுபவங்கள் ஆயிரம்!

வாய்விட்டு கேட்டார்!

தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரின் அண்ணன் மகன், தன் மனைவியுடன் விருந்துக்கு வந்திருந்தார். கிளம்பும்போது அந்த இளம்ஜோடி, தோழியையும், அவள் கணவரையும் தங்கள் வீட்டுக்கு சாப்பிட அழைத்தனர். அப்போது நடந்தது எனக்கு வியப்பை அளித்தது. அந்தப் பெண், `ஆன்ட்டி, உங்களுக்குப் பிடிக்காத, தள்ளுபடியான உணவு பற்றிச் சொல்லுங்க’ என்றாள். தோழி ஏன் எனக் கேட்க, `உதாரணத்துக்கு, தைராய்டு பிரச்னை உள்ளவங்க கோஸ் சாப்பிட மாட்டாங்க. காசிக்கு போய் வந்தவங்க சில காய், பழங்களை விட்டிருப்பாங்க. சிலருக்கு சில காய்கள் பிடிக்காது. அப்படி, உங்களுக்கு ஒவ்வாத உணவை நான் என் சமையல்ல தவிர்த்து, பிடிச்சதை சமைக்கலாம்ல, அதான் கேட்டேன். வாய்விட்டு பேசினா இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்கலாமே’ என்றார். சூப்பர் ஐடியா, அன்பான அணுகுமுறை. அவர் வாய்விட்டுப் பேசியதற்கு மனம் திறந்து பாராட்டினோம் நானும் தோழியும்!

- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

அனுபவங்கள் ஆயிரம்!

டிரைவர் காட்டிய அக்கறை!

திங்கள்கிழமை காலை... பரபரப்பான சென்னை. தி.நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் செல்லும் எம்-27 பேருந்தில், விருகம்பாக்கத்தில் ஏறினேன். அது பள்ளிக்கூட நேரமென்பதால், மாணவ - மாணவிகள் நிறையவே ஏறினார்கள். அந்தப் பேருந்தில் கட்டணமில்லா பயண அட்டை வைத்திருக் கும் அரசுப் பள்ளி மாணவர்கள்தாம் அதிகம். நிறுத்த மில்லாத இடங்களிலும் கைகளில் தெர்மாகோல் கலைப்பொருள்களுடன் கைநீட்டிய மாணவ-மாணவி களையும் நிறுத்தி நிறுத்தி ஏற்றிக்கொண்டார் டிரைவர். கோயம்பேட்டில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்துக்கு கீழே ‘யு டர்ன்’ அடிக்கும் இடத்தில் நிறுத்தி அனைத்து மாணவ-மாணவிகளையும் இறக்கிவிட்டார். அது பேருந்து நிறுத்தம் கிடையாது. அங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டருக்கும் மேலான தூரத்தில்தான் பேருந்து நிறுத்தம். அனைவரும் இறங்கிவிட்டதை உறுதி செய்துகொண்ட பிறகே வண்டியை எடுத்தார். டிரைவரின் இந்தச் செயல்களுக்கு கண்டக்டர் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை.

பொதுவாக, நிறுத்தங்களில் கைகாட்டினாலே பல டிரைவர்கள் நிறுத்துவதில்லை. அதிலும் அரசுப் பள்ளி மாணவ - மாணவிகள் என்றால், ‘ஓசி டிக்கெட்’ என்று திட்டித்தீர்ப்பதுடன், பேருந்தை நிறுத்தாமலும் செல்வதுதான் நடக்கும். ஆனால், ‘இந்த டிரைவர் இத்தனை அக்கறையோடு செயல்படுகிறாரே!’ என்றபடியே கோயம்பேடு பேருந்து நிலையத் துக்குள் பேருந்து நுழைந்ததும் டிரைவரிடம் சென்றேன்.

அனுபவங்கள் ஆயிரம்!

‘`பாவம் இந்தப் பசங்க. எல்லா பஸ்ஸும் கூட்டமாத்தான் வரும். பீக் ஹவர்ல ஏறுவதற்குச் சிரமப்படுவாங்க. ஸ்கூல் போக லேட்டாயிடும். அதுமட்டுமல்லாம, நான் பஸ் ஸ்டாண்டுல வந்து இறக்கிவிட்டா, ரொம்ப தூரம் நடக்கணும். படிக்கற புள்ளைங்க பாவம்’’ என்று அக்கறை பொங்கச் சொன்னார். மிகவும் இளைஞராக இருந்த அந்த டிரைவருக்கு, வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து விடை பெற்றேன்!

- எம்.டி.உமா, சென்னை-92

அனுபவங்கள் ஆயிரம்!

விளம்பர பேப்பர்களை என்ன செய்யலாம்?

தினசரி நாளிதழ்களோடு தினமும் ஏதாவது விளம்பர பேப்பர்கள் தரப்படுகின்றன. இதை என் கணவர் உடனே சுருட்டி குப்பையில் போட்டுவிடுவார். ஆனால், அந்த பேப்பர்களில் ஒருபக்கம் ஒன்றும் எழுதப்படாமல் வெள்ளையாக இருக்கும் என்பதால் அவற்றை நான் பத்திரப்படுத்தி ஸ்டேப்ளர் பின் போட்டு வைத்திருப்பேன். கடைக்கு சாமான் வாங்க லிஸ்ட் எழுதுவது, திடீரென்று ஏதாவது குறிப்பெடுப்பது, பத்திரிகைகளுக்கு எழுதுவதற்கு முன் எழுதிப் பார்ப்பது என அவற்றைப் பயன்படுத்திக்கொள்வேன். அதைப் பார்த்த பின்பு, என் கணவர் இப்போது அவற்றை குப்பையில் போடுவதில்லை, பின் போட்டு வைக்கிறார்.

- ஜி.இந்திரா, திருச்சி-6

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com