Published:Updated:

அனுபவங்கள் ஆயிரம்!

அனுபவங்கள் ஆயிரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் ஆயிரம்!

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

கைக்குழந்தை அழுதால்..!

ஊரில் கோயில் திருவிழா. வீட்டிலிருந்து கோயில் அருகில்தான் என்பதால் நடந்தே கிளம்பினோம். அப்போது என் கொழுந்தன் மனைவி தன் ஆறு மாதக் குழந்தையைத் தோளில் போட்டவாறு நடந்து வந்தார். திடீரென குழந்தை வீறிட்டு அழுதது. தூக்கத்தில் இருந்து எழுந்ததால் அழுகிறது என்று நினைத்தோம். தோளில் போட்டவாறு தட்டிக் கொடுத்தபடி வந்தார் கொழுந்தன் மனைவி. ஆனால், அழுகை கூடிக் கொண்டே போக, குழந்தையை நான் கைமாற்றிக் கொண்டேன். சிறிது நேரத்தில் என் தோளில் தூங்கிவிட்டது. கோயிலுக்குச் சென்ற பின்னர், வெளிச்சத்தில் பார்த்தபோது குழந்தையின் கன்னங்களில் கீறல்களாக ரத்தக் காயம். அப்போதுதான் புரிந்தது, கொழுந்தன் மனைவி தன் புடவையையும் ஜாக் கெட்டையும் சேர்த்துப் போட்டிருந்த சேஃப்டி பின் கழன்றுகொண்டு, குழந்தையின் கன்னத்தைப் பதம் பார்த்துவிட்டது என்பது. பதறிப்போய் தேங்காய் எண்ணெய், ஆயின்மென்ட் எல்லாம் வைக்க சரியானது. கைக்குழந்தைகள் அழுதால் பசி, தூக்கம் என்றே முடிவுக்கு வராமல் கவனித்துப் பார்க்க வேண்டும்.

- பி.திலகவதி, சின்ன திருப்பதி, சேலம்

அனுபவங்கள் ஆயிரம்!

அந்தரங்கம் ஆபத்தில்!

மொபைல், லேப்டாப், டேப் போன்றவற்றை சர்வீஸ் சென்டரில் கொடுக்கும்போது, பாஸ்வேர்டு உள்ளிட்ட நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற அந்தரங்க மான விஷயங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை அப்படி நடந்தால், பிளாக்மெயிலுக்கு ஆளாவது, கடுமையான மன உளைச்சல், குடும்ப உறவுகள் சிதைவது என ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அந்தரங்கத் தகவல் திருட்டால், விவாகரத்து, தற்கொலை வரை சில குடும்பங்கள் நாசமாகியுள்ளன. எனவே மொபைல், லேப்டாப், டேப் போன்றவற்றில் உள்ள தகவல்கள், போட்டோக்கள், வீடியோக்கள், ஆடியோ மெசேஜ்கள் என அனைத்தையும் மெமரி கார்டில் பதிவு செய்து தனியே எடுத்துக்கொண்டு, ரீபூட் செய்துவிட்டே சர்வீஸ் சென்டரில் கொடுப்பது பாதுகாப்பானது. மேலும், அவற்றை சர்வீஸ் சென்டரில் இருந்து திரும்பப் பெறும்போது நன்றாக ஆராய்ந்து பார்த்து Any Desk போன்ற புதிய செயலிகள் ஏதாவது இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதை அன் இன்ஸ்டால் செய்துவிட வேண்டும். இந்த விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.

- என்.லதா, சென்னை-125

அனுபவங்கள் ஆயிரம்!

வலியுடன் விளையாடாதீர்கள்!

சமீபத்தில் என் தோழியின் கணவர் கொரோனாவால் இறந்துவிட்டார். உறவு இழப்பு, குடும்பத்தின் வருமானம் திடீரென நின்றுபோனது எனத் துயரமான சூழ்நிலை. அந்த நேரத்தில் வாட்ஸ்அப்பிலும் முகநூலிலும், கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு 20,000 ரூபாய் நிதி உதவி தருகிறார்கள் என்று ஒரு விலாசத்தைக் குறிப்பிட்டு ஒரு மெசேஜ் உலா வந்தது. அதைப் பார்த்த என் தோழி, மிகவும் சிரமப்பட்டு அந்த இடத்தைக் கண்டுபிடித்துச் சென்றார். ஆனால், அப்படி எந்த உதவித் தொகையும் அங்கு வழங்கப் படவில்லை. அது ஒரு போலி ஃபார்வேர்டு என்பது தெரியவர, நொந்துபோனாள். ‘இப்படி தினம் ரெண்டு, மூணு பேரு இங்க வந்து விசாரிச்சுட்டுப் போறாங்க’ என்று அந்த விலாசத்தில் இருந்தவர்களும் வருந்தியுள்ளார்கள். பொழுது போகாமல் போலி ஃபார்வேர்டுகளை எழுதுபவர்கள், மனிதர்களின் வலியுடன் விளையாடாதீர்கள்.

- டி.நிர்மலா தேவி, மதுரை-2

அனுபவங்கள் ஆயிரம்!

தில்லாலங்கடி வியாபாரம்!

தெருவோர கைவண்டியில் பழங்கள் வாங்கியபோது, நல்ல பக்குவத்தில் இருந்த பெரிய பெரிய பழங்களை நாங்களே பொறுக்கி எடை போடக் கொடுத்தோம். வீட்டுக்கு வந்து பார்த்தால், ஆறு ஆப்பிளில் ஒன்று சுருங்கியிருந்தது, ஆறு கொய்யாவில் இரண்டு மிகவும் கனிந்து அழுகி விடுவது போல இருந்தது. ஆனால், நல்ல பழங்களாகத்தானே பொறுக்கி எடுத்தோம் என்று குழம்பிப்போனோம். மறுநாள் அதே கடை வழியாகச் சென்றபோது, அந்தப் பையனின் வியாபாரத்தை தொலைவில் இருந்து கவனித்தோம். வாடிக்கையாளர்கள் பொறுக்கித் தரும் பழங்களை கண் முன்னே எடை போட்டாலும், கவரில் போட்டுத் தரும்போது அவன் ஏற்கெனவே போட்டு வைத்துள்ள கவரை மாற்றித் தந்துகொண்டிருந்தான். ரோட்டோரக் கடைகளில் இருந்து தள்ளுவண்டிகள் வரை எத்தனையோ குறு வியாபாரிகள் நேர்மையும் வியர்வையுமாக உழைக்க, சிலரின் இதுபோன்ற செயல்பாடுகள் வருத்தப்பட வைக்கிறது.

- ஆர்.அனுராதா ரவீந்திரன், ஸ்ரீரங்கம்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை எழுதி அனுப்புங்கள்... பிரசுரமாகும் அனுபவங்களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த அனுபவத்துக்குச் சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அனுபவங்கள் ஆயிரம், அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com