லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

தலைமுறை பாடம்!

பேரன்கள் இருவரும் பால் பருகிக் கொண்டிருந்தார்கள். சிறியவன் பாலை சிந்திவிட்டான். உடனே, துடைக்கும் துணியைக் கொண்டு வந்து துடைத்துவிட்டு என்னிடம் வந்து, ’கோமதி ஆச்சி... பால் கொட்டிடுச்சு, நான் துடைச்சுட்டேன்’ என்றான். நான் அவனிடம், ’நீ கொட்டுன பாலை நீதானே துடைக்கணும்’ என்றவுடன், அவன் முகம் சிறுத்துவிட்டது. அருகில் இருந்த அவன் அத்தை, ’ஆன்ட்டி... நீங்க சொல்றது சரிதான். ஆனா பசங்ககிட்ட, ’க்ளீன் பண்ணிட்டியா, அஜய் குட் பாய்’னு பாராட்டினா, செய்த தவற்றை குழந்தைகள் திருத்திக்கும் போது சந்தோஷமா செய்வாங்க. அதை தண்டனை மாதிரி உணர வெச்சோம்னா, கடமையா செய்வாங்க. காலப்போக்குல சலிப்பாவும் மாறலாம்’ என்று புரியவைத்தார். எங்களைப் போன்ற மூத்த தலை முறையினருக்கு இதுபோன்ற சில தலைமுறைப் பாடங்கள் அவசியம் என்று புரிந்துகொண்டேன்.

- என்.கோமதி, திருநெல்வேலி-7

அனுபவங்கள் ஆயிரம்!

ரேஷன் கார்டை கொடுப்பவரா நீங்கள்?!

நண்பர் தனது ரேஷன் கார்டில் பொருள்கள் வாங்கும் வழக்கம் இல்லாதவர். எனவே, பக்கத்து வீட்டுக்காரர் நண்பர் கார்டுக்கான சர்க்கரை, மற்ற பொருள்களை எல்லாம் வாங்கிப் பயன்படுத்த, தன் கார்டை கொடுத்திருந்தார். அதனால் கார்டு, அவர்கள் வீட்டிலேயே இருந்துள்ளது. நண்பருக்கு ஓர் ஆவண சான்றுக்காக ரேஷன் கார்டு தேவைப்பட, பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டபோது, ’கடையிலேயே விட்டுட்டோம், அடுத்த முறை போகும்போது வாங்கிட்டு வர்றோம்’, ‘வீட்டுல எங்கயோ வெச்சோம், காணோம், தேடிட்டு இருக்கோம்’ என்று இரண்டு வாரங்களாக விதவிதமான பதில்கள் வந்தன. நண்பர், ’காணோம்னா வாங்க போலீஸ்ல புகார் கொடுப்போம்’ என்று கடுமை காட்ட, கார்டை அடகுவைத்து பணம் பெற்றிருந்ததையும், கார்டை மீட்க முடியாத நிலையில் இருப்பதையும் அந்த வீட்டுப் பெண் அழுகையுடன் தெரிவித்தார். ரேஷன் கார்டை இப்படி பொறுப்பில்லாமல் பிறர் கையில் கொடுத்துவைத்த தன் தவற்றை உணர்ந்த நண்பர், தானே அவர் கடனை அடைத்து கார்டை மீட்டார். நண்பரை போல, பிறர் பொருள்கள் வாங்க தங்கள் ரேஷன் கார்டை கொடுக்கும் பழக்கம் உள்ளவர்கள், உடனடியாக அதை மீண்டும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

- ஸ்ரீமல்லிகா குரு, சென்னை-33

***

அனுபவங்கள் ஆயிரம்!

மாமியார் - மருமகள் ஒற்றுமைக்கு இப்படியும் ஒரு வழி!

என் உறவினர் பெண் ஒரு நல்ல நிறுவனத்தில் சிறப்பான வேலையில் இருக்கிறார். அவர், தன் அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங், அல்லது ஏதேனும் விசேஷத்துக்கு செல்லும்போதெல்லாம், தன் மாமியாரிடம், ‘இன்னிக்கு எந்தப் புடவை கட்டலாம் அத்தை?’ என்று கேட்கிறார் அல்லது ‘இன்னிக்கு இந்தப் புடவை கட்டிட்டுப் போகலாமா அத்தை?’ என்று கேட்கிறார். இப்படியாக, மாமியாரும் மருமகளுமாக சேர்ந்து பேசி, ஒரு புடவையை முடிவு செய்கிறார்கள். அதை அணிந்துகொண்ட பின்னர் ‘நல்லாயிருக்கா அத்தை?’ என்று மருமகள் கேட்க, ‘அம்சமா இருக்கு’ என்று மாமியார் சொல்லி அவரை வழியனுப்பிவைக்க என... ஏதோ கதையில் வரும் காட்சிகள் போல இதையெல்லாம் பார்த்து வியந்துவிட்டேன். அதற்கான காரணத்தை மருமகள் சொன்னபோது, வியப்புடன் பாராட்டும் சேர்ந்துகொண்டது. ‘நம்ம அம்மா, மாமியார் வயசுப் பெண்கள் எல்லாம் நம்ம தலைமுறை மாதிரி ஆபீஸ், விசேஷம்னு நல்லா டிரஸ் பண்ணிட்டுப் போற வாய்ப்புகள் கிடைக்காதவங்க. அதனால, நாம இப்போ இப்படி கிளம்பும்போதெல்லாம் அவங்க மனசுல சின்னதா ஒரு ஏக்கம் வரலாம். அதுவே அவங்ககிட்ட இப்படி கேட்டு உடுத்தும்போது, நாம அனுபவிக்காததை எல்லாம் இந்தத் தலைமுறைப் பெண்கள் அனுபவிக் கட்டும்னு, முகம் மலர்ந்து அனுப்பி வைப்பாங்க. இந்தப் பழக்கம், எங்க ஒற்றுமையையும் இன்னும் பலப்படுத்துது’ என்றார். வாவ்!

- இந்திராணி தங்கவேல், சென்னை-126

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com