Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

பிரீமியம் ஸ்டோரி
அனுபவங்கள் ஆயிரம்!

முதலாளியின் மனைவி தரும் தைரியம்!

நான் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தபோது, நிறைய ஆண்களுடன் பணிபுரிய வேண்டிய சூழல் ஒருவித பயத்தைத் தந்தது. ஆனால், அவர்கள் அனைவரும் உடன் பணிபுரியும் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொண்டனர். விசாரித்தபோது, தொழிற்சாலை முதலாளியின் மனைவி அவ்வப்போது தொழிற்சாலைக்கு வந்து அலுவலகப் பணியாளர் முதல் தூய்மைப் பணியாளர் வரை எல்லா பெண்களிடமும் இயல்பாகப் பேசி, குறை நிறைகள் கேட்பார் என்பது தெரியவந்தது. பாலியல் தொல்லை பற்றித் தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஆணை எச்சரிப்பது முதல் வேலையை விட்டு நீக்குவது வரை அதிரடி நடவடிக்கை எடுப்பாராம். புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த என்னையும் வாழ்த்திய அவர், தன் மொபைல் நம்பரை கொடுத்து ஏதாவது பிரச்னை என்றால் தெரிவிக்கச் சொன்னபோது மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்... ‘சல்யூட் மேம்’! - பி.லதா, சேலம்-3

இருசக்கர வாகனத்தைஎடுக்கும் முன்!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் என் மகன், முழு ஆண்டுத் தேர்வு எழுதுவதற்காக இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். வழியில் திடீரென பெட்ரோல் காலியாகி வண்டி நின்றுவிட்டது. கையில் பர்ஸும் எடுத்துவரவில்லை. பதற்றமாக நின்று கொண்டிருந்த எங்களை, அந்த வழியாக வந்த பக்கத்து வீட்டுப் பெண் கவனித்து வண்டியை நிறுத்தினார். பிறகு, என் மகனை பள்ளியில் கொண்டு சென்றுவிட்டு, ஒரு பாட்டிலில் பெட்ரோலுடன் திரும்பி வந்தார். அவரிடம் பணத்தையும், நிறைய நன்றியையும் சேர்ப்பித்தேன். அன்றிலிருந்து வெளியில் எங்கு சென்றாலும் கையில் பர்ஸை எடுத்துக்கொள்ளவும், வண்டியில் பெட்ரோல் செக் செய்யவும் தவறுவதே இல்லை. - @Sujamouli

அனுபவங்கள் ஆயிரம்!

குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள்!

திருச்சியிலிருந்து பல்லவன் எக்ஸ் பிரஸில் பயணித்தபோது, பக்கத்து இருக்கையில் ஒரு பெண் தன் குழந்தை யிடம் அம்மா பெயர், அப்பா பெயர், இருவரது அலைபேசி எண்கள், அலுவலகப் பெயர்கள் என ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தார். நான் கவனிப்பதைப் புரிந்து கொண்டவர், ‘ஊருக்குப் போறோம், குழந்தை எங்கேயாவது வழி தவறிட்டா இதெல்லாம் சொல்லத் தெரியணும்ல அதான்’ என்றார். நல்ல பழக்கம்! - அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

அனுபவங்கள் ஆயிரம்!

பந்தியில் ஒரு நல்ல முயற்சி!

மூன்று வருடங்களுக்கு முன் மதுரையில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தோம். பந்தியில் இனிப்பு, காரம் போன்றவற்றை மட்டும் தனித் தனியே சிறு பேப்பர் பைகளில் இட்டுப் பரிமாறினார்கள். பல உணவு வகைகளும் பரிமாறப் படும்போது பந்தியில் அவற்றைச் சாப்பிட முடியாதவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வசதியாக இருந்தது. சமையல் கான்ட்ராக்டரைப் பார்த்து பாராட்டிவிட்டு வந்தோம். நம் வீட்டு விசேஷங்களிலும் பின்பற்றலாமே?! - கே.சீதாலட்சுமி, சென்னை-103

அனுபவங்கள் ஆயிரம்!

சேர்த்துவைத்த தண்ணீர்!

எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் தண்ணீர் மோட்டார் போட்டதை மறந்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். அவர் மனைவி, பிள்ளைகளும் வேலைக்குச் சென்றிருந்தனர். டேங்க் ஓவர்ஃப்ளோ ஆகி தெரு வரை தண்ணீர் ஓட ஆரம்பிக்க, அதைப் பார்த்த எதிர்வீட்டுப் பையன் என்னிடம் வந்து விவரம் சொல்லி அவர் மொபைல் எண் கேட்க, நான் உட்பட யாரிடமும் அவர் எண் இல்லை. பின்னர் எதிர்வீட்டுப் பையன் அவர் பணிபுரியும் அலுவலக எண்ணை நெட்டிலிருந்து எடுத்து, அங்கு அவரது அலைபேசி எண்ணை பெற்று அவருக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, அவசரமாக வீடு திரும்பியவர் வந்து மோட் டார் ஸ்விட்ச்சை அணைத்தார். அந்த அனுபவத் தில் அவர் அசோசியேஷன் ஆரம்பித்து, அனைவரது போன் நம்பரையும் ஒரு புத்தகமாகப் போட்டு அனைவருக்கும் கொடுத்து, மாதம் ஒருமுறை பார்க்கில் சந்தித்து என்று தெருவாசிகளை வழக்கப் படுத்தினார். உறவினர்கள் தூரத்தில் இருப்பார்கள், நண்பர்கள்தான் அருகில் இருப்பார்கள் அல்லவா?! - எஸ்.ராஜகுமாரி, சென்னை-125

சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக்காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி:
அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன்,757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி:avalvikatan@vikatan.comஉங்களது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு