Published:Updated:

குழந்தையின் விரலைக் காப்பாற்றிய அவள் விகடன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`கோல்டன் ஹவர்... உயிர்காக்கும் உன்னத நிமிடங்கள்'
`கோல்டன் ஹவர்... உயிர்காக்கும் உன்னத நிமிடங்கள்'

24ம் ஆண்டு கொண்டாட்டம்!

பிரீமியம் ஸ்டோரி

‘சர்ப்ரைஸ்’ பரிசு... குக்கர்

`கோல்டன் ஹவர்... உயிர்காக்கும் உன்னத நிமிடங்கள்' என்ற தலைப்பில் மிக மிக முக்கியமான, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தியைப்

பல ஆண்டுகளுக்கு முன் 9.9.2014 தேதி யிட்ட அவள் விகடனில் படித்தேன். அந்தக் கட்டுரை என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

சில வருடங்களுக்கு முன்பு எங்கள் பக்கத்து வீட்டுக் குழந்தை, ஓடிக் கொண்டிருந்த டேபிள் ஃபேனில் கையை விட்டு விரல் துண்டாகிவிட்டது.

அந்தக் குழந்தையின் இளம் பெற்றோர் என்ன செய்வது எனப் புரியாமல் அலற, விஷயத்தைக் கேள்விப்பட்ட நான், உடனே அவள் விகடனில் படித்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடி என் வீட்டு ஃப்ரிட்ஜில் இருந்து ஐஸ்கட்டிகளை வேகமாக எடுத்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டுக் கொண்டு பக்கத்து வீட்டுக்கு விரைந்தேன்.

குழந்தையின் விரலைக் 
காப்பாற்றிய அவள் விகடன்!

அங்கு துண்டான விரலை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு கட்டி, அதை ஐஸ்கட்டிகள் இருந்த டப்பாவில் வைத்து, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவ மனையில் சேர்ந்தேன். உடனே குழந்தையின் துண்டான விரல் அறுவைசிகிச்சை மூலம் இணைக்கப்பட்டது.

அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்க கைகூப்பி எனக்கு நன்றி கூறினர்.

இதற்கு காரணம், அவள் விகடன் கட்டுரை. அதுவே பிஞ்சுக் குழந்தையின் விரலைக் காப்பாற்றியது.

பி.அமுதா, சேலம்-4

குழந்தையின் விரலைக் 
காப்பாற்றிய அவள் விகடன்!

பரிசு ரூ.250

தைரியத்தைத் தந்தவள்!

2019-ம் வருடம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை பற்றி எல்லா இடங்களிலும் ஊடகங்களிலும் பேசியபோது எனக் கும், என் தோழிக்கும் ஒரு பயமும் பதற்றமும் வந்தது. ஏனெனில், எங்கள் இருவரின் பெண்களும் வெளி

யூரில் படித்துக் கொண்டு இருந்தனர். தினமும் பேசிக் கொண்டு இருந்தாலும், அவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வைத் தர வேண்டுமே என நினைத்த நேரத்தில், 2.4.19 அவள் விகடனில் பெண்கள் பாதுகாப்புக்கு என்ன வழி என்ற கட்டுரையில் மனநல ஆலோசகர் ஷாலினி, வனிதா ஐ.பி.எஸ், டிடெக்டிவ் யாஸ்மின் போன்ற நிபுணர்கள் அருமையான கருத்துகளையும், யோசனைகளையும் கூறியதைப் படித்ததும் மனதில் தைரியம் வந்தது எங்களுக்கு.

அதுவும் வனிதா மேம், ‘நாங்களும் உங்களுக்கு அம்மாதான். அக்காதான்.

24 மணிநேரமும் பேசலாம்' என்ற வரிகளைப் படித்ததும் காவல்துறை எவ்வளவு உதவியாக உள்ளது என்ற உண்மையைப் புரிந்துகொண்டதோடு அதை எங்கள் நட்புவட்டம், கல்லூரி மாணவிகளுக்கும் எடுத்துக் கூறினோம் அந்த நேரத்தில்.

தக்க சமயத்தில் எங்களுக்கு மனதைரியத்தையும், நல்லதொரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் இன்றுவரை பாதுகாக்கிறேன் அந்த இதழை..!

- பானு பெரியதம்பி, சேலம்-30

குழந்தையின் விரலைக் 
காப்பாற்றிய அவள் விகடன்!

பரிசு ரூ.250

நானும் அவளும்!

