Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் ஆயிரம்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அனுபவங்கள் ஆயிரம்!

விளக்கு... விரட்டி!

தோழி வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அகல் விளக்கு ஏற்றிக்கொண்டிருந்தார். ‘கார்த்திகை தீபம் முடிந்துவிட்டதே...’ என்றேன். ‘மாலை நேரத்தில் கொசுக்கள் அதிகமாக வர ஆரம்பிக்கும். ஒரு சாதாரண அகல் விளக்கில் வேப்ப எண்ணெயை ஊற்றி அதில் இரண்டு பூண்டுப் பற்களை நன்றாக நசுக்கிப் போட்டு விளக்கேற்றினால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். இது நமது ஆரோக்கியத்துக்கு எந்தக் கெடுதலும் விளைவிக்காத இயற்கையான கொசு விரட்டி’ என்றார். டிப்ஸை நீங்களும் குறித்துக்கொள்ளலாமே..!

- ம.அக்ஷயா, அரூர்

கையெழுத்துக் கடிதம்!

நான் கல்லூரி இறுதி ஆண்டு படித்த போது, புது வருடத் தீர்மானமாக நாங்கள், பிறந்த நாள் வாழ்த்தை மெசேஜ், ஃபார்வேர்டு கார்டுகள், கிஃப்ட்டுகள் என்றில்லாமல் கைப்படவே எழுதி அனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதை அனைவரும் இன்றுவரை பின்பற்றுகிறோம். அதன்படி என் தோழி எனது பிறந்தநாளுக்கு, என்னுடனான இனிய தருணங்களை எழுதி அனுப்பிய வாழ்த்து மடலை பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன். இதுபோல் நானும் பலருக்கும் அனுப்பியுள்ளேன். கால ஓட்டத்தில் தனிமையில் இருக்கும் போது, அப்படி என் தோழிகள் எனக்கெழுதிய வாழ்த்துக் கடிதங்களை எடுத்துப் படிக்கும் போது அந்தக் கையெழுத்தில் மலர்கின்றன நூறு நினைவுகள். நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு எழுதலாமே..!

- இந்துமதி.ஜி, சென்னை-18

அனுபவங்கள் ஆயிரம்!

பாட்டியின் ஐடியா!

என் தோழி, தன் பேத்தியை நூலகத்துக்குள் அழைத்துச் செல்வதைப் பார்த்து வியந்துபோய் அவளிடம் பேசினேன். ‘`தியேட்டர், ஹோட்டல், மால்னு பிள்ளைகளை அழைச்சுட்டுப் போற இந்தக்கால பெற்றோர், நூலகத்துக்கும் குழந்தைகளை அழைச் சுட்டுப் போகலாம்கிறத மறந்துட்டாங்க. உண்மையில், வளரும் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த அதைவிடச் சிறந்த இடம் இல்ல. மொபைல் மாதிரி கண்ணுக்குப் பிரச்னை தராத, கண்ட கண்ட லிங்க் எல்லாம் ஓப்பன் ஆகாத உணர்வுபூர்வமான, பாதுகாப்பான வாசிப்பனு பவத்தை நூலகத்துல இருந்துதான் பிள்ளைகளுக்கு ஆரம்பிக்கணும்'' என்றாள். உண்மைதானே..!

- எம்.ஏ.அமுதா, திருச்சி-15

ஜெராக்ஸ்... உஷார்!

நண்பரின் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். சென்னையில் இருந்து ஒருவர் போன் செய்து, ‘உங்கள் மகளின் ஜாதகம் எங்களுக்கு வந்திருக்கிறது, பொருத்தம் உள்ளது, போட்டோ வாட்ஸ்அப்பில் அனுப்புகிறீர்களா, பேச லாமா?’ என்றார். ஆனால், உறவினர் ஒருவரைத் தவிர நாங்கள் வெளியில் யாரிடமும் ஜாதகம் கொடுக்கவில்லை என்பதால், நண்பர் குழப்ப மானார். ஜாதகத்தை நகல் எடுத்த கடையில் விசாரித்தபோது, ‘`நகல் சரியா காப்பி ஆகாத வேஸ்ட்டை எல்லாம் நாங்க பழைய பேப்பர் காரர்கிட்ட போடுவோம். சில புரோக்கர்கள் அதுலயிருந்து ஆதார், பான் (PAN) போன்ற ஆவணங்களை பணம் கொடுத்து வாங்கிக்கு வாங்களாம். அங்கிருந்து உங்க பொண்ணு ஜாதகம் போயிருக்கலாம்'' என்றார் ஊழியர். ஜெராக்ஸ் கடை முதலாளியை அந்தப் பழக்கத்தை கைவிடச் சொல்லி எச்சரித்துவிட்டு, நண்பரிடமும் நம் தகவல்கள் அடங்கிய பேப்பர்களை எங்கேயும் விட்டு வர வேண்டாம் என்று வலியுறுத்தினேன். இப்போது உங்களிடமும்!

- கவிபாலா, சிதம்பரம்

அனுபவங்கள் ஆயிரம்!

ரயிலில் டிக்கெட்முன்பதிவு செய்யும்போது...

இரவு 2 மணி ரயிலுக்கு டிக்கெட் முன் பதிவு செய்திருந்தோம். ரயிலில் ஏறிய போது எங்கள் இருக்கையில் ஏற்கெனவே சிலர் உறங்கிக்கொண்டிருந்தனர். டிக்கெட் பரிசோதகரிடம் சென்று பயணச் சீட்டைக் காட்டினோம். ‘ரயில்வே நேர அட்டவணைப்படி நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு, அடுத்த தேதி ஆரம்பித்துவிடும். நீங்கள் புக் செய்திருப்பது 3-ம் தேதி டிரெயின், அதாவது நேற்றைய டிரெயின். இன்றைய டிரெயினுக்கு நீங்கள் 4-ம் தேதியில் புக் செய்திருக்க வேண்டும். இரவு 12 மணியில் இருந்து காலை 6 மணி வரை உள்ள ரயில்களில் டிக்கெட் புக் செய்யும்போது தேதி, நேரத்தை நன்றாகக் கவனித்து புக் செய்ய வேண்டும்’ என்று விளக்கினார். வேறு வழியின்றி அடுத்த ஸ்டேஷனில் இறங்கினோம்.

- பழனீஸ்வரி தினகரன், சென்னை-129