நான் 1996-ம் ஆண்டு திருமணமாகி சென்னைக்கு வந்தேன். 1998-ம் வருடம் விவிஎஸ் இதயம் நல்லெண்ணெய் நடத்திய போட்டியில் எனக்கு பரிசாக அவள் விகடன் ஒரு வருடத்துக்கு என் வீட்டுக்கு வந்தது. அவள் இதழில் செட்டிநாடு அரண்மனையின் சமையற்கலைஞர் வழங்கிய செட்டிநாடு சமையல் கல்கண்டு வடை, கும்மாயம், சீப்பு சீடை, வெள்ளைப்பணியாரம் என விதவிதமாக ஒவ்வோர் இதழிலும் ரெசிப்பி படத்துடன் இருக்கும். அதை என் கணவருக்கு செய்து கொடுப்பேன். கும்மாயம் என் உறவினருக்கு செய்து கொடுத்தேன், மிகவும் பாராட்டினர்.

என் கணவர் அலுவலகத்தில் இருந்து வர இரவு ஒன்பது மணி ஆகும். தனியாக இருந்த எனக்கு உற்ற தோழியா னாள் அவள். என் அடுத்த திருமண நாளில் என் கணவர் எனக்கு அன்பு பரிசாக கொடுத்தது அவள் விகடன் சந்தா. தொடர்ந்து அவள் விகடனின் சந்தா தாரராக இருந்து வருகிறேன். அபார மாக வளர்ந்து இருக்கிறாள் அவள். ஒவ்வோர் இதழிலும் புதுமையைப் புகுத்துவதில் அவளுக்கு நிகர் அவள்தான். அவள் விகடன் படிக்க படிக்க திகட்டாத இதழ். ஒவ்வோர் இதழ் சப்ளிமென்டிலும் வாசகிகள் விரும்பும் 30 வகை சமையல், நகை, சீட்டு, உடல் ஆரோக்கியம் எனச் சகல விஷயங்களையும் கற்றுக்கொடுத்திருக்கிறது. எத்தனையோ பேர் இதனால் தொழில்முனைவோர் ஆகி இருக்கின்றனர்.

நான் இப்போது சிறிதாகக் கடை வைத்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம், அவள் விகடன்தான். 2012-ல் தேவிபாலா எழுதிய `துர்கா' தொடரில் எனக்கு குக்கர் பரிசு கிடைத்தது. ஹோட்டல் கிரீன் பார்க்கில் ரியாலிட்டி ஷோ பற்றிய கருத்தரங்கில் நான் கலந்துகொண்டேன் அதில் ஒரு சிறப்பு என்னவென்றால் நான் கார் ஓட்ட கற்றுக்கொண்டு லைசென்ஸ் எடுத்த பின், முதன்முறையாக காரை நானே ஓட்டி வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

2013 அக்டோபர் 19-20 தேதிகளில் நடந்த அவள் விகடன் `ஜாலி டே'வில் நான் எழுதிய சிறுகதைக்கு குக்கர் பரிசு கிடைத்தது. `அனுபவங்கள் பேசுகின்றன' பகுதியில் என் அனுபவம் முதன்முறையாக வெளியானபோது நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். அவள் விகடன் புத்தகங்கள் எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி இருந்தேன். 2015-ல் வந்த வெள்ளத்தில் எங்கள் வீட்டுக்குள் தண்ணீர் வந்து பொருள்கள் சேதம் ஆனதில், அவள் விகடனும் நனைந்துவிட்டது.

பெண்கள் எதிலும் சாதிக்கலாம் என்ற உத்வேகத்தையும் இப்போது நான் எழுதுவதற்கு ஊக்கமும் அளித்தது அவள்தான். அவள் புதிர்ப் போட்டியில் பரிசு பெற்றுள்ளேன். அக்டோபர் 18-ம் தேதி எங்களது இருபத்தி ஐந்தாம் திருமண நாளைக் கொண்டாடினோம். 2021 அக்டோபர் 26, அவள் விகடனில் அனுபவங்கள் ஆயிரத்தில் கிடைத்த பரிசை தாய் வீட்டின் சீதனமாக நினைக்கிறேன். 24-ம் ஆண்டுக்குள் நுழையும் அவள் விகடன் தொடர்ந்து பெண்களுக்கு உற்ற தோழியாக விளங்க வாழ்த்துகள்.

- @Subbulakshmi Chandramouli

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு